search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    டீன்ஏஜ் பெண்களின் ‘டாட்டூ’ மோகம்
    X

    டீன்ஏஜ் பெண்களின் ‘டாட்டூ’ மோகம்

    ‘டாட்டூ’ மீது மோகம் கொண்டிருக்கும் பெண்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் முழுமையாக தெரிந்துகொண்ட பின்பே, அதனை உடலில் தீட்டிக்கொள்ளவேண்டும்.
    ‘டாட்டூ’ மீது மோகம் கொண்டிருக்கும் பெண்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் முழுமையாக தெரிந்துகொண்ட பின்பே, அதனை உடலில் தீட்டிக்கொள்ளவேண்டும். டாட்டூ பதிக்கும்போது வலி ஏற்படும். சுகாதாரமற்ற முறையில் அதை மேற்கொண்டால் தொற்றுவியாதிகள் ஏற்படக்கூடும்.

    விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாரா?

    இன்றைய டீன்ஏஜ் பெண்களுக்கு டாட்டூஸ் ரொம்ப பிடித்தமானதாக இருக்கிறது. ஆனால் அதை பிடிக்காதவர்களும் நிறைய இருக்கிறார்கள். இளம் வயதினர் டாட்டூஸ் பதித்துக்கொள்வதை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ‘பணம் செலவு செய்து இப்படி எல்லாம் படம் வரைந்து உன் உடலை கெடுத்துக்கொள்ள வேண்டுமா?’ என்று சிலர் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பலாம். அதை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ‘எனக்கு பிடித்ததால் இதை செய்திருக்கிறேன். நீங்கள் இதை பற்றி கவலைப்படவேண்டாம்’ என்றோ, ‘என் உடலை பற்றிய விஷயத்தில் நான் முடிவெடுக்க அனுமதியுங்கள்’ என்றோ, பதில் சொல்ல நீங்கள் தயாராக இருக்கவேண்டும் அல்லது இப்படிப்பட்ட விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாதது போல் நடிக்கவாவது தெரிந்திருக்கவேண்டும்.

    டாட்டூ உங்களுக்கு மிக அவசியமா?

    இந்த கேள்வியை உங்களுக்குள்ளே நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். பொழுதுபோக்குக்காக அதை நீங்கள் பதித்துக்கொள்ளப்போகிறீர்களா? அல்லது அதற்கு வேறு விசேஷ காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் டாட்டூ பதித்துக்கொள்கிறார்கள். மனதில் இருக்கும் பிரியமானவரின் பெயர், பிடித்தமான வாழ்வியல் தத்துவம், நம்பிக்கைக்குரிய சின்னங்கள்.. போன்ற பலவற்றை பெண்கள் விரும்பி பொறிக்கிறார்கள். அதை பொறிப்பதற்கு முன்னால், ‘காலங்கடந்தும் அது நமக்கு தேவையா?’ என்பதை கவனத்தில் கொண்டு, ஆழ்ந்து யோசித்து முடிவெடுங்கள்.

    தற்காலிக டாட்டூ போதுமானதா?


    சிலர் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒன்றை டாட்டூவாக பதிக்க விரும்புவார்கள். ஆனால் ஆழ்ந்து யோசித்து அது தமக்கு தேவையில்லை என்ற முடிவை அவர்கள் எடுக்கலாம். அல்லது அதை பதித்து, டாட்டூ தரும் சுகத்தை அனுபவிக்கவும் அவர்கள் ஆசைப்படலாம். அப் படிப்பட்ட இருவேறு சிந்தனை கொண்டவர்கள் நிரந்தர டாட்டூவை உடலில் பதித்துக்கொள்ளவேண்டாம். முதலில் தற்காலிக முறையை பரீட்சித்துப்பாருங்கள். ஹென்னா டிசைனிங், டெம்பரரி டாட்டூயிங் போன்றவற்றை தேர்ந்தெடுத்து முதலில் பயன்படுத்தவேண்டும். கால இடைவெளிவிட்டு பின்பு அடுத்தகட்டமாக நிரந்தரம் பற்றி அவர்கள் சிந்திக்கவேண்டும்.

    டாட்டூ மங்கும் என்பது தெரியுமா?

    இவை பொறிக்கும்போது தோன்றுவதுபோல் எப்போதும் ஜொலிக்காது. வருடங்கள் கடக்கும்போது நிறம் மங்கலாம், அதன் ஒரு பகுதி சிதைந்து போகலாம். மிக நுட்பமாக பொறிக்கப்பட்டவை அழிந்தும்போகலாம். அப்படிப்பட்ட தருணங்களில் டாட்டூ கலைஞர் மூலம் ‘ரீடச்’ செய்துகொள்ள வேண்டியதிருக்கும். கறுப்பு நிறம்தான் அதிக காலம் அழியாமல் இருக்கும்.

    அவசர முடிவெடுப்பது சரியா?


    இல்லை. இது பற்றி நிதானமாக முடிவெடுக்கவேண்டும். தோழிகளுக்காக அல்லது இன்னொருவருக்காக அவசரமாக டாட்டூ பதித்துக்கொண்டேன் என்பது சரியல்ல. எதற்காக டாட்டூ பொறிக்கப் போகிறீர்கள்? எந்த கலைஞர் மூலம் அதை பொறிக்கப்போகிறீர்கள்? அதற்காக எடுக்கப்பட்ட முன்னேற் பாடுகள் என்ன? உடலில் எந்த இடத்தில் பொறிக்கப்போகிறீர்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடிவிட்டு, முடிவெடுங்கள்.



    எந்த ‘டிசைன்’ தேவை?

    பெண்கள் பொதுவாக ஒரு உடை தேர்ந்தெடுக்கவே அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் தங்கள் உடலில் டாட்டூ பதிப்பதில் அதிக கவனம் கொள்வார்கள். எந்த டிசைனை பொறிக்கப் போகிறீர்கள் என்பதில் தெளிவான முடிவெடுங்கள். அது பற்றி உங்கள் டாட்டூ கலைஞரிடம் பேசுங்கள். அதற்கு எவ்வளவு நேரமாகும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நிரந்தர டாட்டூ பதிப்பவராக இருந்தால், காலம் முழுக்க அது உங்கள் உடலோடு ஒட்டியிருக்கும். அதனால் கவனமாக டிசைனை தேர்ந்தெடுங்கள்.

    சில பெண்கள் தங்கள் தோழிகள் டாட்டூ பொறிப்பதற்கு செல்லும்போது உடன் செல்வார்கள். அங்கு சென்றதும் தங்களுக்கும் டாட்டூ பொறிக்கவேண்டும் என்ற ஆசை வந்துவிடும். சிலர், தானும் இந்த காலத்து பெண்தான் என்பதை காட்டிக்கொள்ள டாட்டூ பொறிப்பார்கள். அப்படி அவசரப்பட்டு செய்துகொண்டால், அடுத்த சில மாதங் களிலே ‘ஏன் இதை பதித்துக்கொண்டோம்’ என்று நினைத்து, அதை எப்படி அழிப்பது என்று ஆலோசனை கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    சரி.. இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் தீர ஆராய்ந்து, டாட்டூ பொறித்துக்கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டால், அடுத்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவைகளை தொடர்ந்து படியுங்கள்:

    உங்களுக்குத் தெரிந்த, ஏற்கனவே அதில் அனுபவமுள்ள டாட்டூ மையத்தை தேர்ந்தெடுங்கள். தோழிகள் யாருக்காவது அறிமுகமுள்ள டாட்டூ ஸ்டூடியோவாக இருந்தால் நல்லது.

    அந்த டாட்டூ கலைஞர் எங்கே படித்தார், எத்தனை வருடங்களாக இந்த துறையில் இருக்கிறார் என்பதையும் கண்டறியுங்கள். முறையான பயிற்சியும், அனுபவமும் இல்லாதவர் ஆழமாக ஊசியை பயன்படுத்தி குத்தும்போது தடுமாறிவிடுவார். அது சருமத்தை கடுமையாக பாதிக்கும்.

    அந்த ஸ்டூடியோவில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் எல்லாம் சுகாதாரமாக இருப்பதையும், அங்கே சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் உறுதிசெய்யுங்கள். ஊசி, இங்க், இங்க் கேப், கிளவுஸ், கன் போன்றவை அதில் பயன்படுத்தப்படுகின்றன.

    டாட்டூ செய்வதற்கு முன்னால் சருமமும், உபகரணங்களும் அணுத்தொற்று எதுவும் இல்லாமல் இருக்கவேண்டும்.
    Next Story
    ×