search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களுக்கு மனதில் உறுதி வேண்டும்
    X

    பெண்களுக்கு மனதில் உறுதி வேண்டும்

    மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும்.
    வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்; விழுப்புண் பெறாமல் போர்க்களத்தில் வெற்றிகாண முடியுமா? வாழ்க்கை என்பது காட்டாறு; எதிர் நீச்சல் போடாமல் காட்டாற்றில் நீந்தி எதிர்க்கரை சேர முடியுமா? விழியில் நீரோட்டமும், வழியில் போராட்டமும் நிறைந்ததுதான் வாழ்க்கைப் பயணம்.

    மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும். மனஉறுதி படைத்தவர் எதிர்ப்பு, ஏளனம், இடையூறுகளை எதிர்த்து முன்னேறிச் செல்கின்றனர்.

    குப்பைக்கழிவுகளை உரமாக்கிக் கொண்டு பூக்கவில்லையா குண்டுமல்லிகள்? காய்க்கவில்லையா கொய்யாக்கனிகள்? வரும் சோதனைகளை உரமாக்கிக்கொண்டு வாழ்கிறவன் வாசலில்தான் தினம் மாலைகள் அவன் கழுத்துக்காக காத்துக்கிடக்கின்றன.

    மன உறுதியை நாள்தோறும் இதயத்தில் விதைத்து வந்தவர்கள், மகத்தான சாதனைகளையே மகசூல் செய்திருக்கிறார்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் என்று எக்காளமிட்டவர்கள் ஆங்கிலேயர்கள். மகாத்மா காந்தியின் மனஉறுதிக்கு முன்னால் அவர்களின் எதேச்சதிகாரம் என்ன ஆனது? இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டு வந்த வழியே திரும்பி ஓடவேண்டியதாயிற்று.



    எதிரியின் கூடாரத்திற்கு உளவறிய சென்றான் நெப்போலியன். பகைவரின் படைகள் அவனை கண்டுபிடித்துவிட வேகமாக குதிரையைச் செலுத்தினான். தப்பிப்பதற்குள் மூன்று திசைகளிலிருந்தும் எதிரியின் படைகள் நெருங்கி வந்தன. நான்காவது திசையை நோக்கினாலோ, ஆழமான பெரும் பள்ளத்தாக்கு. குதிரையால் முழுப்பள்ளத்தையும் தாண்ட முடியாது என்பது நெப்போலியனுக்கே தெரியும்.

    இருந்தும் மனதில் உறுதி இருந்ததால் குதிரையைச் செலுத்தினான் அவன். குதிரை பள்ளத்தாக்கின் முக்கால் பகுதியை தாண்ட அது தவறி விழுவதற்கு முன்பே அக்குதிரை மீது நின்றபடி தாவி எதிர்ப்புற மலைச்சரிவில் குதித்து தப்பித்தான் அம்மாவீரன். எதிரிகளே வியக்கும் வண்ணம் இப்பேற்பட்ட மன உறுதி இருந்ததால்தான், ‘முடியாது என்ற சொல் முட்டாள்களின் அகராதியில்தான்’ என்று சொல்ல முடிந்தது நெப்போலியனால்.

    ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். வெப்பத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் மத்தாப்புக்களால் பிரகாசமாய் ஒளிர்ந்துவிட முடியாது. எனவே எந்த செயலானாலும் சரி, மன உறுதியுடன் அதில் முனைப்புடன் செயல்படுவோம். வெற்றிக்கனி நம் கைகளில் விழும். தோல்விகள் நம் கால்களில் விழும்.

    எழுத்தாளர் எல்.பிரைட்
    Next Story
    ×