search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களுக்கு பிசிஓடி ஏற்படுத்தும் பாதிப்புகள்
    X

    பெண்களுக்கு பிசிஓடி ஏற்படுத்தும் பாதிப்புகள்

    பெண்களை அதிகம் தாக்கும் பிசிஓடி என்றால் என்ன… அதன் அறிகுறிகள், அது ஏற்படுத்தும் பாதிப்புகள், பரிசோதனைகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் அறிந்து கொள்ளலாம்.
    `பிசிஓடி’ எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிற `பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’தான் இன்று பெரும்பான்மை பெண்களின் பிரச்சனையாக இருக்கிறது. முறை தவறிய மாதவிலக்கு, முகமெல்லாம் ரோம வளர்ச்சி, பயமுறுத்தும் பருமன், குழந்தையின்மை… இப்படிப் பல பிரச்சனைகளின் பின்னணியிலும் `பிசிஓடி’யைக் காரணம் காட்டுகிறார்கள் மருத்துவர்கள். பிசிஓடி என்றால் என்ன… அதன் அறிகுறிகள், அது ஏற்படுத்தும் பாதிப்புகள், பரிசோதனைகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் அறிந்து கொள்ளலாம்.

    இது ஒருவகையான ஹார்மோன் தொந்தரவு. பிறவிக்குறைபாடாகப் பெண்களைப் பாதிக்கிற பிரச்சனை. 14 வயது முதல் 40 வயது வரை எப்போது வேண்டுமானாலும் இதற்கான அறிகுறிகள் தோன்றலாம். சினைப்பைகளின் செயல் திறனில் பிரச்சனை ஏற்படுவதைத்தான் `பாசிஸ்டிக் ஓவரிஸ்’ என்கிறோம். அதாவது சினைப்பைகளை இயங்கச்செய்கிற ஹார்மோன்கள் சரியாக வேலை செய்யாததுதான் காரணம்.

    சினைப்பையில் குட்டிக்குட்டி கொப்புளங்கள் போன்று இருக்கும். இந்தக் கொப்புளங்களைக்கண்டு பயப்படத் தேவையில்லை. ஆனால், இவர்களுக்கு ஹார்மோன் கோளாறுகள் இருக்கும் என்பதால், அதில் கவனம் அவசியம். பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஆகிய பெண் ஹார்மோன்களும் டெஸ்டோஸ்டீரான் என்கிற ஆண் ஹார்மோனும் இருக்கும். இவற்றின் சமநிலையில் பிரச்சனை வருவதைத் தான் `ஹார்மோனல் இம்பேலன்ஸ்’ என்கிறோம். சிலருக்கு ஆண் ஹார்மோன் அதிகமிருக்கும். அதற்கேற்ற அறிகுறிகளை உணர்வார்கள்.

    அறிகுறிகள்

    *  முறையற்ற மாதவிலக்கு சுழற்சி (40, 50 நாள்களுக்கொரு முறை வரும் அல்லது மாத்திரைகள் எடுத்துக்கொண்டால்தான் மாதவிலக்கு வரும்).
    *  அதிகளவில் பருக்கள் வரும்.
    *  முடி உதிரும்.
    *  எடை அதிகரிக்கும்.

    எப்படி உறுதிபடுத்துவது?



    *  குழந்தை பிறக்கும்போதே இந்தப் பிரச்சனை இருந்தாலும், அவர்கள் பூப்பெய்தும் வயதில்கூட இதை உறுதிபடுத்த முடியாது. சாதாரணப் பெண்களுக்கே அந்தப் பருவத்தில் மாதவிடாய் முறைதவறி வரும். 20 வயதுக்கு மேலும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் முறையின்றித் தொடர்ந்தால் பிசிஓடி இருக்கிறதா எனப் பார்க்கலாம்.

    *  முறையற்ற மாதவிடாய், குழந்தையின்மைப் பிரச்சனை, அதிகரித்துக்கொண்டே போகும் எடை என குறிப்பிட்ட பிரச்சனைகளுடன் வருபவர்களுக்கு பிசிஓடி இருக்கிறதா எனப் பரிசோதிக்க வேண்டும். எந்த வயதில் பூப்பெய்தினார்கள், எத்தனை நாள்களுக்கொரு முறை மாதவிடாய் வருகிறது என்கிற தகவல்களைக் கேட்டறிய வேண்டும்.

    *  கழுத்துக்குப் பின்பகுதியிலும் முழங்கைகளிலும் கருமை இருக்கிறதா எனப் பார்ப்போம். Acanthosis nigricans  எனப்படுகிற அது ஹார்மோன் தொந்தரவின் அறிகுறி.

    *  அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தால் சினைப்பைகளில் கொப்புளங்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஹார்மோன்களின் அளவுகளை அறியும் ரத்தப் பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படும். இது மாதவிலக்கான இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் செய்யப்படும்.

    * அல்ட்ரா சவுண்டில் பிசிஓடி இருப்பது, உடல்ரீதியான அறிகுறிகள் இருப்பது, ரத்தப் பரிசோதனையில் அசாதாரணம் என இந்த மூன்றில் இரண்டு இருந்தால் அதை `பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்’ என்கிறோம்.

    தீர்வுகள்?

    முறையற்ற மாதவிலக்கு, பருக்கள், குழந்தையின்மை என எந்தப் பிரச்சனைக்காக சிகிச்சைக்கு வந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது தீர்வு. எடை அதிகரிக்க, அதிகரிக்க, ஹார்மோன் தொந்தரவுகள் தீவிரமாகும். அதனால் சினைப்பைகளின் செயல்திறன் பாதிக்கப்படும். பிசிஓடி உள்ளவர்களுக்கு மிக எளிதில் எடை அதிகரிக்கும். எனவே, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வீட்டுவேலைகளைச் செய்வது, சாக்லேட், இனிப்பு போன்ற அதிக கலோரி உணவுகளைத் தவிர்ப்பது எனத் தீவிர முயற்சிகளில் இறங்க வேண்டும்.

    பிசிஓடி இருந்தால் கர்ப்பம் தரிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். குழந்தையின்மைக்கான பிரத்யேக சிகிச்சையிலும் எடைக் குறைப்புதான் பிரதானமாக இருக்கும். பிறகு கருமுட்டை உருவாக மாத்திரைகள் தரப்படும். அவை உதவாதபட்சத்தில் ஊசிகள் போடவேண்டியிருக்கும். அதிலும் முட்டை வளர்ச்சி இல்லாவிட்டால் லேப்ராஸ்கோப்பி செய்ய வேண்டும். கடைசித் தீர்வாக ஐவிஎஃப் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். மற்றபடி பிசிஓடி பிரச்சனையும் சர்க்கரை நோய் மாதிரிதான் இதுவும். முற்றிலும் குணப்படுத்த முடியாது. கட்டுப்பாட்டில் மட்டுமே வைக்க முடியும்.

    மெனோபாஸை நெருங்கும்போது பிசிஓடி பிரச்சனையின் அறிகுறிகள் குறையத் தொடங்கும். மெனோபாஸை நெருங்கும்போது சிலருக்கு அதீத ரத்தப்போக்கு இருக்கும். அவர்களுக்கு டி அண்டு சி செய்து புற்றுநோய் அபாயம் ஏதுமிருக்கிறதா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    டைப் 2 டயாபடிஸ், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவற்றுக்கும் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

    சரியான எடையைப் பராமரிக்க வேண்டும். பிசிஓடி இருக்கும் சிலர் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மூலம் எடையைக் குறைத்து விடுவதால் கர்ப்பம் தரித்துவிடுவார்கள். அதே நபர் மீண்டும் எடை அதிகரித்தால் மறுபடி மாதவிலக்கு சுழற்சி முறைதவறிப் போகும்.
    Next Story
    ×