search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மேனி அழகிற்கு குளிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டிவை
    X

    மேனி அழகிற்கு குளிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டிவை

    சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, குளியல்.
    சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, குளியல். சிலர், சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் எனப் பல மணி நேரம் குளியல் அறையிலேயே தவம் இருப்பார்கள். உண்மை அதுவல்ல. சில நிமிடங்கள் குளித்தாலுமேகூட மேனியைப் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

    குளிர் காலங்களில் வெந்நீரில் குளிப்பதும், வெயில் காலங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பதும் உடலுக்கு வேண்டுமானால் இதமாக இருக்கலாம் ஆனால், அவை நம் சருமத்தைப் பாதிக்கும். இரண்டுமே நம் சருமத்திலுள்ள ஈரப்பதத்தை நீக்கி, வறட்சியாக்கிவிடும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மட்டுமே உங்கள் சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெய்ப் பதத்தைத் தக்கவைக்கும்.

    சிலர் அதிக நேரம் குளித்தால்தான் உடல் சுத்தமாக இருக்கும் என நினைப்பார்கள். இது, தவறான நம்பிக்கை. உடலில் சுரக்கும் எண்ணேய் நம் சருமத்தைப் பாதுகாக்கக்கூடியது. அதிக நேரம் குளிப்பதால், அந்த எண்ணெய்ச் சுரப்புத் தடைப்படும். எனவே, 5 முதல் 10 நிமிடங்கள் மட்டும் குளிப்பதே போதுமானது. சோப்பு மற்றும் ஷாம்பூ போடும்போது ஷவரை திறந்துவைக்கக் கூடாது. இதனால் மேனியையும் பாதுகாக்கலாம்; தண்ணீரையும் சேமிக்கலாம்.

    தலையில் அழுக்குப் படியாமல் இருப்பதற்கும், தலைமுடியை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கும் தலை மற்றும் முடியின் வேர்களில் மட்டும் ஷாம்பூவைப் பயன்படுத்தினால் போதுமானது. கண்டிஷனரை முடிகளில் மட்டும் தடவுவதால், முடி வறட்சி அடையாமல் பாதுகாக்கப்படும். மாறாக, இதைத் தலையில் தேய்த்தால், தலை எண்ணெய்ப் பசையோடு இருக்கும்; அழுக்கு படிவதற்கும் வழிவகுக்கும்.

    அதிக நுரை தரும் சோப்பு நம் சருமத்தை வறண்டதாக மாற்றிவிடும். சோப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் ரசாயனப் பொருட்கள் குறைந்த அளவில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். கூடுமானவரைக்கும் ஆர்கானிக் சோப் அல்லது உடலின் எண்ணெய்ப் பசையைப் பாதுகாக்கும் சோப்பைப் பயன்படுத்துவது நல்லது.

    உடலில் உள்ள அழுக்குகளையும் கிருமிகளையும் நீக்க ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தலாம். குளித்து முடித்ததும் ஸ்க்ரப்பரை நன்கு அலசி, வெயிலில் காயவைக்க வேண்டும் அல்லது புதிய ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தலாம். ஆனால், அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையில் இயற்கையான ஸ்க்ரப்பர் என்பது நம் கைகளே; அவை பாதுகாப்பானதும்கூட.

    குளித்து முடித்ததும் உடலில் உள்ள ரோமங்கள் சுத்தமாகவும் மிருதுவாகவும் இருக்கும். அப்போது ஷேவ் செய்வதும் சுலபமாக இருக்கும்.

    குளித்த பிறகு, உடலை, தூய்மையான துண்டால் துடையுங்கள். அழுத்தித் துடைக்காமல், மிருதுவாகத் துடையுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை துண்டை துவைப்பது கிருமிகள் உங்கள் உடம்பில் தொற்றிக்கொள்ளாமல் பாதுகாக்கும்.

    குளித்துவிட்டு, உடலைத் துவட்டியதும் கட்டாயமாக பாடி லோஷனைத் தடவ வேண்டும். இது, நாள் முழுவதும் உடலின் ஈரப்பதத்தைத் தக்கவைத்திருக்கும். இயற்கையான தேங்காய் எண்ணெய் அல்லது அவகேடோ எண்ணெயை நான்கு முதல் ஐந்து சொட்டுக்களை உள்ளங்கையில் எடுத்து, நன்கு தேய்த்துத் தடவிக்கொள்ளலாம்.

    இதை தினசரி பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் சருமம் என்றும் இளமை மிளிர ஜொலிக்கும்!

    Next Story
    ×