search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிறுமிகளை தொட்டால் தூக்கு - ஆப்பு வைக்குமா அவசர சட்டம்?
    X

    சிறுமிகளை தொட்டால் தூக்கு - ஆப்பு வைக்குமா அவசர சட்டம்?

    தொன்று தொட்டு பெண்களின் மீதான வன்முறை உடல் சார்ந்ததாகவும், உள்ளம் சார்ந்ததாகவும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
    பெண்களின் பங்களிப்பு இதுநாள் வரையிலும், இன்றும் பொதுவெளியில் குறைந்திருப்பதற்கான முதற்காரணியாக அமைந்திருப்பது இயற்கையாகவே அவர்களுக்கு அமைந்திருக்கும் உடற்கூறு என்றால் மிகையாகாது.

    ஆண் குழந்தை, பெண் குழந்தை இருவருக்குமே பாதுகாப்பு என்பது முக்கியம் என்ற போதும் பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டும்போதும், கடக்கும் போதும் அவர்களை மிகுந்த சிரம் எடுத்து பாதுகாப்பதென்பது அவசியமாக இருக்கிறது. பெண்கள் மனதில் எழும் பாதுகாப்பு பற்றிய சிந்தனையே அவர்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் விதமாக அமைந்து வருகிறது.

    தொன்று தொட்டு பெண்களின் மீதான வன்முறை உடல் சார்ந்ததாகவும், உள்ளம் சார்ந்ததாகவும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. இதையெல்லாம் கடந்து பெண்கள் கல்வி அறிவை பெற்று முன்னேறி அனைத்து துறைகளிலும் மேம்பட்டு கொண்டே வருகிறார்கள். இப்படி சமூக மாற்றங்கள் நடந்துகொண்டு இருக்கும் தருணத்தில் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை என்பது பாதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்துக்கான அச்சுறுத்தல் ஆகும்.

    பெண்களை ஒதுக்கிவைத்துவிட்டு, ஒரு தரமான சமூகத்தை கட்டமைக்க முடியாது. சமூகத்தின் முன்னேற்றத்துக்கு பெண்களின் முன்னேற்றமும் அவசியமாகிறது. ஆனால், பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்கிறபோது கூட பாதுகாப்பு இல்லையென்றால் பெண்கள் எப்படி முன்னேறுவார்கள்? இச்சமூகம் எப்படி முன்னேறும்?

    அதிலும், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் மலைபோல் குவியத்தொடங்கிவிட்டன. தேசத்தின் எத்திசையிலும் குழந்தைகளும், சிறுமிகளும் பாலியல் ரீதியாக சிதைக்கப்படும் கொடுமைகள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. தனக்கு என்ன நடக்கிறது? என்பதை கூட உணர தெரியாத, அறிந்துகொள்ள முடியாத பிஞ்சு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிர்ச்சியில் உறையச்செய்கிறது.

    பிறப்பு முதல் இறப்பு வரை பெண் சமூகத்துக்கு எதிரான அத்துமீறல்களுக்கு இதுவரை இருக்கும் சட்டங்கள் நிரந்தர தீர்வையோ, பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறைவதற்கோ வழிவகுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறையாலும், நீதித்துறையாலும் நீதி கிடைப்பதில்லை. குற்றம் செய்தாலும் நாம் வெளியே வந்துவிடலாம் என கயவர் கூட்டம் கருதுகிறது. இந்த போக்கு மாற வேண்டும்.

    இன்றைக்கு தொழில்நுட்பம் அசாத்திய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அனைவரின் கரங்களிலும் ஸ்மார்ட்போன்கள் தவழ்கின்றன. இணையத்தின் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. இதில் நன்மைகள் ஏராளம் இருந்தாலும், குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் புதுசுப் புதுசாக பாலியல் தொல்லைகளை தரவும் தவறுவதில்லை.

    இந்த பாதிப்பில் இருந்து அவர்களை மீட்க பழைய சட்டங்களும், பழைய நடவடிக்கைகளும் போதுமானதாக இருக்காது. சமூகநலத்துறையும், போலீஸ் துறையும் காலத்துக்கு ஏற்ப மேம்படுத்தப்பட வேண்டும்.



    ஆனால் இங்கே அனைத்தும் மேம்போக்காகத்தான் நடக்கின்றன. எதையுமே ஆழ்ந்து பார்ப்பது கிடையாது. ஒருமுறை ஐரோப்பாவுக்கு சென்றிருந்தேன். அங்கே, நமது ஊரில் உள்ள ஒரு வார்டு அளவு பகுதியை மண்டலமாக பிரித்து, ஒவ்வொன்றுக்கும் சமூகநலத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் பகுதியில் உள்ள அத்தனை குழந்தைகளையும், அவர்கள் பற்றிய விவரங்களையும் நன்கு அறிந்து வைத்து இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு எதாவது ஒன்றென்றால் மறுகணமே அவர்களுக்கு தெரிந்துவிடும். இதனால் அங்கே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக இருக்கின்றன. ஆனால் நம் தேசத்தில் அப்படியா?

    நாம் எதையெல்லாமோ பிற நாடுகளில் இருந்து ‘காப்பி’ அடிக்கிறோம். ஒருபோதும் நல்ல விஷயங்களை மற்ற நாடுகளில் இருந்து, நாமோ, நமது அரசாங்கமோ ‘காப்பி’ அடிப்பது கிடையாது. இதை ஒரு சாபக்கேடாகத்தான் பார்க்கிறேன்.

    நீதிமன்றங்களும் பெண்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றன. பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பது குதிரைக்கொம்பாக இருப்பதை நினைத்து வேதனைப்படுகிறேன். ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு ஒரு நோக்கம் இருக்கும். பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் நோக்கங்கள் உண்டு. ஆனால் இங்கே அந்த நோக்கம் நிறைவேறுவதில்லை. பெண்கள் பாதிக்கப்படும் வழக்குகளில் சட்டம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் பல சமயங்களில் கவனிக்கப்படுவதில்லை. பெண்கள், சிறுமிகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக விசாரணை நடத்தவோ, வழக்குப் பதியவோ போலீஸ் நிலையங்கள் முன்வருவதில்லை.

    காஷ்மீரில் 8 வயது சிறுமி சிதைத்து கொல்லப்பட்ட வழக்கில் முதலில் எத்தகைய மெத்தனப்போக்கை போலீஸ் துறை மேற்கொண்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும். இது ஒரு உதாரணம்தான். குழந்தைகள் தொலைந்து போய்விட்டார்கள் என்றால் அதை சாதாரணமாகத்தான் போலீசார் பார்க்கிறார்கள். அதன் தீவிரத்தை உணர்வதில்லை.

    எனவே, குழந்தைகள் பாதுகாப்பில் நம் சமூகம் இன்னும் மேம்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. குழந்தைகள் வழக்குகளை விசாரிப்பதற்கென்றே தனி போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதுதான் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு அணை போடும்.

    சிறுமிகளை பாலியல் ரீதியாக சிதைக்கும் கயவர்களை தூக்கில் போட வேண்டும் என்பது பலதரப்பினரின் கோரிக்கை. தாமதமென்றாலும், தற்போது அரசு அதை உணர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக ‘போக்சோ’ சட்டம் (2012) மற்றும் இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவுகளில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து இருப்பதும், அதற்கு மத்திய மந்திரி சபை, ஜனாதிபதி ஒப்புதல் அளித்து இருப்பது நல்ல விஷயம்.

    அதில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இன்னும் பிற வகையில் குழந்தைகள் பாதிக்கப்படும் பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனையை கடுமையாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

    ஏனென்றால் 5 ஆண்டு, 7 ஆண்டு தண்டனையெல்லாம் ஒரு தண்டனையாகவே இருப்பதில்லை. ஜெயிலில் இருந்தாலும் குற்றவாளிகள் சுகமாகத்தான் இருக்கிறார்கள். எனவே, கடுமையான சட்டங்கள் தான் அவர்களுக்கு ஆப்பு வைக்கும். குற்றம் புரியும் முன்பு யோசிக்க வைக்கும்.

    மொத்தத்தில் அரசு கொண்டு வந்து இருக்கும் அவசர சட்டம் குழந்தைகளை, சிறுமிகளை காக்கும் கரங்களாக திகழும் என்ற நம்பிக்கையை தருகிறது!

    வக்கீல் கனிமொழி
    Next Story
    ×