search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களை போற்றுவோம்
    X

    பெண்களை போற்றுவோம்

    இன்றைய பெண்கள் பாரதி கண்ட புதுமை பெண்ணாகவும், புரட்சி பெண்ணாகவும் விளங்குகிறார்கள். ஆகவே பெண்ணுரிமை வாழட்டும்! வளரட்டும்.
    உலகில் வேறு எந்த நாடும் போற்றாத அளவுக்கு பெண்ணை போற்றும் பெருமையுடையது நம்நாடு.

    மங்கைய ராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மா!

    என்றார் பாரதி. ஆனால், சமுதாயத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். பெண்ணை பெண்ணே பழிக்கவும், அழிக்கவும் செய்கிறாள். சங்க காலத்தில் பெண்கல்வி சிறந்திருந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற்புலவர்கள் இருந்தனர். பெண்கள் தூதராகவும், வீராங்கனையராகவும் விளங்கியுள்ளனர். கணவரை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தனர். ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென்றால் ஆண் தான் பெண்ணின் பெற்றோருக்கு நிறைய பொருள் கொடுக்க வேண்டும். பெண்களை வீட்டிற்குள் வைத்தே வளர்த்தனர். வெளியில் செல்ல அனுமதித்ததில்லை.

    இடைக்காலத்தில் வேதமத செல்வாக்கு பெற்றதால் பெண் முதலில் தந்தைக்கு அடிமை என்னும் கொள்கை புகுந்தது. பெண்ணுரிமை மறைந்தது. பெண்ணிழிவு மலிந்தது. ஆயினும், பெரியபுராண காலத்து பெண்களும் இடைக்காலத்து காப்பிய பெண்களும் சிறப்பாக வாழ்ந்துள்ளனர்.

    பெண்கள் இந்நாட்டின் கண்கள். பெண்குலம் உயர்வு பெற்றால் தான் உலகம் உய்யும். பெண்ணை- தாய்மை- இறைமை என்று பெண்ணின் பெருமையை போற்றுவார். திரு.வி.க. ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணிற்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள். ஒரு வீட்டில் ஒரு பெண் நல்லவளாக இருந்தால் தான் அவ்வீடு சிறப்படையும், இதனை வள்ளுவர்,

    இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென
    இல்லவள் மாணாக் கடை

    என்று கூறினார்.



    சங்க காலத்தில் ஆண்களுக்கு இணை யாக பெண்கள் சிறப்பு பெற்றிருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அவ்வையார் உள்ளிட்ட பெண் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். உடன்கட்டை ஏறுதல், கைம்மை நோன்பு போன்ற மூடப்பழக்க வழக்கங்களெல்லாம் பெண்களுடைய நிலையை இழிவுபடுத்தியது. ஆங்கிலேயர் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிக்கப்பட்டது.

    ஆங்கிலேயர் ஆட்சியின்போது அன்னிபெசன்ட் அம்மையார், சகோதரி நிவேதிதா போன்றோர் பெண்ணிழிவு நீக்க உழைத்தனர். 19-ம் நூற்றாண்டில் வள்ளலார், வேதநாயகம் பெண்ணுரிமையை வலியுறுத்தினர்.

    மாதர் தம்மை இழிவு செய்யும்
    மடமையைக் கொளுத்துவோம்

    என்று பாரதி முழங்கினார். பெண்ணுரிமை மலர பலரும் பெரிதும் உழைத்தனர். இன்று நம் நாட்டில் கல்வியிலும் வேலை- வாய்ப்பிலும் பெண்களுக்கு அதிக அளவில் இட ஒதுக்கீடு செய்யப் பெற்றுள்ளது. பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். வீட்டை மட்டுமே ஆண்டு வந்த பெண்கள் நாட்டையும் ஆள தொடங்கிவிட்டனர். பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. மருத்துவமாக இருந்தாலும் சரி, விஞ்ஞானமாக இருந்தாலும் சரி பெண்கள் அனைத்து துறைகளிலும் புகழ் பெற்று விளங்குகிறார்கள்.

    இன்றைய பெண்கள் பாரதி கண்ட புதுமை பெண்ணாகவும், புரட்சி பெண்ணாகவும் விளங்குகிறார்கள். ஆகவே பெண்ணுரிமை வாழட்டும்! வளரட்டும்.
    Next Story
    ×