search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எச்.ஐ.வி. இரத்தம்: தாயின் வயிற்றில் பாயும் நஞ்சா?
    X

    எச்.ஐ.வி. இரத்தம்: தாயின் வயிற்றில் பாயும் நஞ்சா?

    இரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதமும், பிரசவத்தின் போது 50 சதவீதமும், தாய்ப்பால் கொடுக்கும்போது 15 சதவீதமும் குழந்தையை பாதிக்கும்.
    சாத்தூரைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ள நபரின் ரத்தத்தைச் செலுத்தியதால் அந்த அப்பாவி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான சம்பவம் தமிழகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    எச்.ஐ.வி. என்ற வைரஸ் தொற்றுநோய் அமெரிக்காவில் 1981-ம் ஆண்டிலும், இந்தியாவில் அதுவும் சென்னையில் 1986-ம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனை செய்யப்படாத ரத்தம், சுத்தம் செய்யப்படாத ஊசி, பாதுகாப்பற்ற உடலுறவு, கவனிக்கப்படாத கருவுற்ற தாயிடம் இருந்து பிறக்கும் குழந்தை ஆகிய நான்கு வழிகளில் எச்.ஐ.வி. தொற்று பரவும்.

    பொதுவாக ரத்தம் கொடுக்க தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து மட்டும்தான் ரத்தம் எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் எடுக்கப்படும் அனைத்து ரத்ததான பைகளை மற்றவர்களுக்கு ஏற்றுவதற்கு முன்பு கட்டாயமான பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

    பரிசோதிக்கப்பட்ட ரத்தத்தில் பாதிப்பு இல்லை என்று அச்சிடப்பட்ட சான்றிதழ் ரத்தம் சேகரிக்கப்பட்ட பையில் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பயன்படுத்துவதால் விளையக்கூடிய தொற்றை உடனடியாக தடுக்க முடியும்.

    சாத்தூர் பெண்ணுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வு ரத்த வங்கி ஊழியர்களின் கவனக்குறைவே காரணமாக இருக்க வேண்டும். ரத்ததானம் அளித்த அந்த இளம் நபர் சமீபத்தில் எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆட்பட்டு, ரத்தக்கூறு மாற்று கண்டுபிடிக்கக்கூடிய கால அவகாசத்திற்கு முன்னரே தனது உறவினருக்காக ரத்ததானம் அளித்திருக்கக்கூடும்.

    பாதுகாப்பற்ற உடல் உறவினால் சிறுதுளியில் வரக்கூடிய எய்ட்ஸ் தொற்றை எலிசா முறையில் கண்டுபிடிக்க மூன்று வாரம் முதல் மூன்று மாதம் வரை ஆகலாம்.

    250 மில்லி லிட்டர் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட, ரத்தத்தை பெறும் மற்றவருக்கு ஒருசில நாட்களிலேயே எச்.ஐ.வி. முதல் நிலையான குறுகிய கால ரத்தக்கூறு மாற்று நிலை ஏற்படக்கூடும். சாத்தூர் பெண்ணுக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் ஏற்றப்பட்டு உள்ளது. வீட்டுக்குச் சென்ற சில நாட்களிலேயே அவர் கடுமையான காய்ச்சலுடன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காய்ச்சல் எச்.ஐ.வி.யின் அறிகுறி. பரிசோதனையின் போது எச்.ஐ.வி. தொற்று இந்த பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவனமான உரிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ரத்தம்தான் பாலாக சுரக்கிறது. எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆளாகி இருக்கும் அந்தப் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதமும், பிரசவத்தின் போது 50 சதவீதமும், தாய்ப்பால் கொடுக்கும்போது 15 சதவீதமும் குழந்தையை பாதிக்கும்.

    அந்த பெண்ணுக்கு நிச்சயமாக தொற்றுக்கு பின் தர வேண்டிய தடுப்புபடி எச்.ஐ.வி. கூட்டு மருந்து ஆரம்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். பொதுவாக இது நான்கு வாரங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் ஆபத்தான நிகழ்வுக்கு பின் மூன்று நாட்களுக்குள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனவே இந்த பெண்ணுக்கு மற்ற எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பிரவச காலம் வரை நீடிக்கப்பட வேண்டும்.



    இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் பிறக்க இருக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. தொற்று முழுவதுமாக தடுக்கப்படுவது சாத்தியமாகும். அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் பார்க்கப்பட வேண்டும். பிறந்த உடனே குழந்தைக்கு நிவரம்பின் சிரப் அளிப்பதன் மூலம் எஞ்சிய வாய்ப்பும் முற்றிலுமாக தடுக்கப்படும்.

    என்றாலும் தொடர்ந்து தாய்பாலின் மூலம் எச்.ஐ.வி. தொற்று வரும் வாய்ப்பு 10 சதவீதம் இருப்பதால், இதனைக் கருத்தில் கொண்டு தாய்க்கு வைரஸ் எண்ணிக்கை செய்யப்பட்டு ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும். தாயும், குழந்தையும் தொடர்ந்து ஆறு மாதம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியதிருக்கும். எச்.ஐ.வி. நோய் தொடக்க காலத்தில் மருந்து எதுவும் இல்லாததால் கொடிய உயிர்கொல்லி நோயாக கருதப்பட்டது. தற்போது ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்று எச்.ஐ.வி.யையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். எச்.ஐ.வி. தொற்றுக் கிருமிகள் பாதிக்கப்பட்டவர்கள் முறையான கூட்டு மருந்துகளை உட்கொள்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்க முடியும்

    மன உளைச்சலுடன் இருக்கும் சாத்தூர் பெண்ணுக்கு நம்பிக்கை தரக்கூடிய உளவியல் ஆலோசனைகளை கூற வேண்டும். எச்.ஐ.வி. நோயை கட்டுப்படுத்த மருந்து இருக்கிறது என்று அவரை நம்பும்படி செய்ய வேண்டும்.

    இன்று கிராம மக்களும், படித்தவர்களும், அறியாமையால் ரத்த சோகையாக இருந்தால் ரத்தம் ஏற்றுங்கள் என்று சொல்கிறார்கள். இது தவறு. மருத்துவர்கள் ரத்த சோகையை நீக்க தேவையான சத்துணவு உணவுகளையும், மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தும்படி பரிந்துரை செய்கின்றனர். ஆனால் சிலர் ரத்தம் ஏற்றிக்கொள்கின்றனர். இவ்வாறு ரத்தம் ஏற்றிக்கொள்வதால் பல நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன.

    தேவையான போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை, சாலை விபத்து, அதிக உதிரப் போக்கு, அணுக்கள் குறைபாடு உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான அளவு ரத்தத்தை முன்கூட்டியே முறையாக பரிசோதனை செய்து கொடுக்கப்பட்ட ரத்தத்தையே பயன்படுத்துவார்கள்.

    பெண்கள் கருவுற்றவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் ரத்த சோதனை மறுக்காமல் முறையாக செய்துகொள்ள வேண்டும்.

    ரத்த சோதனையின் போது இரும்பு சத்து மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன. அதை அவர்கள் முறையாக சாப்பிடுகிறார்களா என்று ஊழியர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்குகிறார்கள். இதனால் ரத்தம் ஏற்றப்படுவது குறைவாகவே உள்ளது. இன்று பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்து மருத்துவ உதவிகளையும் மன நல ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

    சாத்தூர் பெண்ணுக்கு நேர்ந்த நிகழ்வு அனைவரின் மனதையும் நெகிழச் செய்யும் நிகழ்வு. இது மருத்துவத்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாடமாக அமைந்து, மற்றொரு இதுமாதிரியான நிகழ்வு நடக்காதிருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

    அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் தங்களுக்கு ஒரு பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது என்பதை முதலில் உணர வேண்டும். சிறந்த உயிர் காப்பு மருந்தாக திகழும் ரத்தமேற்றுதல் பக்க விளைவுகள் கொண்ட ஒரு அபாயகரமான மருந்தாகவும் நிகழக்கூடும் என்பதை மறக்கக்கூடாது. இதில் மனித தவறுகளுக்கு துளியளவும் இடமில்லை என்பதை ரத்த வங்கிகளில் பணிபுரியும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். ரத்த வங்கியில் தானம் செய்ய வரும் உன்னத கொடையாளி நுழையும் தருணத்தில் இருந்து, ரத்தப்பை வெளியே செல்லும் வரை கடைபிடிக்க வேண்டிய முறைகள் அனைவராலும், அனைத்து நேரங்களிலும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். பிறர் நலனுக்காக தன் நலனை பேணி காக்கும் தன்னார்வ ரத்த கொடையாளிகள் ஊக்குவித்து அதிகரிக்க வேண்டும்.

    ரத்தம் ஏற்றுவது கடைசி ஆயுதமாக அனைத்து மருத்துவர்களும் பயன்படுத்த வேண்டும். மாற்று வழிகளை முதலில் செய்ய வேண்டும். அவசியமாக தேவைப்படும் போது, முழு ரத்தம் கேட்காது அந்தந்த ரத்த கூறுகளை மட்டும் கேட்க வேண்டும். ரத்தம் செலுத்தும்போது ஒரு மருத்துவ உதவியாளர் அருகில் இருக்க வேண்டும்.

    ரத்த வங்கி ஒழுங்கு முறைகள் எழுத்திலும், செயலிலும் நடைமுறைப்படுத்தப்படுவதே இம்மாதிரியான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உதவும்.

    டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன்,
    முன்னாள் துணை இயக்குனர்,
    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்.
    Next Story
    ×