search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் விரும்பும் காதல் டாட்டூ
    X

    பெண்கள் விரும்பும் காதல் டாட்டூ

    பெண்கள் இப்போது காதலன் பெயரை நிரந்தர டாட்டூவாக பதித்துக்கொள்வதில்லை. அதற்கு பதில் கையில் காதலனின் முதல் எழுத்தை மட்டும் வரைந்து காதலை உறுதி செய்து கொள்கிறார்கள்.
    காதல் என்பது ஆதிகாலத்து விஷயமாக இருந்தாலும், காதலுக்கான பரிசுகள் புதிது புதிதாக அவதாரம் எடுத்துக்கொண்டிருக்கின்றன. அதில் love என்ற டிசர்ட் பல ஜோடி களாலும் விரும்பப்படுகிறது. அதாவது காதலனின் டிசர்ட்டில் lo மட்டும் இருக்கும். காதலியின் டிசர்ட்டில் ve அச்சிடப்பட்டிருக்கும். இருவரும் இணைந்து நிற்கும்போது love பளிச்சிடும். தங்கள் காதலை வெளிப்படுத்த இருவரும் இணைந்து நிற்கவேண்டும். அதோடு இருவரும் இடுப்போடு கையை போட்டுக்கொண்டு நெருக்கமாக நின்றால்தான் ‘லவ்’ பளிச்சென தெரியும்.

    காதலை ‘டாட்டூ’ மூலம் உறுதிசெய்ய டாட்டூ கலைஞர்கள் விதவிதமாக சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதயத்தில் ஆரம்பித்து ஊசி முனைபோல் ஊடுருவும் டாட்டூவை வரைய காதலர்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் அது காதலனின் இதயத்தில் இருந்து தொடங்கி காதலியை நோக்கி செல்லும். அதுபோல் காதலியிடம் இருந்து தொடங்குவது காதலனை நோக்கி வரும். ஊசி முனைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்ததுபோல் காட்சியளிக்கவேண்டும் என்றால் காதலன்- காதலி இருவரும் கரங்களை அருகருகேவைக்க வேண்டும்.

    அப்போது கையோடு கை உரசி காதல் உணர்வுக்கு சூடுஏற்றும். இந்த ‘இதய ஊசி டாட்டூ’வை வரைய காதலர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஒரே டாட்டூ கலைஞரை நாடவேண்டும். ஏன்என்றால் அவர் இரு கை களையும் பார்த்து ஒரே மாதிரி அளந்து வரைந்தால் மட்டுமே ஊசி முனை சரியாக ஒன்றை நோக்கி இன்னொன்று பாய்வதுபோல் இருக்கும். ஒருவர் இதயத்தில் இருந்து இன்னொருவர் இதயத்திற்கு (காதல்) அம்பு பாய்வது போலவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

    இப்போது நிறைய காதலர்கள் இந்த டாட்டூ விஷயத்தில் கவனமாக இருக்கிறார்கள். அதாவது, அறிமுகமாகும் முதல் காதலர் தினத்தில் அழியாத டாட்டூவால் கையில் காதலன் பெயரை வரைந்த பலர், அடுத்த காதலர்தினத்திற்குள் காதலை முறித்துவிடுவதும் உண்டு. அதனால் நிறைய பெண்கள் இப்போது காதலன் பெயரை நிரந்தர டாட்டூவாக பதித்துக்கொள்வதில்லை. அதற்கு பதில் கையில் காதலனின் முதல் எழுத்தை மட்டும் வரைந்து காதலை உறுதி செய்து கொள்கிறார்கள்.

    “முன்பு பெண்கள் நெஞ்சில்கூட காதலன் பெயரை டாட்டூவாக்கினார்கள். இப்போது காதுகளின் பின்பகுதியில், கழுத்தில், கைவிரல்களில் மட்டும் காதலனின் பெயரின் ஆங்கில முதல் எழுத்தை பதிக்கிறார்கள். ஆண்கள் தோளின் பின்பகுதியிலும், கால் விரல்களிலும் பதிக்கிறார்கள்” என்கிறார், சென்னையை சேர்ந்த டாட்டூ கலைஞர் ஒருவர்.

    இதுவரை காதல் ஜோடிகள், காதலை வெளிப்படுத்த தலை முடியை பயன்படுத்தியதில்லை. இந்த ஆண்டு சில ஜோடிகள் பிரபலமான பியூட்டி பார்லர்களுக்கு சென்று தங்கள் தலையில் அடர்நிறத்தில் பெயிண்ட் பூச ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் இரு சக்கர வாகனத்தில் பறக்கும் ஜோடிகள். இருவரது தலையிலும் ஒரே மாதிரி பெயிண்ட் மூலம் அடர்த்தியாக காதல் சின்னத்தை வரையும்படி கேட்டிருக்கிறார்கள். பளிச்சென தெரியும்படி அந்த அலங்காரம் இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் காதலர் தினத்தன்று ஒரே பைக்கில் பறக்கும்போது பின்னால் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்களது தலையில் காதல் பெயிண்ட்டால் பூத்திருப்பதை எல்லோரும் பார்க்கவேண்டுமாம்.



    கூந்தலில் காதலில் வெளிப்படுத்த விரும்பியிருக்கும் டீன்ஏஜ் பெண் ஒருவரிடம் அதுபற்றி கேட்டபோது, “எல்லா நாளும் என் முடி ஒரே நிறத்தில் இருக்கும். காதலர் தினத்தன்று அது வித்தியாசமான வர்ணத்தில் ஜொலிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். காதல் என்றாலே அது கலர்புல்லான உணர்வு அல்லவா.. அதை வித்தியாசமாக கூந்தலில் காட்ட ஆசைப்பட்டிருக்கிறோம். என் காதலனிடம் இந்த ஆசையை கூறி, அவனும் அதுபோல் செய்யவேண்டும் என்று சொன்னேன். அவனும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டான். அந்த அலங்காரத்தை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி, ஏகப்பட்ட ‘லைக்’குகளை அள்ள இருக்கிறோம்” என்றார்.

    காதலனும், காதலியும் பரிமாறிக்கொள்ள புதுப்புது காதல் பரிசுகளும் வந்துள்ளன. காதலியின் இதழ்களை ருசித்ததுபோல் தினமும் காபியை பருகவேண்டும் என்று கருதி ‘காதல் காபி கப்’களை விதவிதமாக விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். இந்த கப்களில் இதயம் இடம்பெற்றிருக்கிறது. இதனை பரிசாக கொடுத்தால் தினமும் காலையில் காதலன் நினைவுடன் காதலியும், காதலி நினைவுடன் காதலனும் காபி பருகிக்கொள்ளலாம். இந்த காபி கப்பிலே நிறைய விஷயங்கள் இருக்கின்றன. காதலனும், காதலியும் காதல் சின்னத்தை தூக்கிக்கொண்டு பறப்பதுபோலவும், இரண்டு கப்களும் அருகருகே இருக்கும்போது சும்மா ஒரு உம்மா கொடுப்பது போலவும் வரைந்திருக்கிறார்கள். இந்த காதலர்கள் தினத்திற்கு இத்தகைய கப்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.

    ‘காதல் டாட்டூ’ கவனிக்க வேண்டியவை

    டாட்டூ வரைந்த பின்பு அடுத்த 20 நாட்கள், அதன் மீது சோப்போ, ரசாயனங்களோ பட்டுவிடக்கூடாது. அதனால் டாட்டூ கலைஞரிடம் அதன் பராமரிப்பு முறை பற்றி விளக்கமாக கேட்டுக்கொள்ளுங்கள்.

    டாட்டூ ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜி ஏதாவது ஏற்படுவதுபோல் இருந்தால், உடனே அதில் தேங்காய் எண்ணெய் பூசலாம். உடனே சரும நோய் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.

    டாட்டூவாக காதலனின் பெயரை வரைந்து கொண்டவர்கள், காதல் தோல்வியடைந்துவிட்டால் அதற்காக ரொம்ப கவலைப்படவேண்டியதில்லை. அதையே ஒரு புதிய டிசைனாக மாற்றி, பெயரை மறைத்துவிடலாம்.

    தேர்ச்சி பெற்ற கலைஞர்களைக்கொண்ட தரமான மையங்களில் மட்டும் டாட்டூ வரையுங்கள்.
    Next Story
    ×