search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோபத்தை புதைப்போம்
    X

    கோபத்தை புதைப்போம்

    வார்த்தைகளை சிந்திவிடக்கூடாது என்றே அனைவரும் நினைத்தாலும், நிலைதடுமாறும் போது உதடுகளையும் தாண்டி ஒலிச்சத்தம் வெற்றி பெற்று விடுகிறது.
    மனித எண்ணங்கள் எப்போதும் ஒன்றுபோல இருப்பதில்லை. உணர்வுகளிலும் அப்படித்தான். வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கற்பிக்கும் மனிதர்கள் மத்தியில் வாழும்போது, பார்வையும் செயல்களும் கூட எதிர்வினையாற்றும். அனைத்துக்கும் விளக்கம் சொல்வதோ, அனைத்தையும் ஏற்றுக்கொள்வதையோ, விரைவு வாழ்க்கையில் நினைத்தும் பார்க்க முடியாது.

    தடித்த வார்த்தைகள் எத்தனை மனதை புண்படுத்தி இருக்கும். தன் கீழ் பணியாற்றுபவர்கள் சொல்லும் சிறந்த ஆலோசனைகளை கூட கேட்காமல் நிராகரிக்கும்போது அவர்களின் மனம் எத்தனை புண்படும் என்பதை எல்லாம் சிந்திக்கக்கூட நேரம் இருக்காது. காரணம், அடுத்த நிமிடத்தை தேடி பயணிக்கும் காலச்சக்கரத்துக்குள் இருக்கிறோம். 

    காலச்சக்கரத்தை பின்னோக்கி பார்க்க ஓய்வு காலம் மட்டுமே நேரம் ஒதுக்குகிறது. அப்போது கண்ணீரும், கவலை தோய்ந்த முகமும் என்ன மகிழ்ச்சியை கொடுத்து விட முடியும். வார்த்தைகளை சிந்திவிடக்கூடாது என்றே அனைவரும் நினைத்தாலும், நிலைதடுமாறும் போது உதடுகளையும் தாண்டி ஒலிச்சத்தம் வெற்றி பெற்று விடுகிறது. அந்த ஒலியின் குணம் புண்படுத்துவது. 

    ‘தீயினால் சுட்டப் புண் உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்று அய்யன் திருவள்ளுவன் இதைத்தான் கூறிச்சென்றார். மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இருக்கும் மிக முக்கிய வித்தியாசம், மனிதனால் சிரிக்க முடியும். மற்றவையும் சிரிக்கலாம். ஆனால் அதை நாம் உணர முடியாது. ஆனால் மனிதனின் சிரிப்பை, அழகிய புன்னகையை அனைவரும் உணர முடியும். கோபப்படும் விலங்குகள் கூட சிலநேரம் மனிதரின் சாந்தமான புன்னகைக்கு அடங்கிப்போகும்.

    எப்போதோ பேசிவிட்டு பிரிந்துபோன உறவுகள் தென்பட்டால் மகிழ்வுடன் வணங்குவோம். சிரிக்க சிரிக்க விளையாடி பழைய கோபங்களை புதைத்துப்போடுவோம்.

    செல்லும் இடங்கள் எல்லாம் குப்பைகளை விட்டுச்செல்லாமல் நல்ல எண்ணங்களை விட்டுச்செல்வோம். கோபங்களை சுமந்து செல்லாமல் புதிய கனவுகளை சுமந்து பயணப்படுவோம். நாம் நடக்கும் வழியில் வன்மமும், வெறிகளும் மிதிபடட்டும். அன்பின் பாதச்சுவடுகள் பதியட்டும்.

    -முடிவேல் மரியா
    Next Story
    ×