
உதாரணமாக, பிரசவம் முடிந்த பின் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படும். ஒருசில நிமிடங்களில் இரண்டு அல்லது மூன்று லிட்டர் ரத்தம்கூட வெளியேறலாம். மருத்துவமனையில் இருந்தால், ரத்தப்போக்கின் காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கான தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவிடலாம். அப்படியும் நிற்காவிட்டால், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முடியும். அதற்கும் ரத்தப்போக்கு கட்டுப்படாவிட்டால் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்வோம். ஒருபுறம் அவர்களுக்குத் தேவையான ரத்தத்தையும் ஏற்றுவோம். வீட்டில் இருந்தால் இதெல்லாம் சாத்தியமில்லை.
ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தப் பாதிப்புள்ள பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் பாதிப்பு அதிகமாகும். அதனால் வலிப்புகூட ஏற்படலாம். அதைத் தடுத்து நிறுத்த மருந்துகளோ, கருவிகளோ வீட்டில் இருக்காது. அதுமட்டுமின்றி பிரசவத்தின்போது, கர்ப்பப்பை பாதை , சிறுநீரகப் பாதையில் அடைப்பு அல்லது காயம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. பிறந்த உடனே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக வெண்டிலேட்டர், ஆம்புபேக் உதவியுடன் சரிசெய்துவிடலாம் . வீட்டில் அதற்கும் வாய்ப்பில்லை .
ஒருகாலத்தில், வீட்டிலேயே பிரசவம் பார்த்தோம் என்பது உண்மைதான். ஆனால், தற்போது பலவேறுவிதமான பிரச்சனைகள் பிரசவத்தின்போது ஏற்படுகின்றன. தாயையும் குழந்தையையும் பத்திரமாகப் பாதுகாக்க மருத்துவமனைகளை நாடுவதுதான் சிறந்த வழி.