search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குடும்ப வெற்றியின் மகத்தான ரகசியம்
    X

    குடும்ப வெற்றியின் மகத்தான ரகசியம்

    விட்டுக்கொடுப்பவர் என்றும் கெட்டுப்போனதில்லை. வாழ்க்கை துணையிடம் வெற்றி தோல்வியை எதிர்பார்க்கலாமா? அரவணைத்து, அனுசரித்து செல்வதில் தானே தலைமுறைக்கும், இன்பம் கூடும்.
    ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறத்தில் ஈடுபடும்போது, வாழக்கை அர்த்தம் பெறுகிறது. இன்பம் கூடுகிறது. ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது என்பது மனிதருக்கு மட்டுமல்ல பெரும்பான்மையான விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் உள்ள சிறப்பியல்பு. இணைவது, வெறும் இனப்பெருக்கத்திற்கு மட்டும் என்றில்லாது, ஒருவருக்கு ஒருவர் அன்பும் பாசமும் வெளிப்படுத்திக் கொள்ளுதல், இணைந்து இரை தேடுதல், கூடுக்கட்டி குடும்பமாய் வாழுதல், பாதுகாப்பு, இன்னொருவர் பிரிவுக்கு வாடுதல் என இணைந்து வாழ்வது பல்வேறு கூறுகளைக் கொண்டது.

    சங்கப் பாடல் ஒன்றில், குட்டை ஒன்றில் ஆண், பெண் மான் தண்ணீர் அருந்துவதுப் போல ஒருக் காட்சி. தண்ணீரின் அளவு மிகக் குறைவு, இரண்டில் ஒரு மானுக்கு மட்டுமே போதுமானது. ஆண் மான் அருந்தட்டும் என்று பெண்மான் தண்ணீர் குடிப்பதுப் போல பாவனை செய்கிறது. தனது இணை அருந்தட்டும் என்று ஆண் மானும் பாவனை செய்கிறது. இரண்டு மான்களும் தண்ணீர் குடிக்காமல் தாகத்தோடு நின்றாலும், ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள பற்றுதல் அங்கு புலப்படுத்தப்படுகிறது. இப்படியும் நடந்திருக்குமா என்று வியப்பை ஏற்படுத்திய பாடல்.

    ஆனால் சமீபத்தில் கேள்விப்பட்ட நிகழ்வு சங்கக் கால சம்பவம் உண்மையாகவே இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீசிய கடும் புயலில் பல மரங்கள் வீழ்ந்தன. எனது நண்பர் வசிக்கும் பகுதியில் மரமொன்றில் ஆண், பெண் என இரண்டு நாரைகள் வசித்து வந்தன. மரம் விழுந்ததில் ஜோடியில் ஒரு நாரை இறந்துவிட்டது. இன்னொன்று அதன் பிரிவைத் தாங்காது அதே கிளையில் நகராது இரைத் தேடாது சோகமாய் வீற்றிருந்து சில நாட்களில் தன் உயிரை மாய்த்துக் கொண்டது.

    விலங்குகளும் பறவைகளும் தத்தம் இணையிடம் அன்பும் பரிவும் காட்டும்போது ஆறறிவுக் கொண்ட மனிதன் வெளிப்படுத்துவது இன்னும் கூடுதலானதாகத் தானே இருக்கவேண்டும். அதைத்தானே ஒவ்வொரு மனிதரும் விரும்புவர். பறவைகள், விலங்குகள் போல மனித வாழ்வில் உறவுகள் எளிமையானது, நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. ஒருகாலத்தில் ஆண்கள் வேலைக்கு சென்று பொருள் ஈட்டுவதும் பெண்கள் வீட்டினை நிர்வாகிப்பதும் என தங்களுக்குள் வேலையை பிரித்துக் கொண்டனர். பிரித்துக் கொண்டனர் என்பதைவிட பெண்கள்மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது என்று சொல்லலாம்.

    ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு’ என்று சமூகம் கேட்டது. ஆக அத்தகைய சூழலில், பெண்கள் வாய்மூடி மவுனியாக அடிமைவாழ்வு வாழ்ந்ததால் எத்தகைய பூசலுமின்றி குடும்ப வாழ்க்கை அமைதியாக செல்வதுபோல காட்சியளித்தது. ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. பெண்கள் படிப்பில் வெகுதூரம் முன்னேறி விட்டார்கள். அவர்கள் தொடாத துறை இல்லையென்று சொல்லக் கூடிய வகையில், விண்வெளிக்குச் செல்வதாகட்டும், விமானம் ஓட்டுவதாகட்டும், மிகப்பெரிய கார்பரேட் கம்பெனிகளை நிர்வாகிப்பதாகட்டும் ஆண்களுக்கு எந்தவகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்து வருகிறார்கள்.



    அதுமட்டுமின்றி, தாரளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் நமது தேவைகளையும் விருப்பங்களையும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு தலைமுறையாக ஆணும் பெண்ணும் பொருளட்ட வேலைக்கு செல்வது அத்தியாவசியமாகிவிட்டது. குடும்பத்தை சீராகவும் சிறப்பாகவும் நடத்திட கூடுதல் வருவாய் பெருமளவில் உதவுகிறது. குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்கவும் ஏதுவாகிறது.

    இப்பொழுது சிக்கல் எங்குத் தொடங்குகிறது என்றால், ஆணும் பெண்ணும் வேலைக்கு செல்லும்போது வீட்டு வேலைகளை யார் செய்வது என்பது கேள்வி. பெரும்பான்மையான ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள்தான் முழுமையான பொறுப்பு என்னும் மோசமான மனநிலையில் இன்னும் உள்ளனர். பெண்களும், அலுவலகத்தில் வேலை செய்வதுடன் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் தாங்கள் தான் செய்யவேண்டும் என்கிற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். பனிச்சுமைகள் காரணமாக மன அழுத்தங்கள் கூடும்போது இல்லறத்தில் பிணக்குகள் ஏற்படுகின்றன. மனவிலக்குகளுக்கு அடித்தளமிடுகின்றன.

    குழந்தையாக இருக்கும்போதே, இருபாலருக்கும் ஒருவரையொருவர் சமமாக நடத்தவும், சார்ந்து வாழ்தலின் மகத்துவத்தையும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு சொல்லித்தரவேண்டும். ஆண் குழந்தையென்றால் வீரத்திற்கு அடையாளமாகவும், ஆதிக்க சக்தியாகவும், பெண்ணென்றால் பணிந்து போகவும், அடிமையாகவும் சித்தரிப்பதை குழந்தையாக இருக்கும்போதே தவிர்க்கப்பட வேண்டும். பெண் என்பவரும் சக மனிதர், சுயமாக சிந்திப்பதற்கும் தனது விருப்பம்போல வாழ்க்கை அமைத்துக்கொள்ள அவருக்கும் உரிமையுள்ளது என்பதை வளரும் பருவத்திலேயே ஆண் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

    வீட்டு வேலைகள், குழந்தைகள் வளர்ப்பது, சமையல், வீட்டை சுத்தப்படுத்துவது, குடும்பத்தை பாராமரிப்பது, என்பவை ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். அவரவர் நேர வசதிக்கு தகுந்தாற்போல மாறிமாறி செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது தம்பதியினரிடம் பிணக்குகள் குறைந்து இல்லறம் மகிழ்ச்சியுறும். ஊடலில் தோற்றவரே வென்றார் என்று வள்ளுவர் கூறி இருக்கிறார். விட்டுக்கொடுப்பவர் என்றும் கெட்டுப்போனதில்லை. வாழ்க்கை துணையிடம் வெற்றி தோல்வியை எதிர்பார்க்கலாமா? அரவணைத்து, அனுசரித்து செல்வதில் தானே தலைமுறைக்கும், இன்பம் கூடும். நமக்கும் மகிழ்ச்சி அளிக்கும். குடும்ப வெற்றிக்கும்வழி வகுக்கும். இது குடும்பத்தாருக்கு முன்னோர் காட்டியவழி.

    ‘மனைவி’, ‘இல்லத்தரசி’ போன்ற சொற்கள் பெண்களை மேலோட்டமாக போற்றக்கூடிய வகைகளாகத் தோன்றினாலும் ஆழ்ந்து நோக்கினால், அவர்களை அடிமைப்படுத்தும் சொற்களே. வாழ்வில், இன்பத்திலும் துன்பத்திலும், ஏற்றத்திலும் இறக்கத்திலும் இணைந்து செயல்படும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இணையர் ஆவார்கள். ‘இணையர்’ என்ற சொல்லே பொருத்தமானதாகும். வள்ளுவர் கூற்றின்படி, ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’. அறமென்பது ஆண்கள் சார்ந்தது அல்ல இருவருக்கும் பொதுவானது என்பதை உலகத் தம்பதியினர் நாளான இன்று நினைவில் நிறுத்தி, நமது இல்லறத்தை இன்பமாய் பேணுவோம்.

    முனைவர் த சிவக்குமார், கல்வியாளர்
    Next Story
    ×