search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களுக்கான டிப்ஸ்: வாஷிங் மெஷின் பராமரிப்பும் பாதுகாப்பும்
    X

    பெண்களுக்கான டிப்ஸ்: வாஷிங் மெஷின் பராமரிப்பும் பாதுகாப்பும்

    வாஷிங்மெஷின்கள் வைத்திருப்போர் அதனை சரிவர பராமரிப்பதும், பாதுகாப்பதும் வேண்டும். அந்த வகையில் வாஷிங் மெஷின் பராமரிப்புக்கு ஏற்ற சில குறிப்புகளை காண்போம்.
    அனைவர் வீடுகளிலும் துணிகளை துவைப்பதற்கு வசதியாக வாஷிங் மெஷின்கள் உள்ளன. இந்த வாஷிங் மெஷின்கள் தினசரி தண்ணீர், சோப்பு தூள் போன்றவற்றில் இயங்க வேண்டியுள்ளது. இதனால் வாஷிங் மெஷின்களின் உட்புறம், வெளிபுறம் விரைவில் துருபிடிப்பது, உட்புறப்பகுதிகளில் துர்நாற்றம், சில மாறுபட்ட செயல்முறைகளில் இயக்க பாதிப்புகள் போன்றவை ஏற்படும். எனவே வாஷிங்மெஷின்கள் வைத்திருப்போர் அதனை சரிவர பராமரிப்பதும், பாதுகாப்பதும் வேண்டும். அந்த வகையில் வாஷிங் மெஷின் பராமரிப்புக்கு ஏற்ற சில குறிப்புகளை காண்போம்.

    வாஷிங்மெஷினை இயக்கிடும் போது கவனிக்க வேண்டியவை :
     
    வாஷிங்மெஷினில் துணிகளை அதில் குறிப்பிட்டுள்ள அளவின் படியே உட்செலுத்த வேண்டும். அதிக துணிகளை போட்டு நிரப்பி வாஷிங்மெஷினின் இயக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது. சரியான அளவு துணி உள்ள போது தான் சிறப்பான வாஷிங் மற்றும் உலர்த்துதல் பணி சிறப்புற இருக்கும். மெஷினின் ஆயுட்காலமும் நீடித்து இருக்கும். அது போல் அதிக கனமாக துணிகளான பெட்ஷீட், உல்லன் போர்வைகளை துவைக்க முயலும் போது அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். சில சமயம் ஓவர்லோட் வார்னிங் தந்தும் அசட்டையாக இருந்தால் மெஷின் அவ்வளவுதான்.

    வாஷிங் மெஷினை சமதளமான இடத்தில் ஏற்ற இறக்கமின்றி வைத்திட வேண்டும். அப்போது மெஷினில் இருந்து அதிக சத்தமின்றி, உதறல் ஏதும் இன்றி வாஷிங்மெஷின் இயங்கிட முடியும். அது போல் வாஷிங்மெஷினில் துணி செலுத்தும் அளவு பிரிவுகளுக்கு ஏற்ப துணியை செலுத்தி அந்த பிரிவு பட்டன்களை அழுத்தி விட வேண்டும்.

    வாஷிங்மெஷினில் உள்ள பில்டர்களை சுத்தம் செய்தல் :

    பில்டர்களில் அடைப்பு ஏற்பட்டு சுத்தம் செய்யாவிடின் தண்ணீர் உட்செலுத்துவது மற்றும் தண்ணீர் வெளியேறுவதில் பிரச்சினை ஏற்படும். எனவே அவ்வப்போது சுத்தம் செய்யவும். மெஷர் பில்டர்களை ஆண்டுக்கு இருமுறை சுத்தம் செய்யவும். அது போல் டெபிரிஸ் பில்டரை ஆண்டுக்கு ஐந்து (அ) ஆறு முறை சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் அடைப்புகள் ஏற்படாது.



    சோப்புதூள் மற்றும் திரவம் போடும் டிராயரை மாதம் ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது. இல்லையெனில் அதில் பழைய சோப்பு தூள் சேர்ந்து அடைத்து கொள்ளும் சில சமயம் திரவங்கள் ஒழுகி வீணாகி விடும். அதுபோல் சரியான தரமான சோப்பு தூள்களை அதற்கு தேவையான அளவுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    வாஷிங் டிரம்-யை சுத்தம் செய்திடல் வேண்டும்:

    சில வாஷிங்மெஷின்களில் உட்புற டிரம்-யை சுத்தம் செய்ய வசதியான அமைப்பு உள்ளது. அதனை இயக்கி உட்புற டிரம்-யை சுத்தம் செய்து கொள்ளலாம். அப்படி இல்லையெனில் மாதம் ஒரு முறை துணிகள் ஏதுமின்றி சுடு தண்ணீர் நிரப்பி அதில் 2 கப் வினிகர் விட்டு துவைக்க செய்யவும். பின் நடுவில் கொஞ்சம் சோப்புதூள் போட்டு முழு சுழற்சி அளவு வாஷிங் செய்யவும். பிறகு டிரையினர் வழியாக தண்ணீரை திறந்து விட்டு வாஷிங்மெஷினை சற்று நேரம் திறந்து வைத்திருக்கவும்.

    அதுபோல் ஒவ்வொரு முறை துணி துவைத்தலுக்கு பின் வாஷிங் மற்றும் ஸ்பின் பகுதிகளை திறந்தே வைத்திட வேண்டும். இதன் மூலம் உட்புறம் காற்று சென்று துர்நாற்றம் வீசுவதை குறைக்கும். உட்புற பகுதி முழுமையாக காய்ந்து விட உதவிகரமாக இருக்கும்.

    எப்போதும் வாஷிங்மெஷினின் குழாய்களை சோதித்து பார்த்தே வாஷிங் மெஷினை இயக்கிட வேண்டும். குழாய்களில் பாதிப்பு இருந்தால் தண்ணீர் உட்செல்வதில் பிரச்சினை ஏற்பட்டு வாஷிங் மெஷின் இயங்குவதில் பிரச்சினை ஏற்படும்.
    Next Story
    ×