search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்....
    X

    கூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்....

    கூந்தலின் வளர்ச்சி என்பது உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. இன்று கூந்தல் பற்றிய சந்தேகங்களையும் அதற்கான தீர்வையும் பார்க்கலாம்.
    அடிக்கடி ஷாம்பு குளியல் எடுப்பது கூந்தலை பாதிக்குமா?

    நிச்சயம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அடிக்கடி ஷாம்பு குளியல் எடுப்பதன் மூலம் கூந்தலில் உள்ள அழுக்குகளும் தூசும் நீங்கி, மண்டைப் பகுதி சுத்தமாகும். ஆனால், ஷாம்பு குளியல் எடுக்கும் போது அது முற்றிலும் நீங்குமாறு நிறைய தண்ணீர் விட்டு அலச வேண்டும். ஷாம்புவின் மிச்சம் இருந்தால் அது கூந்தலை பாதிக்கும்.

    அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வளருமா?

    எண்ணெய் உபயோகத்துக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எண்ணெய் என்பது கூந்தலுக்கு ஊட்டம் அளிப்பதில்லை. வளர்ச்சிக்கும் உதவுவதில்லை. அது கூந்தலை கண்டிஷன் செய்கிறது. கூந்தலுக்குத் தற்காலிகமாக ஒரு வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கிறது. எண்ணெய் மசாஜ் செய்கிற போது ஒருவித ஓய்வான மனநிலை கிடைக்கும். மண்டைப் பகுதியானது எண்ணெயை உள்ளே உறிஞ்சிக் கொள்வதில்லை. எண்ணெய் உபயோகிப்பது என்பது வெளிப்புறக் கூந்தலுக்கானது மட்டுமே.

    அடிக்கடி ஹேர் கட் செய்து கொண்டால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்குமா?


    கூந்தலை வெட்டினால் அது அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளரும் என்பது தவறான நம்பிக்கை. ஹேர் கட் என்பது கூந்தலுக்கு ஒரு அழகிய தோற்றத்தைத் தரும். முறையாக ஹேர் கட் செய்வதன் மூலம் கூந்தல் நுனிகள் வெடிப்பதைத் தடுக்கலாம். மற்றபடி கூந்தல் வளர்ச்சி என்பது மண்டைப் பகுதியின் உள்ளிருந்து வருவது.

    கூந்தல் வளர்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்புண்டா?

    காஸ்ட்லியான எண்ணெய் மற்றும் ஷாம்பு உபயோகிப்பதன் மூலம்தான் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியும்... மற்றபடி உணவுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது பலரது எண்ணம். கூந்தலின் வளர்ச்சி என்பது உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. எனவே, உங்கள் உணவுக்கு அதில் மிகப் பெரிய பங்குண்டு. சரிவிகித, சத்தான உணவு உண்டால் நிச்சயம் உங்கள் கூந்தலும் ஆரோக்கியமாக, அழகாக காட்சியளிக்கும். காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த உணவுகள், நிறைய தண்ணீர் போன்றவற்றை உணவுப் பழக்கத்தில் முறைப்படுத்திக் கொண்டால் கூந்தல் ஆரோக்கியம் கூடும்.

    கூந்தல் வறட்சியும் பொடுகுப் பிரச்சனையும் ஒன்றுதானா?

    இல்லை. இரண்டும் வேறு வேறு பிரச்னைகள். இரண்டிலுமே வறண்ட செதில் போன்ற பகுதிகள் உதிர்வது பொதுவான அறிகுறியாகக் காணப்பட்டாலும், இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் வேறு வேறு சிகிச்சைகள் தேவைப்படும். தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் உபயோகிப்பதன் மூலம் வறண்ட கூந்தல் பிரச்சனையை சரி செய்யலாம். அதுவே பொடுகு பாதித்த கூந்தலில் கண்டிஷனர் உபயோகித்தால் அது பொடுகை இன்னும் தீவிரப்படுத்தும்.
    Next Story
    ×