search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் விரும்பும் பட்டு நூல் ஆபரணங்கள்
    X

    பெண்கள் விரும்பும் பட்டு நூல் ஆபரணங்கள்

    பெண்களின் ஆபரணங்கள் உலோகங்களில் செய்யப்பட்டது போல தற்போது வண்ணமயமான ஜொலிக்கும் பட்டு நூல்கள் கொண்டு தயாராகின்றன.
    இளம் பெண்கள் தங்களின் ஆடை வடிவமைப்புக்கு ஏற்றவாறு விதவிதமான புதிய ஆபரணங்களை அணிந்து கொள்கின்றனர். பெண்களின் ஆபரணங்கள் உலோகங்களில் செய்யப்பட்டது போல தற்போது வண்ணமயமான ஜொலிக்கும் பட்டு நூல்கள் கொண்டு தயாராகின்றன. பட்டு நூல் லேசானது. எடை குறைவானது. மேலும் பளபளப்பும் வழவழப்பும் தன்மை கொண்டது.

    அதன் மூலம் உருவாகும் ஆபரணங்கள் நாளடைவில் மங்காத தன்மையுடன் உள்ளது. அத்துடன் எந்த வண்ண ஆடை அணிகின்றோமோ அந்த வண்ணத்திலான நூல்களை கொண்ட ஆபரணங்களை அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஆடை நெய்த நூல் அமைப்பிலேயே ஆபரணமும் அணியும்போது கூடுதல் அழகும், பொலிவும் ஏற்படும்.

    பட்டு நூல் ஆபரணங்கள்

    பட்டு நூல் கொண்டு தற்போது காதணி, நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட் போன்றவை உருவாக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆபரண வகையும் அதற்கென உள்ள பிரத்யேக கம்பி வடிவங்கள், கொக்கி அமைப்புகள் கொண்டு அழகுற பின்னப்படுகிறது. பட்டு நூல் இறுக்கமான அமைப்புடன் ஆபரணமாக செய்யப்படும்போது அதன் உறுதி தன்மை அதிகரிக்கிறது. மேலும் அதன் மேம்பட்ட பொலிவு தன்மை எந்த புறம் திரும்பினாலும் அழகிய வண்ண சாயலுடன் பிரதிபலிக்கின்றன. விலை மதிப்புமிக்க பட்டு நூல் சேலையாக அணியும் பெண்கள் பட்டு நூல் ஆபரணத்தையும் ஆர்வமாக அணிய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அதிகபட்ச அழகியலுடன் கூடிய பட்டு நூல் நகை தயாராகின்றன.

    சிறு மணி கொத்துகளுடன் கூடிய நெக்லஸ்கள்

    முற்றிலும் பட்டு நூல் கொண்டு நெக்லஸ் வடிவமைப்பு மேற்கொள்ளாது நடுநடுவே சிறு மணிகள், கற்கள், முத்துக்கள் இணைக்கப்பட்டவாறு உருவாக்கப்பட்டுள்ளன. சீரான இடைவெளியில் அழகிய சிறு சிறு முத்து மணிகள் கொத்துகளை உள்ளதுடன் அதன் இணைப்பாக வண்ண பட்டு நூல் இணைந்தபடி உள்ளது. அதுபோல் அதன் நடுப்பகுதி பதக்கங்கள் பட்டு நூல் சேர்ந்தபடியும், கற்கள் பதித்த பதக்கங்கள் என்றவாறும் இணைக்கப்பட்டுள்ளன.

    சிறு மணி குஞ்சரங்கள் இணைந்த பட்டு நூல் நெக்லஸ்-யின் அதே அமைப்பிலான காதணி மற்றும் வளையல்கள் போன்றவை செட்-ஆக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.



    உலோக மணிகளுடன் கூடிய மாலைகள்

    இரட்டை வண்ண கலவையுடன் நடுநடுவே உலோக மணிகள் இணைப்புடன் கூடிய மாலைகள் பட்டு நூலில் தயார் செய்யப்படுகின்றன. பெரிய நீளமான மாலைகள் பந்து வடிவ உருளைகள் மற்றும் நீள் வடிவ உருளைகள் என்றவாறு பல வண்ண கலப்பு நூல்களுடன் மாலையாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாலைகளில் நடுநடுவே உலோக மணிகள் இணைப்பும், நடுவே பெரியஉலோக பதக்கங்களுடன் காட்சி தருகிறது. பித்தளை உலோக மணிகள் என்பதுடன் வெள்ளி உலோக மணிகள் என்றவாறும் இம்மாலைகளில் இடம் பெறுகின்றன.

    பிரகாசமான வண்ணங்களை பச்சை, நீலம், மஞ்சள், சிகப்பு மற்றும் இளஞ்சிகப்பு நூல்கள் கொண்ட மாலைகளில் சில ஒற்றை வண்ண நூல்களுடன் உருவாக்கி தரப்படுகிறது. பார்க்க பரவசமான உருவ அமைப்புடன் பட்டு நூல் மாலைகள் உருவாகின்றன.

    அழகிய பட்டு நூல் ஜிமிக்கிகள்

    காதணிகளில் அழகிய பட்டு நூல் ஜிமிக்கிகள் பாந்தமான வடிவமைப்புடன் காட்சி தருகின்றது. பட்டு நூல் ஜிமிக்கிகளின் நடுப்பகுதி மற்றும் ஓரப்பகுதிகள் கற்கள் மற்றும் மணிகள் தொங்கும் அமைப்பில் உருவாகியுள்ளன. இதிலும் ஒற்றை நிற ஜிமிக்கி மற்றும் பல நிறத்திலான ஜிமிக்கிகள் கிடைக்கின்றன. இதில் சிறிய மற்றும் பெரிய அளவிலான ஜிமிக்கி காதணிகள் விதவிதமான அளவில் கிடைக்கின்றன.

    வண்ண பிரகாசத்துடன் வளையல்கள்


    வளையல்கள் என்பதில் பட்டு நூல் இடைவெளியுடன் உலோக உருவங்கள் இணைப்புடன் கூடிய அகலமான பெரிய வளையல்கள் வருகின்றன. அதுபோல் மெல்லிய கம்பி அளவு பட்டு நூல் வளையல்கள் என்பது பல இணைந்தவாறு ஓரப்பகுதி வளையல்கள் கற்கள் வைக்கப்பட்டவாறு பல வளையல் அமைப்புடன் உள்ளன. ஒரே வளையலில் பல வண்ண நூல்கள் சாய்வான அமைப்புடன் உருவான வளையல்கள் ஒளிவெள்ளத்தில் பார்க்கும்போது அழகிய வானவில் போன்று காட்சி அளிக்கிறது.

    பட்டு நூல் வளையல்களில் சிறு சிறு மணிகள் தொங்கியபடி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எந்தவிதமான ஆடை அலங்காரத்திற்கும் ஏற்ற பட்டு நூல் ஆபரணங்கள் பாரம்பரிய பட்டாடைகளுக்கு அணியும்போது தனிப்பட்ட கூடுதல் அழகை தருகின்றது. இளம்பெண்கள் குர்தி போன்ற வண்ண பருத்தி ஆடைகளுக்கும் பட்டு நூல் ஆபரணங்கள் அணிந்து மகிழ்கின்றனர்.
    Next Story
    ×