search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்
    X

    தாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்

    கர்ப்ப காலத்தில் உணவினைக் கட்டுப்படுத்தினால் ஊட்டச்சத்துக் குறைவினை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்திவிடும். தாயாகப்போகும் பெண்ணுக்கு தேவையான சில அறிவுரைகளை பார்க்கலாம்.
    கர்ப்பிணித் தாய்மார்கள் போஷாக்கான மிதமான உணவையே உட்கொள்ளவேண்டும். சராசரியாக இவர்களுக்கு 2500-லிருந்து 2800 கலோரி வரையுள்ள சக்தி உடைய உணவு தேவை. குண்டாக இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்க்குச் சிறிது குறைந்த அளவு சக்தி உடைய உணவு அளித்தால் போதுமானது. கர்ப்ப காலம் முழுவதிலும் உப்பைக் கட்டுப்படுத்துவது நல்லது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அதிக புரதம், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள கலப்பட உணவு உகந்தது. முடிந்தால் நாளொன்றுக்கு ஒரு லிட்டர் பாலினைக் கர்ப்பிணித் தாய்மார்கள் குடிப்பது நல்லது.

    பச்சைக் காய்களிகள் கூடுதல் இரும்புச்சத்தினைக் கொடுக்கும். பழங்களையும், காய்கறிகளையும் இவர்கள் எடுத்துக்கொள்ள வலியுறுத்த வேண்டும். இறைச்சி, மீன், முட்டைகள், ரொட்டி, சாதம், தயிர் போன்றவை இவர்களுக்கு நல்லது.

    கர்ப்ப காலத்தில் உணவினைக் கட்டுப்படுத்தினால் ஊட்டச்சத்துக் குறைவினை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்திவிடும். அதன் விளைவாகக் கர்ப்ப பையிலேயே குழந்தை இறந்துவிடுதல், குறைப்பிரசவம் போன்றவையும், பிரசவத்தில் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கர்ப்ப காலத்தில் அதிகமாகச் சாப்பிடுவதையும் தவிர்க்கவேண்டும்.

    கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் மார்பகங்களைக் கவனித்தல் மிகவும் முக்கியமாகும். மார்பகங்கள் பெரிதாகும் இந்த காலகட்டத்தில் இறுக்கமான, தேவையற்ற அழுத்தத்தை அளிக்கும் துணிகளை அணிய கூடாது. மார்பகங்கள் பெரியதாகவும் கனமானதாகவும் இருந்தால், அதனைத் தாங்குமாறு சரியான உள்ளாடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.

    கர்ப்பத்தின் கடைசி கட்டத்தில் காம்புகளை சோப்பு மற்றும் தண்ணீரினால் தினமும் கழுவி முன்னுக்கு இழுத்து விடவேண்டும். மலச்சிக்கலை கர்ப்பிணித் தாய்மார்கள் தவிர்த்தல் நல்லது. அதற்காக மலமிளக்கிகளை உபயோகிக்கக்கூடாது. நிறைய தண்ணீர் குடிப்பது, கீரைகளைச் சாப்பிடுவது, பழங்களைச் சாப்பிடுவது போன்றவற்றைச் செய்தாலேயே மலம் தினமும் முறையாக வந்துவிடும். அதோடு எளிமையான உடற்பயிற்சிகளும் செய்வது மலம் இயற்கையாக வெளிவர உதவும்.

    கர்ப்ப காலத்தில் மன அமைதியுடன் இருத்தல் அவசியம். முடிந்த அளவுக்கு மன இறுக்கத்தைக் குறைத்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதற்கு மனதிற்கு இதமளிக்கும் புத்தகங்கள் படித்தல், தொலைக்காட்சி பார்த்தல், தியானம் செய்தல், கைவினைப் பொருட்களைச் செய்தல் போன்றவை உதவியாய் இருக்கும்.

    Next Story
    ×