search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தனிநபர் கடன் பெறத் தயாராகிறீர்களா?
    X

    தனிநபர் கடன் பெறத் தயாராகிறீர்களா?

    தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைப் படித்துவிட்டு முடிவெடுங்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடனை நாடுவது பலரின் வழக்கம். உங்களுக்கும்கூட அந்த எண்ணம் இருக்கலாம். தனிநபர் கடன் பெறத் தயாராகிக்கொண்டிருக்கலாம். ஆனால்... அதற்கு முன் ஒரு நிமிடம்!

    தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைப் படித்துவிட்டு முடிவெடுங்கள்.

    * கடன் கேட்டு வங்கிப் படியேறுவதற்கு முன்பாக உங்கள் பொருளாதாரத் தகுதியை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். வங்கி நிபந்தனைகளின்படி நம்மால் முறையாக கடனை திரும்பச் செலுத்தமுடியுமா என்று பாருங்கள். அதற்காக, இலவசமாகக் கிடைக்கும் கடன் அறிக்கையை வாங்கிப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.

    * கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இல்லாதவரையோ, சரியான வருமானம் இன்றி இருப்பவரையோ வங்கிகள் வரவேற்பது இல்லை. கடன் பெறுவதற்கான நமது தகுதியான ‘கிரெடிட் ஸ்கோர்’, அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஸ்கோர் திருப்திகரமாக இல்லாதபோது, கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

    * வட்டி விகிதமும், கால அளவும் உத்தரவாதமுள்ள வீட்டுக்கடன் உள்ளிட்டவை போன்று தனிநபர் கடன்களை வங்கிகள் கருதுவது கிடையாது. இதனை ஒரு பாதுகாப்பற்ற கடனாகவே வங்கிகள் வைத்திருக்கின்றன. வங்கிக் கடன் புள்ளி விவரங்கள்படி தனிநபர் கடன்கள்தான் அதிக வாராக்கடன்களாக உயர்ந்துள்ளன. எனவே இக்கடனுக்கு 11 முதல் 16 சதவீதம் வரை வட்டி நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.

    * நீண்ட கால கடனா, குறுகிய காலக் கடனா என்பது உங்கள் தவணைத் தொகையைத் தீர்மானிக்கும் முக்கியக்காரணியாக உள்ளது. நல்ல கிரெடிட் ஸ்கோர், குறைந்த வட்டியை பெற்றுத் தரும்.

    * கடன் தொகையைப் பொறுத்து வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணங்களையும், ஒருமுறையும், அதற்கு மேலும் விதிக்கக்கூடிய கட்டணங்களையும் கடன் வாங்குவதற்கு முன்பு கட்டாயம் நீங்கள் கவனித்தாக வேண்டும். இல்லையென்றால் கடன்தொகையில் ஒரு சிறு தொகையை நீங்கள் இழக்க வேண்டி வரும்.

    * தவணைக்காலம் தவறித் தாமதமாகப் பணம் கட்டுபவர்கள், அபராதம் செலுத்த நேரிடலாம். அது ஏற்கனவே நமக்கு உள்ள பண நெருக்கடியை மேலும் கூடுதலாக்கும். நம் வங்கிக் கணக்கில் மாதாந்திர தவணைத் தொகையை தானாக பிடித்தம் செய்கிற மாதிரி அமைத்துக்கொள்ளலாம். தவணை நாளில் நம் வங்கிக் கணக்கில் போதுமான தொகை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்வதும் முக்கியம்.

    இவையெல்லாம் தாண்டி, அவசரத் தேவைக்காகத் தனிநபர் கடனை பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் இருக்கிறீர்களா? வங்கி அதிகாரியை அணுகி முறையாக அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள். கடன் பெற்றபின், தவணை தவறாமல் பணத்தைத் திரும்பச் செலுத்துவதில் உறுதியாக இருங்கள். தப்பித்துவிடலாம்!
    Next Story
    ×