search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண் கொடுமை சாபக்கேடு -  விமோசனம் எப்போது?
    X

    பெண் கொடுமை சாபக்கேடு - விமோசனம் எப்போது?

    ‘பெண்ணுரிமை காப்போம்’ என்ற குரல் ஓங்கி ஒலித்தாலும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள், அத்துமீறல்கள், அடக்குமுறைகள் அதிகரித்துவருவதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
    இன்று (ஜனவரி 24-ந் தேதி) தேசிய பெண் குழந்தைகள் தினம்.

    அடுப்பெரிக்கும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கூறப்பட்ட நிலை மாறி, இன்று கல்வியிலும், பணித்தளங்களிலும் ஆண்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை என்று கூறுமளவுக்கு பெண்கள் ஜொலிக்க தொடங்கிவிட்டார்கள். இருப்பினும், வாழ்க்கைப் பாதையில் அவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்விலும் பல சவால்களை சந்திக்க வேண்டி இருப்பது நிதர்சன உண்மை.

    ‘பெண்ணுரிமை காப்போம்’ என்ற குரல் ஓங்கி ஒலித்தாலும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள், அத்துமீறல்கள், அடக்குமுறைகள் அதிகரித்துவருவதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இதில் பெண் குழந்தைகளின் நிலை பற்றி சொல்லவே வேண்டாம். நாட்டின் எங்கோ ஒரு மூலையில் தினமும் பெண் குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி வருவது வேதனைப்பட வேண்டிய விஷயம்.

    பெண்களாக பிறந்தநாள் முதலாக அவர்கள் வாழ்வின் இறுதிநாள் வரை வாழும் காலத்தில் படும் இன்னல்கள், சந்திக்கும் சோதனைகள் ஏராளம் என்பதை தேசிய குற்ற ஆவண காப்பகம் படம் பிடித்து காட்டுகிறது.

    அதுதரும் புள்ளி விவரப்படி, கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 54 ஆயிரத்து 328 குழந்தைகள் கடத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் பெண் குழந்தைகள் மட்டும் 39 ஆயிரத்து 842 பேர் என்பது அதிர்ச்சியூட்டும் தகவல். 16 ஆயிரத்து 937 பெண் குழந்தைகள் திருமணத்துக்காகவும், 59 பேர் பாலியல் தொழிலுக்காகவும் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட 1,562 பிஞ்சு குழந்தைகள் வலுக்கட்டாய உடலுறவால் சிதைக்கப்பட்ட கொடூரமும் நடந்தேறி இருக்கிறது.

    அந்த ஆண்டில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 816 பெண் குழந்தைகள் மாயமாகி இருக்கிறார்கள். இவர்களில் 34 ஆயிரத்து 814 பேர் ஆண்டின் இறுதி வரை கண்டுபிடிக்கப்படவில்லை. பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை காக்கும் சட்டப்பிரிவின் (போஸ்கோ) கீழ் மட்டும் 36 ஆயிரத்து 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வெளிச்சத்துக்கு வந்தவை மட்டுமே இத்தனை.

    பெண் குழந்தைகள் வளர்ந்த பின்பும், அவர்களை துரத்தும் துயரங்கள் முற்றுப்புள்ளி பெறுவதில்லை. 2015-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணை கொடுமைகள் உள்பட பெண்களின் நிம்மதியை பறித்த நிகழ்வுகள் தொடர்பாக மாத்திரம் 3 லட்சத்து 29 ஆயிரத்து 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே அடுத்த ஆண்டு (2016) 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 வழக்குகளாக அதிகரித்துள்ளது. 

    காக்கும் அரணாக விளங்க வேண்டிய கணவன்மார்கள், உறவினர்களால் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 434 பெண்கள் கொடுமைகளை அனுபவித்து இருக்கிறார்கள். பெண்களை கடத்தியதாக 64 ஆயிரத்து 519 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. 39 ஆயிரத்து 68 பெண்களின் கற்பு களவாடப்பட்டு உள்ளது. அதாவது தினமும் சராசரியாக 100-க்கும் அதிகமான பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

    இத்தகைய குற்றங்கள் குறைவதற்கு மாறாக எகிறிக்கொண்டு இருக்கிறது. இது நம் இந்திய திருநாட்டுக்கு எத்தனை அவமானகரமானது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா? பெண்ணியம் போற்றும் நம் தேசத்துக்கே இது தலைகுனிவல்லவா? பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் இச்சமூகம் அக்கறைகொள்வதில்லை. ஆண் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை இன்னும் பல இல்லங்கள் பெண் பிள்ளைகளுக்கு வழங்குவதில்லை. 

    விளைவு, இந்தியாவில் மொத்த பெண் குழந்தைகளில் 46 சதவீதம் பேர் ரத்த சோகையாலும், ஆரோக்கியமின்மையாலும் பாதிக்கப்படுவதாக யுனிசெப் நிறுவனம் (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) கவலை கொள்ளும் தகவலை தருகிறது. குழந்தை பருவம் முதலே பெண்கள் சிலர் தங்கள் ஆரோக்கியத்தில் தாங்களே அக்கறைகொள்வதில்லை என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். பெண் குழந்தை பிறந்தால் விரக்தி அடையும் அல்லது கவலைகொள்ளும் பெற்றோர் இன்னுமும் நம் சமூகத்தின் ஒரு அங்கத்தினராய் இருப்பது வேதனையல்லவா?



    இப்பூமி பந்தில் அரங்கேறும் குழந்தை திருமணங்களில் மூன்றில் ஒரு பங்கு நம் இந்தியாவில் தான் நடக்கிறதாம். அப்படியென்றால், இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது? பெண்களை நாட்டின் கண்களாக கருதும் இம்மண், பெண்ணுக்கு எதிரான தாக்குதல்களை, அடக்குமுறைகளை அவிழ்த்துவிட்டு கறைபடிந்து நிற்கிறதே...! இந்த அவமான கறையை நாம் என்றைக்கு துடைத்தெறிய போகிறோம்?

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ந்தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பெண் பிள்ளைகளுக்கு சுகாதாரம், வாழ்வியல் சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவது, சமூக கொடுமைகளை தடுத்தல், பாலின பாகுபாட்டை களைவது போன்றவை தான் இந்த தினத்தின் நோக்கம். அப்படி இருக்கையில் ஆண்டுதோறும் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலை போல் குவிவது எத்தனை முரண்?

    பெண் சமூகத்துக்கு எதிராக போர்புரியும் அத்தனை நிகழ்வுகளும் இச்சமூகத்தில் இனியும் தொடரக்கூடாது. இதற்கு இருபால் குழந்தைகளுக்கும், பெற்றோர் தாய், தந்தையாக இருப்பது மட்டுமின்றி உற்ற நண்பர்களாக இருந்து, அவர்கள் மீது பாசம் பொழிய வேண்டியதும் அவசியமாகிறது. அவர்களுக்கு நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், தனிமனித ஒழுக்கத்தை சிறுவயதிலேயே பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். பெற்றோர், பிள்ளைகள் இடையேயான பாசத்தில் விரிசல் விழும் போது தான் போலி பாசங்களிடம் பிள்ளைகள் வீழ்ந்து போய் ஏமாறுகிறார்கள். 

    பிள்ளைகளுக்கு தனிமையான சூழலை வகுத்து கொடுக்காதீர்கள். தனிமைதான் மனித மனதை சலனம் நிறைந்த பாதையில் நடைபோட செய்கிறது. தங்களுக்கு கிடைக்கும் சுதந்திர பொழுதில் தடம்மாறிவிடாமல் கண்ணும் கருத்துமாக இருக்க பிள்ளைகளும் கற்றுக்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களின் அபரித வளர்ச்சியும் பல நேரங்களில் பெண்களுக்கு எதிராக வினை புரிகிறது. எனவே, அவற்றை அளவறிந்து பயன்படுத்த வேண்டியதும் அவசியம். இது ஆண்களுக்கும் பொருந்தும். ஆண்கள், தாங்கள் பெண்களின் காவலர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    இன்றைய சினிமாக்கள் பலவும் இச்சமூகத்தை சீர்திருத்துவதற்கு மாறாக, சீர்கேட்டுக்கான வித்தை விதைத்துவிடுகிறது. பெற்றோர், அண்டை வீட்டார், சமூகம், சட்டம், அரசு என ஒட்டுமொத்த தேசமும், பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஒரு பாதுகாப்பு வேலியாக இருந்து, அவர்களை காக்க வேண்டுமே தவிர, பயிரை மேயும் வேலியாகி விடக்கூடாது.

    கருவறை முதல் கல்லறை வரை துயர கடலில் பயணம் மேற்கொள்ளும் பெண்சமூகம் இனியேனும் மகிழ்ச்சி களிப்பில் குதூகலிக்க துணை நிற்போம். பெண்ணிய கொடுமை ஒரு சாபக்கேடு. இதற்கு விமோசனம் கிடைக்க வழிகோலுவோம்.

    - தமிழ்நாடன்
    Next Story
    ×