search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புத்தகம் தூக்கும் மாணவிகளின் கையில் தற்காப்பு ஆயுதமும் தேவை
    X

    புத்தகம் தூக்கும் மாணவிகளின் கையில் தற்காப்பு ஆயுதமும் தேவை

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் எந்த பிரச்சினையையும் நேரடியாக எதிர்கொள்கிற தைரியத்தையும், அதற்கான பாதுகாப்பையும் கல்வி துறை வழங்க வேண்டும்.
    பெரியவங்க ‘காலம் கெட்டுப்போச்சு’னு சொல்வதை கேட்டு இருக்கிறோம். எல்லோருக்குமே அவர்கள் சிறுவயதில் இருந்ததை விட பெரியவர்களான பிறகு சமூகத்தின் தரம் கேட்டு போய்விட்டது என்றுதான் சொல்கிறார்கள். யாராவது தாங்கள் சிறுவயதில் இருந்ததை விட சமுதாயம் மேம்பட்டுவிட்டது என்று சொல்கிறார்களா?

    முன்பை விட நாம் பொருளாதாரத்திலும், கல்வியிலும் மேம்பட்டுதான் இருக்கிறோம். ஆனால் நம் அமைப்புகள் கெட்டுப்போய்விட்டன. ஒழுக்கம், பண்பாடு, நேர்மை ஆகியவற்றில் பெரிய சறுக்கலை நம் சமூகம் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இது எப்போதும் இறங்கு முகமாகவே இருக்கிறது.

    முன்பை விட மக்கள் தற்போது ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய சூழல் ஏற்பட்டால் தான் கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாம் வளர்ச்சி அடைந்ததற்கு அர்த்தம் உண்டு.

    ஒரு கல்லூரி பேராசிரியை மாணவிகளை வேறு சிலருக்கு பாலியல் தீனியாக்க, அந்த மாணவிகளுடன் பேசிய செல்போன் உரையாடல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதை வாட்ஸ்அப், ஊடகங்கள் உடனடியாக வெளிக்கொண்டு வந்து இருக்கின்றன. தமிழ்நாடாக இருக்கப்போய் தான் இது வெளிவருகிறது. இதுவே குஜராத், உத்தரப்பிரதேசமாக இருந்தால், இதை வெளியிட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு இருப்பார்கள். இந்த வேறுபாட்டை கடந்து எந்த வகையிலும் நாம் இந்த விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை எண்ணி பெருமைப்பட ஒன்றும் இல்லை.

    அந்த உரையாடலில், ‘நான் சொல்கிற மாதிரி செய்தால் வசதிகள் கிடைக்கும்’ என மாணவிகளிடம் அந்த பேராசிரியை சொல்கிறார். இது இப்போது வெளியாகி இருக்கும் செய்தி. ஆனால் இன்னும் எத்தனை எத்தனையோ மாணவிகளை சீண்டிப் பார்க்கும் பாலியல் தொல்லைகள் வெளிச்சத்துக்கு வரவில்லை.

    அதிலும் குறிப்பாக ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவிகளின் நிலை மிகவும் கவலைகொள்வதாக இருக்கிறது. இது ஒரு உயர்ந்த படிப்பு. இந்த படிப்புக்கான மாணவர்களின் உழைப்பு, படிப்பு, எழுத்து, அர்ப்பணிப்பு அதிகம். அவர்கள் வழிகாட்டிகள் சொல்கிற வழியில் நடக்க வேண்டும். இங்கே தான் பிரச்சினை.

    பல இடங்களில் அந்த வழிகாட்டிகள் தங்களுக்கு கீழ் படிக்கும் மாணவிகளை நிர்பந்தம் செய்கிறார்கள். ஆண் வழிகாட்டிகள் என்றால் தங்களின் இச்சைக்கு இணங்க வலியுறுத்துகிறார்கள். இதுவே பெண் வழிகாட்டிகள் என்றால் மாணவ, மாணவிகள் இருவரிடமும் பணம் கேட்டு மிரட்டும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    இப்படிபட்ட நிகழ்வுகளை பற்றி 25 ஆண்டுகளுக்கு முன்பே பிரபஞ்சன் சிறுகதையே எழுதி உள்ளார். ஆனால் இப்போதும் அந்த நிலை தொடர்வதாகத்தான் பலரும் வேதனைப்படுகிறார்கள். வழிகாட்டிகள் சொல்வதை கேட்காவிட்டால், பட்டம் வாங்க முடியாத நிலை ஏற்படும். அப்படி நடந்தால் எத்தனை ஆண்டு உழைப்பு வீணாகும்? குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள்? என்றே மனஉளைச்சலுக்கு ஆளாகி பல மாணவிகள் நொந்துகொண்டு இருக்கிறார்கள்.

    ஆனால் இப்படிபட்ட தொல்லைகள் தொடர்பாக மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகார் சொல்ல, முறையான விசாரணை நடைபெற உயர் கல்வி நிர்வாக அமைப்புகள் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டு இருக்கிற இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த அரசும் முயற்சிக்கவில்லை.

    அதிர்ச்சி அலையை உருவாக்கி இருக்கும் உரையாடலில், கல்வித்துறை உயர் அதிகாரிகள் சிலரை அந்த பேராசிரியை குறிப்பிடுகிறார். ஆனால் அவர்கள் யார் என்று தெரியவில்லை. அப்படியென்றால், இதற்கு முன்பு எத்தனை பெண்கள் அந்த அதிகாரிகளால், இதுபோன்ற பேராசிரியைகளால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்? என்ற கேள்வி எழுகிறது.

    தற்போது, அந்த பேராசிரியை கல்லூரி நிர்வாகத்தால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் இது போதுமானதாக இருக்காது. அவர் மீது கிரிமினல் வழக்கு நடத்தப்பட வேண்டும். அவர் செய்த தப்புக்குரிய அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும்.

    எனவே, அந்த பேராசிரியை மீது சட்டப்பிழைகள் இன்றி கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட வேண்டும். விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும். விதிகள் ஏன் முக்கியம் என்றால், விதிகளை மீறி விசாரணை நடந்தால் கோர்ட்டில் அந்த வழக்கு தள்ளுபடியாகும் சூழல் ஏற்பட்டுவிடும். அடுத்ததாக, இந்த விசாரணை துரிதமாகவும், புகார் கொடுத்த பெண்களுக்கு எந்த சங்கடத்தையும் கொடுக்காத வகையிலும் நடைபெற வேண்டும். மாணவிகள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்.

    அதே போல, பள்ளி, கல்லூரி மாணவர்கள் எந்த பிரச்சினையையும் நேரடியாக எதிர்கொள்கிற தைரியத்தையும், அதற்கான பாதுகாப்பையும் கல்வி துறை வழங்க வேண்டும். பிரச்சினைகளுக்கு போராடும் துணிச்சல் வந்தால் தான், தற்போது மாணவிகளை சீண்டிய பேராசிரியை போன்றவர்களை எதிர்க்கவும், அவர்களை அம்பலப்படுத்தவும் முடியும்.

    மாணவிகளை பொறுத்தவரை கல்வி, பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கியே அவர்களின் கவனம் இருக்க வேண்டும். தங்களை அழகு பதுமைகளை போலவோ அல்லது பெண் என்றாலே மற்றவர்களின் பார்வைக்கு நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக தன்னைத்தானே ஒரு கவர்ச்சி பொருளாக ஆக்கி கொள்கிற மன நிலைக்கோ ஆட்பட்டுவிட கூடாது.

    ஒரு பையனையோ, பெண்ணையோ பார்க்கும்போது அவன் மாணவன், அவள் மாணவி என்றுதான் தெரிய வேண்டும். அவர்கள் அழகானவர்கள் என்ற எண்ணம் வரக்கூடாது. சமூகத்தின் கண்கள் அப்படித்தான் பார்க்கின்றன. மாணவனும், மாணவியும் தங்களை அழகானவர்களாக காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள். இந்த போக்கு மாற வேண்டும். அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கவுரவமான சீருடை வழங்கப்பட வேண்டும்.

    மேலும், பெண்ணின் உடல் என்பது ஆண்களின் பார்வைக்கான தீனி அல்ல. இது ஆண்களின் மனதில் ஆழமாக பதிய வேண்டும். இதை பதிய வைக்கவும் வேண்டும். அதற்கேற்ப பெண்ணியத்தை பற்றியும், பெண்கள் சந்திக்கும் போராட்டங்கள் பற்றியும் பாடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    விழிப்பான சமூகத்தில் தான் இந்த மாதிரி பேராசிரியைகளை மாணவிகள் முறியடித்துவிடுவார்கள். மேலும் பேராசிரியைகளுக்கும் இதுபோன்று மாணவிகளிடம் கேட்கலாம் என்ற தைரியமும் வராது. இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை தான் நம்பிக்கை தரும். மாணவிகளின் பெற்றோரும், அவர்களை சார்ந்தவர்களும் எந்த அழுத்தத்துக்கும் பயப்படாமல் உறுதியாக இருந்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.

    அவர்களின் பங்களிப்பு தான் இந்த பேராசிரியைக்கு மட்டும் அல்ல; இதுபோன்று இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் அடிக்கப்படும் சாவுமணியாக இருக்கும்.

    பெண்கள் முன்னேற்றம் பற்றி சொன்ன பெரியார், ‘பெண்கள் கையில் கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகங்களை கொடுங்கள். அவர்கள் உரிமையை அவர்களே பெற்றுக்கொள்வார்கள்’ என்றார். ஆனால் இன்றைக்கு புத்தகம் தூக்கும் மாணவிகளின் கையில் தற்காப்பு ஆயுதமும் தேவைப்படுகிறது என்பதைத்தான் இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன.

    வக்கீல் அருள்மொழி, சென்னை
    Next Story
    ×