search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு திட்டமிடுதல்
    X

    குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு திட்டமிடுதல்

    சுற்றுலாவிற்கு சரியான திட்டமிடல் இல்லையெனில் கனவுகள் அனைத்தும் நனவாகாமல் போய்விடும். சுற்றுலாவிற்கு ஒதுக்கிய நாட்களை எவ்வாறு மகிழ்ச்சியாக கழிப்பது என்பது பற்றி பார்ப்போம்.
    குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது எந்தெந்த இடங்களையெல்லாம் முக்கியமாக சுற்றிப்பார்க்க வேண்டும், அங்கு எந்தெந்த கோணங்களில் போட்டோ எடுக்க வேண்டும், எந்தமாதிரியான உணவுகளை ருசிக்கவேண்டும் என்பவைகளை பற்றி பலவிதமான கனவுகள் இருக்கும். சுற்றுலாவிற்கு சரியான திட்டமிடல் இல்லையெனில் கனவுகள் அனைத்தும் நனவாகாமல் போய்விடும்.

    சுற்றுலாவிற்கு ஒதுக்கிய நாட்களை எவ்வாறு மகிழ்ச்சியாக கழிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

    குழந்தைகளுடன் சுற்றுலாவுக்கு புறப்படுபவர்கள் குழந்தைக்கு தேவையானவற்றை கொண்டு செல்ல தனி பையை ஒதுக்கிவிட வேண்டும். வெளியிடங்களில் குழந்தை நிம்மதியாக தூங்குவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். குழந்தையின் பசியறிந்து உணவூட்டிவிடுங்கள். அப்போதுதான் அது நிம்மதியாக தூங்கும். நீங்களும் மகிழ்ச்சியாக எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்க முடியும். குழந்தைகளுக்கு அசவுகரிய சூழல் நீடித்தால், அவை அழுது உங்கள் நிம்மதியை கெடுத்துவிடும்.

    பள்ளி செல்லும் குழந்தைகள் ஆர்வமுடன் பயணத்திற்கு தயாராகுவதற்காக, நீங்கள் செல்ல இருக்கும் இடங்களை பற்றிய சுவராசியமான தகவல்களை அவர்களிடம் கூறுங்கள். அந்த பகுதியில் வாழும் மக்கள், அவர்களது கலாசாரம், இயற்கை அமைப்பு போன்ற விஷயங்களை கூறி அவர்களை பயணத்துடன் ஒன்ற வையுங்கள். அவ்வாறு செய்தால், உங்கள் சுற்றுலா எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிறைந்ததாகிவிடும்.

    சுற்றுலாவின் போது செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை பற்றி பட்டியலிட்டு குழந்தைகளிடம் கூறிவிடுங்கள். அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கும் அனுமதியுங்கள். பார்க்கும் எந்த பொருளையும் கேட்டு அடம்பிடிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு விருப்பமானவற்றை வாங்கி கொடுங்கள். குழந்தைகள் அறிவுபூர்வமாக கேள்விகள் கேட்டால் அவர்களை பாராட்டுங்கள். இது அவர்களை மென்மேலும் அதுபோன்ற செயல்களை செய்யத்தூண்டும்.

    பயண நாட்களில் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். சாப்பிடும் முன்பும் கழிப்பறையை உபயோகித்த பின்பும் கைகளை அதற்குரிய திரவத்தை பயன்படுத்தி கழுவ வற்புறுத்துங்கள். புதிய வகை உணவுகளை குழந்தைகளுக்கு அளிக்காதீர்கள். ஒருசிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். மேலும் அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், அது பயணத்திற்கு ஒத்துக்கொள்ளுமா? என்பதை கண்காணியுங்கள்.

    சுற்றுலா சிறப்பாக அமைவது என்பது சுலபமானதல்ல. எனவே செல்லும் இடங்களை பற்றி முன்பே முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். தங்கும் ஓட்டலில் இருக்கும் சவுகரியங்களை முழுமையாக பயன்படுத்துங்கள். அறைக்குள் அடைந்து கிடக்காதீர்கள், சுற்றுலா என்பது ஓய்வு எடுப்பதற்கானது அல்ல. செல்ல வேண்டிய இடங்களுக்கு திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே புறப்படுங்கள். இது வழியில் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சல்களை கையாள உதவும். அதே நேரம் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறக்காதீர்கள். அமைதியாக ஆனந்தமாக அனுபவியுங்கள்.
    Next Story
    ×