search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குறைப்பிரசவம் நடக்கப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்
    X

    குறைப்பிரசவம் நடக்கப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்

    ஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போவதை சில அறிகுறிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் கர்ப்பிணிகளுக்கு தென்பட்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
    பிரசவத்தில் மிகவும் சிக்கலானது குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக நிகழும் பிரசவம். அதாவது 37 வாரங்களுக்கு முன்னதாக நடக்கும் இத்தகைய பிரசவம் குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது. இதனைக் குறை பிள்ளைப்பேறு என்றும், இப்படி குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தை என்றும் அழைப்பார்கள்.

    ஆரோக்கிய குறைபாடு, சுவாசிப்பதில் சிரமம், போன்ற பாதிப்புகள், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற தொற்று பாதிப்புகள் போன்றவற்றை இந்த குறைபிரசவ குழந்தைகள் எதிர்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

    குறை மாத பிரசவத்திற்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டாம். கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் கர்ப்பிணிகளுக்கு தென்பட்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

    கர்ப்பகாலத்தின் கடைசி கட்டங்களில் இந்த கருப்பை சுருக்கம் உண்டாகும். இந்த சுருக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வலி அதிகரித்த அளவு இருந்தால் அது குறை மாத பிரசவ அறிகுறியாக இருக்கலாம். வயிற்றைச் சுற்றி இறுக்கமாக ஒரு கயிற்றால் கட்டுவது போன்ற வலி தோன்றும். இந்த வலி விட்டு விட்டு வரும். கீழே படுப்பதால் அல்லது உங்கள் அங்க நிலைகளை மாற்றுவதால் இந்த பிரசவ வலி குறையாது.

    கர்ப்பகாலத்தின் கடைசி கட்டங்களில் இடுப்பில் ஒரு வித அழுத்த அவ்வப்போது உண்டாகும். ஆனால் இந்த அழுத்தம் மிக அதிகம் உணரப்படும்போது, அது குறை மாத பிரசவ வலியின் அறிகுறியாக இருக்கலாம். இடுப்பு வலி ஏற்படுவதன் காரணம், குழந்தை வெளியில் வர முயற்சிப்பது ஆகும். குழந்தை பிறக்கக் கூடிய நிலைக்கு வந்துவிட்டதை இந்த வலி உணர்த்தும்.

    பிறப்புறுப்பில் திடீரென்று அதிக நீர் வெளியேற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். குறைமாத பிரசவத்தின் மற்றொரு அறிகுறி, சிவப்பு இரத்தம் வெளியேற்றம் அல்லது நீர் வெளியேற்றம். கர்ப்பப்பை வாய் அல்லது பிறப்புறுப்பு வாய் திறந்து கொள்வதால் இந்த நீர் வடிதல் ஏற்படலாம்

    மாதவிடாய் வலியை ஒத்த வலி பிரசவத்தின் அறிகுறியாகும். மோசமான வயிற்று வலியைப் போல் தொடங்கும் இந்த வலி பிரசவ வலியின் ஆரம்ப அறிகுறியாகும். அடுத்த சில மணி நேரத்தில் இந்த வலி குறையாது.

    முதுகுத் தண்டின் கீழ் பகுதியில் அதிக வலி, மற்றும் உங்களால் எங்கும் அசைய முடியாத வலி, உட்கார முடியாமல் நிற்க முடியாமல் வலி ஆகியவை இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது. வலியுடன் கூட, கீழ் முதுகு பகுதியில் ஒரு வித அழுத்தத்தை நீங்கள் உணர முடியும். அதிக பாரத்தை சுமக்கும்போது உண்டாகும் உணர்வு போல் இந்த உணர்வு இருக்கும்
    Next Story
    ×