search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் மீதான வன்முறை: தீர்வுக்கு வழி என்ன?
    X

    பெண்கள் மீதான வன்முறை: தீர்வுக்கு வழி என்ன?

    பெண் மீதான வன்முறை இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது, அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத பிரச்சினை.
    பெண் மீதான வன்முறையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வந்த தாம்சன் ராயிட்டர்சின் கருத்துக் கணிப்பு முடிவுகள் கிளப்பிய அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை. வேறு சில நிகழ்வுகளால், பரபரப்புகளால் கொஞ்சம் ஓரங்கட்டப்பட்டிருந்தாலும், அந்த கருத்துக் கணிப்பு பற்றிய விவாதங்கள் எங்காவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

    இந்த கருத்துக் கணிப்புக்கு இந்தியாவின் முதல் எதிர்வினை, மறுப்புதான். முதலிடத்தில் இல்லை, கருத்துக் கணிப்பு முறையில் பிரச்சினை என்று பல சாக்கு போக்குகளை இந்திய அரசும் அதன் பிரதிநிதிகளும் சொல்லி வந்ததை ஊடகங்களில் பார்த்தோம். இப்போதும் ஒவ்வொரு நிமிடமும் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்ணை வேறு எப்படியாவது அவமானப்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை.

    பெண் மீதான வன்முறையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறதா? இல்லையா? என்பது பிரச்சினையில்லை. பெண் மீதான வன்முறை இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது, அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத பிரச்சினை.

    ஆனால் எண்ணிக்கையை துறப்பதன் மூலம் தனக்கான பொறுப்பிலிருந்து இந்தியா தன்னை விடுவித்துக் கொள்கிறதோ? என்கிற சந்தேகத்தை இந்த கருத்துக் கணிப்பு குறித்த அதீதமான எதிர்வினைகள் ஏற்படுத்தியிருக்கிறன.

    இந்த கருத்துக் கணிப்பு வெளியான பிறகு நம் கவனத்திற்கு வந்த வன்முறை சம்பவங்களில், மூன்றே மூன்று சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.

    சமீபத்தில் ஜெய்ப்பூர் அருகில் 70 வயது பெண் ஒருவரை 21 வயது ஆண் பாலியல் வல்லுறவு செய்ய முயற்சிக்கும் போது, அந்த பெண் அதை தடுத்திருக்கிறார். அதனால் அவருக்கு காயம் பட்டு, சில நாட்களில் மருத்துவமனையில் இறந்துவிடுகிறார்.

    இது சென்னையில் நடந்தது. பத்து வயது சிறுமியை பாலியல் ரீதியில் சீண்டி துன்புறுத்தியதற்காக 99 வயது நபர் ஒருவர் சமீபத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.



    இந்த துயரம் அடங்குவதற்குள், சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்த 11 வயது சிறுமியை லிப்ட் ஊழியர்கள், காவலாளிகள் என 15-க்கும் மேற்பட்டோர் 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு மேல் இன்னும் என்ன நடக்க வேண்டும்?

    இப்படி, ஒவ்வொரு நிமிடமும் நாம் கேள்விப்படும் எண்ணற்ற வன்முறைகளில் இது மூன்றையும் குறிப்பிட்டுச் சொன்னதற்கு, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் வயதையும், முதல் இரண்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்களின் வயதும் தான் காரணம். அதாவது, எவ்வளவு வயதானாலும் பெண்ணுக்கு பாதுகாப்பும் இல்லை, ஆணுக்கு பொருட்டும் இல்லை.

    இந்த இரண்டு பெண்களில் யாரிடமும் சென்று இந்தியா பெண் மீதான வன்முறையில் முதலிடத்தில் இல்லை, கருத்துக் கணிப்பு முறையில் தவறு இருக்கிறது என்று வகுப்பெடுப்பது எவ்வளவு அபத்தமானதாக, பொறுப்பற்ற செயலாக இருக்கும்? இங்கு வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தியா அந்த அநீதியைத்தான் இழைத்திருக்கிறது.

    இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண் மீதான வன்முறை என்பது அவள் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. பெண் கருக்கொலை இப்போதும் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அதிலிருந்து வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பெண் பாகுபாட்டை சந்திக்க வேண்டியிருக்கிறது.

    கல்வி, தொடர்ந்து வேலைவாய்ப்பு, திருமணம், பதவி உயர்வு போன்ற பல விசயங்களிலும் தொடர்ந்து பாகுபாட்டை சந்திக்கும் பெண்கள் கூடுதலான உழைப்பை செலுத்திதான் ஒவ்வொரு தடையையும் உடைத்தெறிய வேண்டியிருக்கிறது.

    பாகுபாடு என்னும் வன்முறையை ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் மீதும் எந்தவொரு குற்ற உணர்வும் இன்றி இந்திய சமூகம் ஒவ்வொரு நொடியும் ஏவிக்கொண்டிருக்கிறது. இது தவிர, பாலியல் சீண்டல்களையும் வன்முறைகளையும் குடும்பத்திற்குள்ளும், வெளியிடங்களிலும், பொது இடங்களிலும் எதிர்கொள்ளாத பெண்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள் அல்லது மிக குறைவான எண்ணிக்கையில் இருப்பார்கள்.

    பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி, பெண் மீதான வன்முறை என்பது இந்திய சமூகத்தின் ஒரு இயல்பாக இருக்கிறது. சமூக ரீதியாகவே பாகுபாட்டை இந்தியா வளர்த்தெடுக்கிறது. பாகுபாடு, வன்முறைக்கு வழிவகுக்கிறது. நிர்பயா போன்ற மிக மோசமான வன்முறைகளுக்கு ஆளானோருக்கு கிடைக்கும் கவனமும் அழுத்தமும் ஒவ்வொரு நொடியும் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பிற இந்தியப் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதே இங்கு ஆகப்பெரிய அநீதி.

    நிர்பயாவுக்கு கிடைத்த நீதியை குறை சொல்வது இங்கு நோக்கமல்ல; அந்த நீதியின் வெளிச்சம் பிற இந்தியப் பெண்கள் மீதும் கொஞ்சம் படர வேண்டும் என்பதுதான் நோக்கம்.

    இதை எல்லாம் பற்றி நியாயமான கவலை கொள்ளும் ஒரு அரசு, முதலிடமா? மூன்றாம் இடமா? என்பதில் புழுங்காமல் தீர்வு நோக்கி நகர வேண்டும். சமூகத்தின் இயல்பாக மாறியிருக்கும் பாகுபாட்டை கலைக்கும் திட்டத்தை உருவாக்கி அதை எல்லா நிலைகளிலும் அமல்படுத்த வேண்டும். பெண் மீதான வன்முறை சட்டம் மூலமாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்.

    அது வரை பெண் மீதான வன்முறை என்பது இந்திய சமூகத்தின் மீதான தீராத களங்கமாக சர்வதேச அரங்கில் தொடரும். அதை துடைத்தெறிவதற்கான வழி, எண்ணிக்கையில் இல்லை, செயல்பாட்டில் இருக்கிறது.

    ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்
    Next Story
    ×