search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தொடர் கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்
    X

    தொடர் கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்

    அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு மூன்று முறைக்கு மேல், கருத்தரித்து 24 வாரங்களுக்கு முன்பாக கருச்சிதைவு ஏற்படுவதையே தொடர் கருச்சிதைவு என்கிறோம்.
    அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு மூன்று முறைக்கு மேல், கருத்தரித்து 24 வாரங்களுக்கு முன்பாக கருச்சிதைவு ஏற்படுவதையே தொடர் கருச்சிதைவு என்கிறோம்.

    மருத்துவரீதியாக, அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலமாக அல்லது கர்ப்பச் சிதைவு ஏற்பட்டு வெளியேற்றப்படும் திசுவை ஆய்வு செய்து கருச்சிதைவு கண்டறியப்படுகிறது. கர்ப்பம் தரித்தவர்களில் 15 முதல் 25 சதவீதம் பேருக்கு கருச்சிதைவு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 5%-க்கும் குறைவான பெண்களுக்கே தொடர்ச்சியாக இரண்டு முறை கருச்சிதைவு ஏற்படுவதாகவும் சுமார் 1% பெண்களுக்கு மட்டுமே மூன்று அல்லது அதிக முறை தொடர் கருச்சிதைவு ஏற்படுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

    பெரும்பாலும், குரோமோசோம் அல்லது ஜீன்களில் ஏற்படும் கோளாறுகளே கருச்சிதைவுக்குக் காரணமாக உள்ளன, மேலும் கருச்சிதைவு என்பது தற்செயலான போக்கில் ஏற்படுகிறது. தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்படுவதுடன் தொடர்புடைய காரணங்களில் சில:

    மரபியல் காரணங்கள்: பெரும்பாலான கருச்சிதைவுகளுக்கு கருவின் மரபியல் கோளாறுகள் அல்லது குரோமோசோம் கோளாறுகளே காரணமாக உள்ளன.

    அதிக வயதில் கர்ப்பமடைதல்: வயது அதிகமுடைய பெண்கள் கர்ப்பமடையும்போது, தொடர் கருச்சிதைவுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. குரோமோசோம் கோளாறுகளால், கரு முட்டையின் தரம் குறைவாக இருப்பதற்கும் இதற்கும் தொடர்புள்ளதாகக் கருதப்படுகிறது.

    கருப்பையில் கோளாறுகள்: சில பெண்களுக்கு பிறப்பிலேயே கருப்பையின் வடிவம் ஒழுங்கற்றதாக இருக்கலாம் அல்லது பிற்காலத்தில் அவர்களின் கருப்பையில் கோளாறுகள் ஏற்படலாம். கருப்பைக்கு போதிய இரத்தம் செல்லாததாலும் கருப்பையில் அழற்சி ஏற்படுவதாலும் கருச்சிதைவு ஏற்படலாம்.



    நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான காரணங்கள்: சில சமயம், நோய் எதிர்ப்பு மண்டலம் தொடர்பான காரணங்களாலும் தொடர் கருச்சிதைவு ஏற்படலாம். ஆரம்ப காலத்திலேயே கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களில் 10 முதல் 20% பெண்களுக்கு, ஆன்டிஃபோஸ்ஃபோலிப்பிட் ஆன்டிபாடி சிண்ட்ரோம் (APS) எனப்படும் நோய் எதிர்ப்பு மண்டலக் கோளாறு இருந்துள்ளது.

    மகப்பேறு தொடர்பான நோய்கள்: பெண்களின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் சம்பந்தமான கோளாறுகளாலும் தொடர் கருச்சிதைவு ஏற்படலாம், உதாரணம்: நீரிழிவுநோய், தைராய்டு நோய், சினைப்பை நீர்க்கட்டிகள் அல்லது புரோலாக்டின் அதிகமாக இருத்தல்

    நோய்த்தொற்று சம்பந்தமான காரணங்கள்: ருபெல்லா, சைட்டோமேகலோவைரஸ், HIV, பிறப்புறுப்பில் பாக்டீரிய நோய்த்தொற்று, கிலாமிடியா, கொனோரியா, சிஃபிலிஸ் போன்ற கர்ப்பகால நோய்த்தொற்றுகளாலும் தொடர் கருச்சிதைவு ஏற்படலாம்.

    சுற்றுச்சூழல் தொடர்பான காரணங்கள்: தொழில் காரணங்களுக்காக இரசாயனங்கள், பிற சுற்றுச்சூழல் நச்சுப் பொருள்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அதுவும் கருச்சிதைவுக்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.

    இயல்புக்கு மாறான விதத்தில் இரத்தம் உறைதல்:
    தாய்க்கு இரத்தம் உறையும் முறையில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால், அது நஞ்சுக்கொடி உருவாக்கத்தில் ஏதேனும் குறைபாடுகளை ஏற்படுத்தலாம், நஞ்சுக்கொடி இரத்த நாளங்களில் இரத்தம் உறைய வழிவகுக்கலாம். இரத்தம் உறைதலுக்கு எளிதில் பாதிப்படையும் பிரச்சனை உள்ளவர்களுக்கும் தொடர்ச்சியான கருச்சிதைவு ஏற்படலாம்.
    Next Story
    ×