search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்பிணிகளுக்கு வரும் நார்த்திசுக் கட்டி ஆபத்தா?
    X

    கர்ப்பிணிகளுக்கு வரும் நார்த்திசுக் கட்டி ஆபத்தா?

    கர்ப்பிணிகளுக்கு வரும் எல்லா ‘நார்த்திசுக் கட்டி’களும் ஆபத்தைத் தரும் என்று கூறமுடியாது. அது உருவாகும் இடம் மற்றும் அதன் அளவைப் பொருத்துத்தான் பாதிப்பு ஏற்படும்.
    கர்ப்பிணிக்கு ஏற்படும் கட்டிகளில் பயப்பட வேண்டிய கட்டிகளும் இருக்கின்றன; பயப்படத் தேவையில்லாத கட்டிகளும் இருக்கின்றன. பொதுவாக, கர்ப்பிணிக்கு மூன்று இடங்களில் கட்டிகள் தோன்றலாம். 1.கருப்பை 2. கருப்பை வாய் 3. சினைப்பை. இவற்றில் கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு (Fibroid அல்லது Fibromyoma) எனப்படும்  ‘நார்த்திசுக் கட்டி’பெண்களுக்கு ரொம்பவும் சகஜம்.

    நார்த்திசுக் கட்டி என்பது என்ன?

    கருப்பையின் உட்புறத் தசைகளில் உருவாகும் ஒருவகை கட்டி இது. இயற்கையாகவே பல பெண்களிடம் இது காணப்படுவதுண்டு. சாதாரண கட்டிதான் இது; புற்றுநோயைச் சேர்ந்தது இல்லை. எனவே, இதற்குப் பயப்படத் தேவையில்லை.

    இத்தகைய கட்டிகள் இருக்கும்போது ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது என்பது சற்று சவாலுக்குரியதுதான். என்றாலும், இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளால், கருப்பையில் கட்டி உள்ள பெண்களும் கர்ப்பம் தரித்து, கர்ப்பகாலத்தில் எவ்விதத் தொல்லையும் ஏற்படாமல், சுகப்பிரசவம் ஆவது சாத்தியமாகியுள்ளது.

    முன்பெல்லாம் 100 கர்ப்பிணிகளில் ஒருவர் அல்லது இருவருக்கு இந்தக் கட்டி தோன்றியது. இப்போதைய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகம் பேருக்கு இந்தக் கட்டி தோன்றுகிறது எனத் தெரிய வருகிறது.

    அதிலும் ‘அல்ட்ரா சவுண்ட்’ எனும் பரிசோதனைக் கருவியின் கண்டுபிடிப்புக்குப் பின், இந்தக் கட்டி உள்ளதை உடனடியாகப் பார்க்க முடிவதால், இதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெளிவாகக் கவனித்து சிகிச்சை கொடுக்க முடிகிறது.

    மேலும், இந்தப் பிரச்னை கால் நூற்றாண்டுக்கு முன்புவரை 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்குத்தான் ஏற்பட்டது. ஆனால் தற்போது இளம் வயதிலேயே இக்கட்டி தோன்றுவது வழக்கமாகி வருகிறது. முக்கியமாக, உடற்பருமன் உள்ள பெண்களுக்கு இது வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.



    பரம்பரையாகவும் இது வரக்கூடும்.பெரும்பாலான சமயங்களில் இந்தக் கட்டி இருப்பது வெளியில் தெரியாது. எந்தவித அறிகுறியும் காண்பிக்காமல் ‘அமைதியாக’ இருக்கும். தற்செயலாக வேறு காரணங்களுக்காக வயிற்றை ஸ்கேன் செய்யும்போது பலருக்கும் இது இருப்பது தெரியவரும்.

    இது பெரும்பாலும் ஓர் ஆப்பிள் விதை அளவுக்குத்தான் இருக்கும். சிலருக்கு மட்டும் ஒரு திராட்சைப் பழம் அளவுக்கு இது வளரலாம். ஒருவருக்கு மூன்று கட்டிகள்வரை தோன்றலாம். இவை மெதுவாக வளரும் தன்மையுள்ளவை. மாதவிலக்குக்குப் பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே இவை சுருங்கிவிடும்.

    கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை, கருப்பையை அகற்றும் சிகிச்சை போன்றவற்றை வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

    எல்லா ‘நார்த்திசுக் கட்டி’களும் ஆபத்தைத் தரும் என்று கூறமுடியாது. அது உருவாகும் இடம் மற்றும் அதன் அளவைப் பொருத்துத்தான் பாதிப்பு ஏற்படும். சமயத்தில் அது பெரிய கட்டியாகவே இருந்தாலும் கருப்பையின் உள்ளே மேல்புறத்தில் இருந்தால், கருவைப் பாதிக்காது; சுகப்பிரசவம்கூட ஆகலாம்.

    சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் நார்த்திசுக் கட்டி வளர ஆரம்பித்து, கருவை அழுத்த ஆரம்பித்தால், கருச்சிதைவு ஆவது உண்டு. சிலருக்கு கட்டிகள் உடைய ஆரம்பித்து ரத்தக்கசிவும் அடிவயிற்றில் வலியும் ஏற்படலாம். அப்போது கர்ப்பிணி நல்ல ஓய்வில் இருந்துகொண்டு, அந்தப் புண் ஆறுவதற்கு மருந்துகளை சாப்பிட்டாலே போதும்.

    கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றினால் மட்டும் பிரசவத்தேதிக்கு முன்னரே குழந்தை பிறந்துவிடலாம். குறைப்பிரசவம் ஆகலாம். கருப்பையின் வெளிச்சுவரை ஒட்டி வளரும் கட்டிகள் ஒரு சிலருக்குத் திருகிக் கொள்ளும் (Torsion of fibroid).

    அப்போது அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியை அகற்ற வேண்டியது வரும். கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றும்போது சிசுவின் உடலமைப்பில் சில மாறுதல்கள் உண்டாகலாம். இவை எல்லாம் மிகச் சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியவை.
    Next Story
    ×