search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அழகழகாக ‘டாட்டூஸ்’ போட்டுக்கொள்ள ஆசையா?
    X

    அழகழகாக ‘டாட்டூஸ்’ போட்டுக்கொள்ள ஆசையா?

    ஒருமாதம் கடந்த பின்பும் டாட்டூ பதித்த இடத்தில் வலி, வீக்கம், சொறி, ரத்த ஒழுக்கு போன்றவை ஏற்பட்டால் சரும டாக்டரிடம் ஆலோசனை பெற்று தீர்வு காணவேண்டும்.
    பெரும்பாலான ‘டாட்டூ’ ஸ்டூடியோக்களில், டாட்டூ பொறித்ததும் ‘டெர்மலைசர்’ மூலம் அதை பொதிந்துவிடுவார்கள். 24 முதல் 48 மணி நேரம் வரை அதை அசைக்காமல் இருக்கவேண்டும். பின்பு இதமான சுடுநீரில் கழுவி அதை உரித்தெடுக்க வேண்டும். சாதாரண ‘கிளியர் பிலிம்’ ஒட்டியிருந்தால், இரண்டுமணி நேரம் கழித்ததும் அதை உரித்து எடுத்துவிட்டு சுத்தமான நீரால் கழுவிவிடலாம். லேசான ரத்த கறையும் ‘இங்க்’ பிசிறும் இருக்கும். அதை எல்லாம் கழுவி விட்டு, ‘டவல்’ கொண்டு துடைக்க வேண்டும். பொறித்த இடத்திற்கு மேல் பூசுவதற்கு ‘டாட்டூ வேக்ஸ்’ தருவார்கள். அதை பூசிக்கொள்ள வேண்டும். அவர்கள் தராவிட்டால், ‘பேபி ஆயில்’ அல்லது மோய்ஸ்சரசரை 7 நாட்கள் வரை அந்த இடத்தில் பூசிக்கொள்ளலாம். பத்து நாட்களுக்குள் காயங்கள் ஆறி, சருமம் இறுகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

    டாட்டூ பதித்த பத்து நாட்கள் வரை அந்த இடத்தில் நேரடியாக சூரிய ஒளி படக்கூடாது. அதுபோல் அந்த பகுதியில் தூசு படியாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். நீச்சல் பயிற்சி, எடைதூக்கும் ஜிம் பயிற்சி, வியர்க்கும் அளவுக்கு வேலை செய்தல் போன்றவைகளையும் தவிர்க்கவேண்டும். ஒருமாதம் கடந்த பின்பும் டாட்டூ பதித்த இடத்தில் வலி, வீக்கம், சொறி, ரத்த ஒழுக்கு போன்றவை ஏற்பட்டால் சரும டாக்டரிடம் ஆலோசனை பெற்று தீர்வு காணவேண்டும்.

    தொழில்ரீதியாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சிலர், ஏற்கனவே பதித்த டாட்டூவை அழிக்க முன்வருவார்கள். அதை எப்படி அழிக்கலாம் என்று அனுபவமற்றவர்களிடம் ஆலோசனை கேட்டால், ‘அதன் மீது உப்புத் தண்ணீரை ஊற்றி தேய்த்துக்கொண்டே இருந்தால், அழிந்துபோய்விடும்’ என்று சிலர் சொல்வார்கள். அந்த மாதிரியான முயற்சிகளில் ஈடுபடுவது தவறு. அது சருமத்திற்கு பாதிப்பை உருவாக்கும்.



    பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அதை நீக்கும் முறையும் மக்களிடம் அதிக வரவேற்பை பெறவில்லை. லேசரை பயன்படுத்தி அழிக்கும் முறையே பெரும் பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் லேசர் மூலம் உடனடியாக முழுமையாக அழித்துவிட முடியாது. பதிக்கப்பட்டிருக்கும் டாட்டூவின் அளவு, சருமத்தின் தன்மை, பதிக்கப்பட்ட டாட்டூவின் ஆழம் போன்றவைகளை பொறுத்ததுதான் அதை அழிப்பது பற்றி தீர்மானிக்க முடியும். சிலருக்கு இரண்டு, மூன்று முறை கூட லேசரை பயன்படுத்த வேண்டியதிருக்கும்.

    டாட்டூ கலைஞர்கள் சிலர் கொள்கைரீதியாக சில முடிவுகளை எடுத்து பின்பற்றுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் காதல் தரும் வேகத்தில் தங்கள் காதலன் பெயரை டாட்டூவாக பதித்துக்கொள்கிறார்கள். ‘நீ என் உயிரைப் போன்றவன்’ என்று கூறி தனது காதலனிடம் அதை காட்டி பெருமைப்படவும் விரும்புகிறார்கள். ஆனால் டாட்டூ பதித்த அடுத்த மாதத்திலோ அல்லது ஆறு மாதங்களிலோ காதல் முறிந்துபோய்விட, அந்த பெயர் அவர்களுக்கு அருவறுப்பை ஏற்படுத்துகிறது.

    அதனால் ‘டாட்டூ’ பதித்த கலைஞரையே தேடிவந்து, அந்த டாட்டூவை எப்படியாவது உடனே அழித்துவிட வேண்டும் என்று மன்றாடுகிறார்கள். இந்த நெருக்கடிக்கு இடம் கொடுக்காத கலைஞர்கள் சிலர் முதலிலே ‘தாங்கள் காதலர்கள் பெயர்களை பெண்களின் உடலில் பதிப்பதில்லை’ என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதுபோல் டாட்டூ பதிக்க வருபவர்களிடம் அவர்களுக்கு எந்த அளவுக்கு தைரியம் இருக்கிறது என்பதையும் பரீட்சித்து பார்க்கிறார்கள். ஏன்என்றால் சிலர், மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொள்வதற்கே அலறும் ரகமாக இருப்பார்கள்.

    அவரைப் போன்றவர்கள் முதலில் பச்சைக்கிளி ஒன்றை தங்கள் தோளில் டாட்டூ செய்யும்படி கூறுவார்கள். டாட்டூ பதிக்கத் தொடங்கியதும் முதலில் சிறிது நேரம் வலியை பொறுத்துக்கொள்வார்கள். பின்பு அழுதுவிடுவார்கள். கிளியின் ஒரு சிறகை பதித்ததும் ‘அதற்கு மேல் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. விட்டுவிடுங்கள்’ என்று கூறி விட்டு கிளம்பிவிடுவார்கள். இப்படி சிலர் அரை குறை ‘டாட்டூ’ வுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள். கேட்டால், அதுதான் இப்போதைய பேஷன் என்பார்கள்.

    Next Story
    ×