search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை
    X

    பெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை

    நீங்கள் குண்டாக இருந்தால் அதை நினைத்து வருந்தாதீர்கள். கேலி செய்பவர்களை பார்த்து அலட்சிய சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர்களை பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்றுவிடவேண்டும்.
    ‘பத்து நாட்களில் உடல் எடையை குறைப்பது எப்படி?’ என்பது, இப்போது பெண்கள் அடிக்கடி படிக்க விரும்பும் விஷயமாக இருக்கிறது. சற்று குண்டாக இருக்கும் பெண்கள் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னால் போய் நின்றுகொண்டு, ‘இன்னும் கொஞ்சம் உடல் எடையை குறைக்க சாப்பிடலாமா அல்லது பட்டினிகிடக்கலாமா?’ என்று தினமும் யோசிக்கிறார்கள். சமூகமும் குண்டானவர்களை சற்று கிண்டலாகத்தான் பார்க்கிறது. உண்மையில் சற்று குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை.

    உடல் அளவைப் பொறுத்தவரையில் சினிமா நடிகைகளைப் போன்ற ‘ஜீரோ சைஸ்’ தோற்றத்தை எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள். ஆனால் பேஷன் ஷோக்களில் ‘பிளஸ் சைஸ்’ எனப்படும் பூசி மெழுகினாற் போன்ற உடல்வாகு கொண்ட பெண்களுக்கும் அதிக மவுசு இருக்கிறது.

    பெண்களின் உடல் எடை எவ்வளவு இருக்கவேண்டும் என்பதை கணக்கிடுவது எளிது. உயரத்தை சென்டிமீட்டரில் அளந்து அதில் 100-ஐ கழித்து விட்டால், சரியாக எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்பது தெரிந்துவிடும். 165 செ.மீ. உயரம் கொண்ட பெண்ணின் ஆரோக்கிய எடை 65 கிலோ என்று எடுத்துக்கொள்ளலாம். ‘பாடி மாஸ் இன்டக்ஸ்’ அடிப்படையில் பார்த்தால் 19-க்கும் 25-க்கும் இடையில் இருப்பவர்கள் சரியான எடையுடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம். 18.5-க்கு கீழ் இருப்பவர்கள் போதுமான உடல் எடை இல்லாத ஒல்லிப்பெண்கள். 25 முதல் 30 வரை இருப்பவர்களை பிளஸ் சைஸ் கொண்டவர்கள் என்றும், 30-க்கு மேல் இருப்பவர்களை குண்டானவர்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

    குண்டாக இருப்பவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கத்தான் செய்கின்றன. உடன் இருப்பவர்களே கேலி, கிண்டல் செய்து தன்னம்பிக்கையை குறைப்பார்கள். கோபம் வரும்போது குடும்பத்தில் உள்ளவர்களே உடல் அமைப்பை சுட்டிக்காட்டி வெறுப்பேற்றுவார்கள். அதனால், குண்டானவர்கள் பொது இடங்களுக்கு செல்லாமல் தங்களை தனிமைப்படுத்தியபடி அறைக்குள்ளே முடங்கிக்கொள்வார்கள். அப்படி முடங்குவது அவர்களுக்கு மனஅழுத்தத்தை உருவாக்கி, எதிர்கால முன்னேற்றத்துக்கு தடையை உருவாக்கிவிடும்.

    நீங்கள் குண்டாக இருந்தால் அதை நினைத்து வருந்தாதீர்கள். வருந்தினால் உங்கள் உடலில் கார்டிசால் என்ற மனஅழுத்த ஹார்மோன் அதிகம் சுரந்து, கூடுதலாக உங்களை குண்டாக்கிவிடும். உங்கள் உடல் எடையை எப்போதுமே நீங்கள் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகைகளின் உடலோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஏன்என்றால் சைஸ் ஜீரோ என்பது திறமைக்கான அடையாளம் அல்ல. திறமை வேறு, உடல் அமைப்பு வேறு உண்மையை உணர்ந்து எப்போதும் அதில் விழிப்பாக இருங்கள்.

    உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போதே பட்டினி கிடப்பது, உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகிய மூன்று விஷயங்களும் குண்டாக இருப்பவர்களின் நினைவுக்கு வரும். இதில் சரியான ஆலோசனையை பெற்று, முறையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் உடல் நலம்கெட்டு, மன அழுத்தமும் உருவாகி விடும்.

    உடல் எடை அதிகமாக இருப்பதாக கருதும் பெண்கள் முதலில் தங்கள் வீட்டில், தனது முழு உருவத்தையும் பார்க்கும் விதத்தில் கண்ணாடி ஒன்றை வாங்கிவைக்கவேண்டும். தினமும் காலையில் அதை பார்த்தபடி, ‘நான் என் உடலை நேசிக்கிறேன். நான்தான் இந்த உலகிலே உற்சாகமானவள்’ என்று சொல்லவேண்டும். இது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அதுபோல் உடல்வாகுவை சுட்டிக்காட்டி கேலி செய்பவர்களை புறக்கணிக்கும் அளவுக்கு மனதுணிச்சலையும் உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

    உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பொதுவாகவே தங்களை மற்றவர்களுக்கு மத்தியில் மறைத்துக்கொள்ள விரும்புவார்கள். தூண்களுக்கு பின்பும், சுவர்களுக்கு பின்பும் தங்களை மறைக்க வழிதேடுவார்கள். அதுபோல் தங்கள் உடையை அவ்வப்போது சரிசெய்து கொள்ளவும் முனைப்புகாட்டுவார்கள். அதெல்லாம் சரியான வழிமுறை அல்ல. மற்றவர்கள் முன்னால் தைரியமாக நிமிர்ந்து நடக்கவேண்டும். அங்கும் இங்குமாக மறைய வழி இருக்கிறதா என்று பார்க்கக்கூடாது. அதுபோல் உடை விஷயத்திலும் தெளிவாக இருக்கவேண்டும்.

    தேவையில்லாமல் அவ்வப்போது உடைகளை இழுத்து சரிசெய்யக்கூடாது. இதற்கு தேவையான பக்குவத்தை பெறவேண்டும் என்றால், மற்றவர்கள் முன்பும், பொது இடங்களிலும் எந்த தயக்கமும் இன்றி முன்னேறிச் செல்லவேண்டும். அதுமட்டுமின்றி மற்றவர்கள் கேலி செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தோடு நடக்கக்கூடாது. கேலி செய்தாலும் ஒரு அலட்சிய சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர்களை பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்றுவிடவேண்டும். கேலி செய்பவர்களிடம் எல்லாம் சண்டையிடத் தொடங்கினால் தன்னம்பிக்கை குறைந்து விடும்.
    Next Story
    ×