search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சமூகத்தின் கண்கள் - பெண்களுக்குப் பாதுகாப்பா? பலவீனமா?
    X

    சமூகத்தின் கண்கள் - பெண்களுக்குப் பாதுகாப்பா? பலவீனமா?

    பெண்களே சுயமரியாதை இன்றி ஆணாதிக்கத்துக்கு உட்படும் போது அந்த மனப்பான்மை அனைத்து படிநிலைகளிலும் ஆழமாய் உறைந்து போகிறது என்பது தான் உண்மை.
    அமெரிக்காவில் சமீபத்தில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிறகு, ஒரு நிறுவனம் குழந்தைகளுக்கு அணிவிக்கும் புல்லட் புரூப் ஜாக்கெட்டுகளை விளம்பரப்படுத்தத் தொடங்கி உள்ளது.

    சமூகத்தின் அவலங்களை வேரறுப்பது மட்டுமே தொடர் வன்முறைகளுக்கும் அநீதிகளுக்கும் தீர்வாக இருக்க முடியுமே ஒழிய இலைகளை உதிர்ப்பது அல்ல. பெண்களுக்கெதிரான வன்முறைகளிலும் அநீதிகளிலும் நம் சமூகம் காலங்காலமாக புல்லட் புரூப் ஜாக்கெட்டுகளையும் இரும்புக் கவசங்களையும் பெண் மீதே திணித்து அவளை மூச்சு முட்டச் செய்து கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

    சமூகம் எப்போதும் தனது கண்களால் அவளைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. தாயின் வயிற்றை விட்டு வெளி வந்தது முதலே ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? எப்படிச் சிரிக்க வேண்டும்? என்ன வேலை செய்யலாம்? என்ன விரும்பலாம்? எதை வெறுக்கலாம்? எந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும்? எப்போது பிள்ளைகள் பெறவேண்டும்? என்று அடக்குமுறையை ஏவிக் கொண்டே இருக்கிறது. எப்போது சாக வேண்டும்? என்பது மட்டும் தான் இல்லை; ஏனென்றால் அது எப்படி வேண்டுமானாலும் நிகழலாம்; காதலிக்க மறுத்தால் ஆசிட் வீச்சிலிருந்து தொடங்கி வரதட்சணைக் கொடுமையால் மாமனார் வீட்டார் கொலை செய்வது வரை.

    லெக்கின்ஸ் அணிந்த பெண்களை அத்துமீறிப் படமெடுத்து அட்டைப் படக் கட்டுரையாக்கிச் சர்ச்சையில் சிக்கியது ஒரு வார இதழ். கற்பு என்பதன் மீது தனது தனிப்பட்ட கருத்தைச் சொன்னதற்காக ஒரு பிரபல நடிகையைப் படாத பாடு படுத்தியது தமிழ் கூறும் நல்லுலகம். இப்படி விடாமல் துரத்தும் கண்கள் பார்க்க மறுப்பது ஆண்களுக்கு இயல்பாக இருக்கும் அத்தனை உணர்வுகளும் கனவுகளும் சுதந்திர வேட்கையும் இருக்கும் சக உயிர் தான் என்பதை. இதற்குச் இச்சமூகத்தின் அங்கமாகிப் போன பெண்களே கூட விதிவிலக்கில்லை.

    பொருளாதாரத் தேவைக்காக வேலைக்குப் போனாலும் கூட, மனதளவில் சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு இம்மி பிசகாமல் இணங்கித் தான், காலையில் எழுந்து, பொங்கிப் போட்டு, தின்று, வேலைக்கு ஓடி, பிள்ளை பெற்று வளர்த்து, கொஞ்சம் டி.வி. பார்த்துச் சிரித்து, அழுது, செத்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள்.

    தகவல் தொழில்நுட்பத்தின் அசுரவேக வளர்ச்சியும் சமூக வலைத்தளங்களும் இந்த விதிகளைச் சற்றே அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

    நம் சுயத்தை எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படுத்தும் களமாகத் திகழ்வது முகநூல், டுவிட்டர் போன்ற வலைத்தளங்கள். முன்பின் அறியாத நபரிடம், கருத்து ஒற்றுமையினால் மட்டுமே ஏற்படும் நெருக்கமும் நட்புகளும் அலாதியான விடுதலை உணர்வைத் தருபவை. தனிமை உணர்வைப் போக்குபவை. ஆனால் இதிலும் சமூகம் பெண்களைச் சுதந்திரமாக இயங்குவதை விரும்புவதில்லை. எந்நேரமும் ஆபத்துகள் தொடர்வதாகக் கட்டமைத்து அச்சுறுத்துவதன் மூலமே பெண்களைப் பலவீனப்படுத்துவதில் குறியாக இருக்கிறது.



    தனிமையினாலோ, அங்கீகாரத்துக்கான ஏக்கத்தினாலோ வலையுலகில் நட்பை நாடும் பெண்கள் மீண்டும் இந்தப் பலவீனச் சுழற்சியில் சிக்கிக் கொள்கிறார்கள். மேம்போக்கான எச்சரிக்கை நடவடிக்கைகள் அல்ல, தங்கள் ஆளுமையினின்று வெளிப்படும் சொல்வது அல்ல, தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் விதைப்பது மட்டுமே இத்தகைய மலினங்களில் பெண்கள் சிக்கித் தவிப்பதைத் தடுக்க ஒரே வழி.

    நிஜவாழ்வில் மனதில் பட்டதைப் பேசவும், தான் விரும்பியபடி வாழவும் சுதந்திரம் இருக்கும் பெண்கள் சைபர் உலகில் ரகசியமாகக் காதல்களை நாடும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படமாட்டார்கள். அவர்களுக்காக வலை விரித்துக் காத்திருக்கும் கடுவன் பூனைகளும் பெருக மாட்டார்கள்.

    பாதிக்கப்பட்ட நபர் மன உளைச்சலில் கொலை, தற்கொலை செய்வது மாதிரியான படங்களைக் கொண்டாடுவதை சமூகம் கை விட வேண்டும்.

    இப்படி, பெண்கள் மீதான வன்முறை என்பதும், வேலைக்குப் போகும் பெண்கள் என்பதும் காலங்காலமாய்ப் பேசு பொருளாய் இருந்து வருகிறது என்பதே இச்சமூகத்தின் அங்கத்தினராய் நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாய் இருக்கிறது. மிதமான பாலியல் சீண்டலிலிருந்து கொடூர வன்முறை வரைக்கும் சமூகத்தின் அனைத்துத் தரப்புப் பெண்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுவதற்குக் காரணம் ஆணாதிக்கத்தின் அழுகிய வேர்கள் சமூகத்தின் எல்லா இண்டு இடுக்குகளிலும் கிளைத்துப் படர்ந்து இருப்பது தான்.

    படிப்பும், உயர் பதவிகளும் மட்டுமே ஆணின் ஆதிக்கச் சிந்தனையையும் பெண் மனதின் அடிமைச் சிந்தனையையும் லேசில் மாற்றி விடுவதில்லை. அவற்றை நவநாகரிகப் பூச்சுகளின் மூலம் மழுப்பி மறைக்கவே உதவுகின்றன.

    “நீங்க எதுக்கு வேலை செய்யணும், ஆபீசுக்கு வந்தாலே போதும். புரமோஷன் நிச்சயம்!” என்பது போன்ற வழிசல்களை ஒவ்வொரு நாளும் சிரித்து, மழுப்பி, விழுங்கிக் கடக்கும் பெண்கள் எல்லா நிறுவனங்களிலும் இருக்கிறார்கள். அதனால், திறமைக்கும் உழைப்புக்கும் ஓர் ஆணுக்குக் கொடுக்கப்படும் மரியாதையைப் பெற பெண் அதை விட அதிக அளவில் உழைப்பது மட்டுமல்ல, பேச்சு, சிரிப்பு, வேலை செய்யும் நேரம், குறிப்பாக வேலை ஓய்வு நேரத்தைக் கழிக்கும் பாங்கு எல்லாவற்றிலும் அதீத எச்சரிக்கையுடன் நடந்து கொண்டாலும் மீண்டும் மீண்டும் மதிப்பீட்டுகளுக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

    ஆனால் ‘வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்’ என்று பேசும் ஆன்மிக குருக்களை வணங்கும் பெண்களுக்கு மதநம்பிக்கைகள் மட்டுமன்றி சாதி இறுமாப்பும் கண்ணை மறைக்கிறது.

    சமூகக் கட்டமைப்பில் உயரத்தில் இருக்கும் பெண்களே சுயமரியாதை இன்றி ஆணாதிக்கத்துக்கு உட்படும் போது அந்த மனப்பான்மை அனைத்து படிநிலைகளிலும் ஆழமாய் உறைந்து போகிறது என்பது தான் உண்மை.

    இன்று (மார்ச் 4-ந்தேதி) பாலியல் சுரண்டலுக்கு எதிராக போராடும் சர்வதேச தினம்.

    ஜெ.தீபலட்சுமி
    Next Story
    ×