search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்பிணிகள் கோடை வெயிலை சமாளிக்க வழிமுறைகள்
    X

    கர்ப்பிணிகள் கோடை வெயிலை சமாளிக்க வழிமுறைகள்

    வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் வெயில் காலத்தில் என்ன வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.
    அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு 15 நாள்கள், முடிந்த பிறகு ஒரு 15 நாள்கள் என்று கிட்டத்தட்ட ஒண்ணேமுக்கால் மாதத்துக்கும் மேல் நாம் வெயிலின் கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் பெண்கள் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். உலர்ந்த பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். அடிக்கடி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். உப்பு, காரம், எண்ணெய் பொருட்களை சாப்பிடக்கூடாது. தினமும் பழங்களையும், காய்கறிகளையும் உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதனுடன் நீங்கள் குடிக்கிற மோர், ஜூஸ், இளநீர் இவற்றையெல்லாம் கணக்கில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். நீர் ஆகாரங்கள் எடுப்பதோடு, தனியாகத் தண்ணீரையும் நிறையக் குடிக்க வேண்டும்.

    * முடிந்தவர்கள் தினமும் இளநீர் குடிக்கலாம். முடியாத நாள்களில் பழைய சாதத்தின் தண்ணீரில் கல் உப்பு அல்லது இந்துப்பு சேர்த்து குடிக்கலாம். உடலுக்குத் தேவையான தாது உப்புகள் கிடைப்பதுடன், உடலின் உள்ளுறுப்புகள் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

    * முற்பகல் 11 மணிவாக்கில் தர்பூசணி, முலாம் பழம், கிர்ணிப்பழம், வெள்ளரி பச்சடி என்று நீர்ச்சத்து நிரம்பிய பழங்கள் அல்லது காய்கறிகளை சாப்பிடுங்கள். 'நீங்கள் சொல்லியிருப்பவை எதுவும் தற்போது வீட்டில் இல்லை. என்னால் உடனே கடைக்குப் போய்வாங்கி வரவும் முடியாது' என்பவர்கள், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, தயிருடன் கலந்து பச்சடியாகச் சாப்பிட்டு விடுங்கள். உடல் ஜில்லென்றாகிவிடும்.



    * வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு சாப்பிடப் பிடிக்காது. அதனால், வெள்ளைப் பூசணி, சுரைக்காய், தோசைக்காய் மாதிரியான நீர்க்காய்களை பாசிப்பருப்புடன் வேக வைத்துச் சாப்பிடுங்கள். வயிறு நிறைவதோடு, வியர்வையினால் உடல் இழந்த தாது உப்புகளையும்  மீட்டு விடலாம்.

    * சிலருக்கு இயல்பிலேயே அதிகம் வியர்க்கும். இவர்கள் வெயிலில் சென்று வந்த பிறகு உடலில் உப்பு படிந்து காணப்படும். இது இப்படியே தொடர்ந்தால் 5 அல்லது 6 வருடங்களில் அந்தப் பெண்களுக்கு நரம்புகள் பலவீனமாகி விடும். அதனால், உப்புப் படிகிற அளவுக்கு வியர்க்கிற உடல்வாகு கொண்ட கர்ப்பிணிப் பெண்களும் சரி, நார்மல் பெண்களும் சரி, சாத்துக்குடியை ஜூஸ் போட்டு தினமும் குடித்து வர வேண்டும். சாத்துக்குடியைப் பழமாக சாப்பிட்டால் நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். ஆனால், ஜூஸாக குடித்தால்தான் அதில் இருக்கிற தாது உப்புகள் உடனடியாக ரத்தத்தில் கலக்கும். அதனால், தினமும் சாத்துக்குடி ஜூஸை வீட்டிலேயேப் போட்டு குடித்து வாருங்கள். முடியாத நாள்களில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். 'வியர்த்துக் கொட்டுகிறது, சாத்துக்குடியும் இல்லை, எலுமிச்சையும் இல்லை' என்கிற கர்ப்பிணிகள் குளூக்கோஸையாவது அவசியம் குடிக்க வேண்டும்.

    * வெயில் தணிந்திருக்கும் மாலை நேரத்தில் வாக்கிங் செல்லுங்கள். அந்த நேரத்திலும் அதிகமாக வியர்த்துப் படபடப்பாக வந்தால், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்துக் குடியுங்கள். சற்று  ரிலாக்ஸாக உணர்வீர்கள்.

    * மூலம் போன்ற பிரச்சனை இருக்கிற கர்ப்பிணிகள், இளநீரில் பனங்கற்கண்டு போட்டு ஊற வைத்து குடிக்க, பிரச்சனை தணியும்.

    * வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடித்தால் இதமாகத்தான் இருக்கும். ஆனால், உடம்பு சூடாகி விடும். இதனால் மண்பானை தண்ணீரை அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது. 
    Next Story
    ×