search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கூச்சல்போட்டு எதையும் சாதிக்க முடியாதுங்க..
    X

    கூச்சல்போட்டு எதையும் சாதிக்க முடியாதுங்க..

    நாம் பேசும் விஷயம் நியாயமானதாக இருந்தாலும் கத்திப் பேசும்போது யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கத்துவது நமக்கொரு தவறான இமேஜைத் தந்துவிடும்.
    கத்திப் பேசுவது நல்லதா? யாரைக் கேட்டாலும் நல்லதில்லை என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் கோபம் வரும்போதும், ஒரு விஷயத்தை மறுத்துப் பேசும்போதும் கத்திப் பேச வேண்டிய அவசியம் வரும். அந்த நேரம் டென்ஷன் அதிகமாகி இதயத்துடிப்பு எகிறி, ரத்தநாளங்கள் சூடேறி, கண்கள் சிவந்து என்னென்னவோ நடக்கும். இப்படி அடிக்கடி நடந்தால் பல வேண்டாத விளைவுகள் ஏற்படும். இதெல்லாம் அமைதியாக இருக்கும்போது புரியும். ஆனால் டென்ஷன் தலைக்கேறும்போது யாருக்கும் புரிவதில்லை.

    கத்திப் பேசுவதில் பெண்களும் சரி, ஆண்களும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. தனது பக்க நியாயத்தை நிரூபிக்க கத்த வேண்டியுள்ளது. ஆனால் அது எந்த விதத்திலும் உபயோகப்படாது. காரணம் கத்துவதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. மேலும் மேலும் கத்த வேண்டி இருக்கும். கத்தி முடித்ததும் ஒரு குற்ற உணர்வு ஏற்படும். ஒரு தாழ்வு மனப்பான்மை தோன்றும்.

    கத்திப் பேசுவது மனிதர்களை பலவீனமாக்கிவிடும். கத்திப் பேசுவதால் உடலின் சக்தியை இழக்கிறோம். நாம் கத்தும்போது வெளியேறும் சக்தி திரும்பக் கிடைக்க பல மணி நேரம் ஆகும். நம்மைச் சுற்றி இருக்கும் சமூகம் வெறுப்புடன் பார்க்கும் என்பதால் சமூக அந்தஸ்தையும் இழக்கிறோம். ஆனால் இதெல்லாம் தெரிந்தும் சமயத்தில் கத்திவிடுகிறோம்.

    கத்துவது மனிதர்களுக்கு ஏற்றதல்ல. நம் தொண்டை அமைப்பு அதற்காக படைக்கப்பட்டதல்ல. கத்தும்போது மனிதன் என்ற நிலையை மீறி ஒருபடி கீழே இறங்கிப் போய்விடுகிறோம். அப்போது நம் மீது நமக்கே வெறுப்பு ஏற்படுகிறது.

    அடிக்கடி கத்துவதால் தொண்டை தன் இயல்பு நிலையை இழந்துவிடும். குரல் வளம் குறைந்து குரலின் இனிமை போய்விடும். பிறகு மெதுவாக பேசவே முடியாது. கத்துவதால் டென்ஷன் அதிகரிக்கும். அதனால் வயிற்றுப் பிரச்சினைகள், ஜீரணக் கோளாறு தோன்றும். சாப்பிடும் உணவு செரிமானம் ஆகாமல்போக டென்ஷனும் ஒரு காரணம்.

    கத்துவது மரியாதைக் குறைவான விஷயம். தன்னைவிட வயது குறைந்தவரானாலும் கத்துவது மரியாதையற்ற விஷயம். கோபத்தில் வரும் வேண்டாத வார்த்தைகளை திரும்பப் பெற முடியாது. அப்படியானால் எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க முடியுமா?, முடியாதுதான். பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சிலர் கத்தினால் தான் சாதிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். அது தவறு.



    கத்துவது ‘டென்ஷன் குறையும்’ என்று பலர் நினைத்துக் கொள்கிறார்கள். யார் மீதோ இருக்கும் கோபத்தைக் கூட பலவீன மானவர்கள் மீது கத்தி தீர்த்துக் கொள் கிறார்கள். நாய், பூனை போன்றவற்றிடம் கூட சிலர் தேவையில்லாமல் கத்துகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை எந்த பிராணியும் விரும்புவதில்லை. மொழியில்லாத ஐந்தறிவு பிராணிகள் தான் எதற் கெடுத்தாலும் கத்தும். மொழியறிவுடைய மனிதர்கள் கத்துவது நியாயமில்லை.

    கத்தும் பொழுது சிந்தனை தடுமாற்றம் ஏற்படுகிறது. கவனம் சிதறுகிறது. இந்த நிலையில் பல தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கத்துவதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் அமைதியாக எதிர்கொள்ளும்போது பிரச்சினைகள் எளிதாகிவிடும். கத்துவதால் அது சிக்கலாகிவிடும்.

    அமைதியின் சக்தியை யாரும் புரிந்துகொள்வதில்லை என்பதே கத்திப் பேச காரணமாக இருக்கிறது. அமைதியானவர்களால் தான் சாதிக்க முடியும். ‘பொறுத்தவர் பூமியாள்வார்’ என்பார்கள். கத்துபவர்களால் எதையுமே சாதிக்க முடியாது. நம் உயிரின் சக்தியை சேமித்து வைத்துக்கொண்டால் தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும். அதனால் தான் முனிவர்களும், ரிஷிகளும் மவுனமாக இருந்து சக்தியை சேமித்தனர். மவுனம் ஒரு மந்திரம்.

    மவுனத்தால் எந்த எதிர்ப்பையும் சமாளிக்கலாம். கத்துவதால் சுற்றி இருப்பவர்கள் யாருமே நம்மை விரும்பமாட்டார்கள். அது நமக்கொரு தவறான இமேஜைத் தந்துவிடும். நாம் பேசும் விஷயம் நியாயமானதாக இருந்தாலும் கத்திப் பேசும்போது யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கத்துவது ஒரு அகங்காரமான செயல். இது யாருக்கும் பிடிக்காது. கத்துபவர்கள் அதற்கு ஒரு காரணம் வைத்திருப்பார்கள். கத்தும்போது தவறான வார்த்தைகள் வெளிப்படுகிறது. இது நம்மை மீறிய செயல். இந்த செயலுக்கெல்லாம் பொறுப்பேற்க வரும்போது, எதற்கு இப்படி கத்தினோம் என்று தோன்றும்.

    கத்துவது உடலுக்கும், மனதிற்கும் ஒருவித சோர்வை ஏற்படுத்தும். தேவையில்லாமல் கத்துபவர்கள் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்களை இழந்துவிடுகிறார்கள். முக்கியமாக தகாத வார்த்தைகளைப் பேசி சுற்றி இருப்பவர்களின் மனதை நோகடித்து, அவர்களுடைய அன்பை இழந்து விடுகிறார்கள். கத்துவது பல வியாதிகளுக்கு காரணமாகவும் அமைந்துவிடுகிறது.

    ஆண்கள் எப்போதும் தாங்கள் செய்வது தான் சரி என்று நினைத்துப் பழகிவிட்டார்கள். அதோடு வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதும் அவர்களின் பிடிவாதம். அது கொஞ்சம் மாறும்போது குரலை உயர்த்தி கத்த முற்படுவார்கள்.

    உளவியல் ரீதியாக பார்க்கும்போது கத்துவது ஒரு இயலாமை. கத்தும் பழக்கம் இடம் பொருள் பார்க்காது. கத்தி கத்தி யாரும் தன் பலத்தை நிரூபிக்க முடியாது. கத்தாமல் வாழ்க்கை நடத்த முடியும். முயற்சித்துப் பார்த்தால் அந்த வாழ்க்கை ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும்!
    Next Story
    ×