search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கருத்தடைக்கு பல்வேறு வழிமுறைகள்
    X

    கருத்தடைக்கு பல்வேறு வழிமுறைகள்

    கருத்தடை வழிமுறைகள், தற்காலிக முறைகள், நிரந்தர முறைகள் என தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன. கருத்தடைக்கான பல்வேறு வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
    கருத்தடை வழிமுறைகள், தற்காலிக முறைகள், நிரந்தர முறைகள் என தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன. தற்காலிக முறைகளில் பல கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கருத்தடைக்கான பல்வேறு வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

    காண்டம்

    காண்டம் எனப்படும் ஆணுறை மற்றும் பெண்ணுறை, எளிய தற்காலிக கருத்தடை சாதனம். உடலுறவின்போது ஆணோ, பெண்ணோ இதை அணிந்துகொண்டால், விந்து-சினைமுட்டை தொடர்பைத் தடுக்கலாம். இதனால் கருத்தரிப்பு தவிர்க்கப்படும். உறைகளுடன் சேர்த்து 'ஸ்பெர்மிசைட்' எனப்படும், விந்துகளைக் கொல்லும் மருந்துகளையும் பயன்படுத்துவதுண்டு. உடலில் எந்த வகையிலும் வினைபுரியாமல் உடலின் வெளியே மட்டும் செயல்படுவதால் இது பாதுகாப்பானது. மேலும், உடலுறவினால் பரவும் நோய்களைத் தடுக்கவல்ல ஒரே கருத்தடை சாதனம் காண்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆணுறையில் 18% மற்றும் பெண்ணுறையில் 21% தோல்விகள் ஏற்பட வாய்ப்புண்டு.

    கருத்தடை மாத்திரை

    பெண்கள், சினைமுட்டை வெளிவராமல் தடுக்கக்கூடிய 'கான்ட்ராசெப்டிவ் டேப்லட்ஸ்' எனப்படும் கருத்தடை மாத்திரைகளை மாதவிடாயின் இரண்டாம் நாள் தொடங்கி 21 நாட்கள் உட்கொள்ள வேண்டும். மியூக்கஸ் சுரப்பை அடர்த்திபடுத்தியும் இது கருத்தடை செய்யும். தொடர்ந்து உட்கொள்ள வேண்டும், தினமும் ஒரே நேரத்தில் உட்கொள்ள வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை, மருத்துவ ஆலோசனையுடன் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்தடை மாத்திரை 9% தோல்வியடைய வாய்ப்புள்ளது. மேலும் பெண்களுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பது கவனிக்க வேண்டியது.

    அவசரநிலை மாத்திரை

    உடலுறவு முடிந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் பெண்கள் எடுத்துக்கொள்ளும் அவசரநிலை கர்ப்பத்தடை மாத்திரை, (Emergency Contraception), கரு உருவாகும் வாய்ப்பை 58% தடுக்கவல்லது.

    கருத்தடை பேட்ச்

    'கான்ட்ராசெப்டிவ் பேட்ச்(patch)' என்று கூறப்படும் கருத்தடை பேட்ச்களை முன்வயிறு, பின்புறம், முதுகு என்று பெண்கள் தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டால், அது சருமம் வழியாகக் கடத்தும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் ஹார்மோன்கள் சினைமுட்டை உருவாதலைத் தடுத்து கருத்தரிப்பைத் தவிர்க்கும். மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து சீரான இடைவெளியில் ஒட்டிக்கொள்ளக்கூடிய இந்த பேட்ச், இந்தியாவில் அவ்வளவாக உபயோகத்தில் இல்லை.

    9% தோல்வி ஏற்பட வாய்ப்புள்ள கருத்தடை சாதனம் இது.



    கருத்தடை ஊசி

    பெண்கள் பொதுவாக மூன்ற மாத இடைவெளியில் போட்டுக்கொள்ளும் கருத்தடை ஊசி, ப்ரொஜெஸ்டோஜென் ஹார்மோனை வெளியிட்டு கருமுட்டை உருவாதலைத் தவிர்ப்பதோடு, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி விந்து கருப்பை அடையாமலும் தடுக்கும். உலகம் முழுக்கப் பரவலாகப் பின்பற்றப்படும் முறை இது.

    6% தோல்வியடைய வாய்ப்புள்ள கருத்தடை ஊசி முறை, பெண்களுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

    நீண்டகால கருத்தடை

    நீண்டகாலத்துக்கான கருத்தடை சாதனம், காப்பர் டி(Copper T). மாதவிலக்கின் இறுதி நாளில், பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக மருத்துவரால்
    உட்செலுத்தப்படும் இது, அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டது. இதில் ஹார்மோன்கள் கொண்ட காப்பர் டி, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தி ஆக்கி விந்துக்கள் முட்டையை அடைவதைத் தவிர்க்கும், ஹார்மோன்கள் இல்லாத காப்பர் டி, காப்பர் அணுக்களைச் செலுத்தி விந்துக்களின் இயக்கத்தைத் தடுக்கும். இதை, விரும்பும்போது அகற்றி, கருத்தரிக்கலாம்.

    காப்பர் டி 1% மட்டுமே தோல்வியடைய வாய்ப்புள்ளது என்பதால், இந்தியப் பெண்கள் பரவலாக இதைப் பயன்படுத்துகிறார்கள். சில பெண்களுக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

    நிரந்தர முறைகள்


    குழந்தை வேண்டாம் என நிரந்தர முடிவெடுக்கும் பட்சத்தில், பெண்கள் கருமுட்டைக் குழாயை அடைக்கும் அல்லது அகற்றும் ட்யூபக்டமி(Tubectomy) அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். கருக்குழாய் அடைக்கப்படும் ட்யூபெக்டமியில் மீள்முறை உண்டு. அதாவது, ஒருவேளை மீண்டும் குழந்தை பெற விரும்பினால், குழாயின் அடைப்புகள் நீக்கப்பட்டு கருத்தரிக்க வழி ஏற்படுத்தப்படும். அதுவே, கருக்குழாய் அகற்றப்பட்டிருந்தால், அதற்கு மீள் முறை இல்லை.

    ஆண்கள், விதைப்பையில் இருது விந்து எடுத்துச் செல்லப்படும் பாதையை அடைக்கும் வாசக்டமி(Vasectomy) கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். ட்யூபக்டமியைவிட வாசக்டமி எளிமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×