search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களால் பெண்களுக்கு வரும் பிரச்சனைகள்
    X

    பெண்களால் பெண்களுக்கு வரும் பிரச்சனைகள்

    பெண்ணே, அடிபடாமல் பாடங்கள் இல்லை. அடிபடும்போது அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவேண்டும்.
    பெண்கள் வீட்டிலேயே இருந்து குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்ட காலம் மாறிவிட்டது. இன்று பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பொருளாதார நிலையைச் சமாளிக்க, தேவைகளை சீராக நிறைவேற்றிக்கொள்ள கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. அதனால் படித்து முடித்த உடனே பெண்கள் வேலைக்கு சென்று சம்பாதிக்க முன்வருகிறார்கள். வேலைக்கு செல்லும் இடத்தில் அவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும்? அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும்? என்பதை பார்ப்போம்!

    இன்றைய சூழலில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்க வேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பழக்கத்தின் எல்லை எது வரை இருக்கலாம்? என்பதை பெண்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

    பெண்களால் பெண்களுக்கே பிரச்சினைகள் வரும். சில பெண்கள் அதிக சலுகைகள் பெற உயர்அதிகாரிகளிடம் நெருங்கிய பழக்கம் வைத்துக் கொள்வார்கள். அதே அலுவலகத்தில் நேர்மையாக யாருக்கும் அடிபணியாமல் தன் கடமையில் கண்ணும் கருத்துமாக பணி புரியும் பெண்ணும் வேலைபார்ப்பார். நிறுவனத்தை நேசிக்கும் அந்த பெண்ணிற்கும் - அதிகாரிகளிடம் நெருங்கிய பழக்கம் வைத்துக்கொள்ளும் பெண்ணிற்கும் கண்டிப்பாக ஒத்துப் போகாது.

    கடமையை ஒழுங்காக செய்யும் பெண்ணை நிர்வாகம் இழக்க விரும்பாது என்றாலும், நெருங்கிப் பழகும் பெண்ணை திருப்திப்படுத்தவும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். அதனால் உண்மை உழைப்பாளி சில அவமானங்களை சந்திக்க நேரலாம். இப்படிப்பட்ட நேரங்களில் தங்கள் எதிர்ப்பை காட்டாமல் அதை விட நல்ல வேலையை தேடிக்கொண்டு நல்ல முறையில் அந்த நிறுவனத்திலிருந்து விலகி கொள்வது நலம்.

    பெண்ணே, அடிபடாமல் பாடங்கள் இல்லை. அடிபடும்போது அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவேண்டும். இந்த நவீன யுகத்தில் ஆண்-பெண் நட்பில் ஒரு நபரிடம் ஏமாந்து விட்டோம் என்றால் அதிலிருந்து விடுபட இன்னொரு நபரிடம் நட்பு என்று அடிமையாகாமல் பணிகள் பக்கம் கவனத்தை திருப்பி நம் பணிகளை நேசித்து விடாமுயற்சியோடு உழைக்கவேண்டும். அப்போது உயர் பதவிகள் தானே தேடிவரும். அதுபோல் நட்புகளையும் தேடிச்செல்லவேண்டாம். நல்ல நட்புகள் நம்மைத் தேடிவரும்.

    நாம் வாழ்வது உயிர்ப்புடன் கூடிய வாழ்க்கை. உயிரற்ற இயந்திரத்தனமான வாழ்க்கை அல்ல. இயந்திரத்தனமாக வாழ்பவர்கள் அதிலேயே மூழ்கடிக்கப்பட்டு சந்தோஷமற்ற முகங்களுடன் வளைய வருவதை நாம் பார்க்கலாம். வாழ்க்கையை அந்தந்தத் தருணத்துக்கு ஏற்றபடி உணர்வுப்பூர்வமாக, முழுமையான விழிப்புணர்வுடன் ரசனையுடன் நேசித்து வாழத் தொடங்குவோம். உணர்வோம், அர்த்தமுள்ள வாழ்க்கையை!!
    Next Story
    ×