search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இக்கத் நெசவு தரும் வித்தியாசமான டிசைன்கள்
    X

    இக்கத் நெசவு தரும் வித்தியாசமான டிசைன்கள்

    போச்சம்பள்ளி புடவைகளில் பெரும்பாலும் இந்த இக்கத் டிசைனை பார்க்கலாம். காட்டன் மற்றும் பட்டுத் துணிகளில் கைகளால் நெய்யப்படும் நெசவு முறையே இக்கத் ஆகும்.
    இக்கத் நெசவு என்பது பழங்காலம் முதல் இந்தியா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்துள்ள கலைநயம் கொண்ட வடிவமைப்பு. இந்த நெசவின் மூலம் கிடைக்கும் வண்ண டிசைன் லேசாக அலைந்தது போன்ற வடிவத்தில் அழகிய வண்ணக் கலவைகளில் வித்தியாசமாக காட்சியளிக்கும். போச்சம்பள்ளி புடவைகளில் பெரும்பாலும் இந்த இக்கத் டிசைனை பார்க்கலாம். காட்டன் மற்றும் பட்டுத் துணிகளில் கைகளால் நெய்யப்படும் நெசவு முறையே இக்கத் ஆகும்.

    இக்கத் நெய்யப்படும் முறை

    இக்கத் நெசவு முறை மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பம் கொண்டதாகும். துணியை நெய்துவிட்டு வர்ணம் தேய்க்கும் வழக்கமான முறையில் இது நெய்யப்படுவது இல்லை. அதேபோல் நூல்கண்டுகளை முழுமையாக வர்ணம் தோய்த்து இரண்டு பல வர்ண நூல்களை கொண்டு நெய்யும் முறையிலும் இது நெய்யப்படுவது இல்லை. நூல்கண்டுகளில் டிசைன்களின் வர்ணங்களுக்கு ஏற்ப அந்தந்த பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, கட்டப்பட்டு சாயம் தோய்க்கப்படுகிறது. இப்படி டிசைனிற்கு ஏற்ப சாயம் தோய்க்கப்பட்டு நூல் கண்டுகள் தோய்க்கப்பட்டு காய வைக்கப்பட்ட பின் தறியில் கோர்க்கப்பட்டு நெய்யப்படுகிறது. துணியை நெய்து முடிக்கும்போதுதான் அந்த டிசைனே வெளிப்படும். நூலை பாவு மற்றும் குறுக்கிழையில் சரியாக பொருத்துவதும் நிறங்களை அதற்கான இடங்களில் துல்லியமாக வைப்பதும் மிகவும் கஷ்டமான ஒன்று. இதில் சிறுபிழை ஏற்பட்டால் டிசைன் சரியாக வராது.



    இக்கத் நெய்தலின் வகைகள்

    பாவு நூலில் மட்டும் சாயம் பூசப்பட்டு, குறுக்கிழை ஒரே நிறத்தில் இருக்கும் படியாக வைத்து நெய்வது ஒரு வகையாகும். இதன் டிசைன் அதிகமாக அலைந்ததுபோல், வர்ணங்கள் சற்று மங்கலாகவும் தோற்றமளிக்கும். பாவு மற்றும் குறுக்கிழை இரண்டிலுமே ஆங்காங்கு வர்ணசாயம் தோய்த்து, காயவைத்து பின் நெய்யப்படும் புடவை இரட்டை இக்கத் நெய்தல் என்று குறிப்பிடப்படுகிறது. இதில் நெய்யப்படும் வடிவங்கள் நிறுத்தமாகவும், நிறங்கள் சற்றே அடர்த்தியாகவும் இருக்கும். போச்சம்பள்ளி மற்றும் புட்டபக்கா புடவைகளில் இந்த வகை இக்கத் நெய்தல் தான் பயன்படுத்தப்படுகிறது.

    பாவு ஒரே நிறத்தில் வைத்துக்கொண்டு குறுக்கிழையை மட்டும் இக்கத் முறையில் சாயம் தோய்த்து நெய்யப்படும் ஒரு வகையும் உண்டு. இது சற்றே கடினமாக இருக்கும். குறுக்கிழையில் உள்ள சாய வேறுபாடே டிசைனை நிர்ணயம் செய்கிறது. எனவே அவ்வப்போது தறியை சரிசெய்து டிசைனை கொண்டு வரவேண்டும்.

    புடவை வாங்கினோம், அழகாய் இருக்கிறது, உடுத்திக் கொண்டோம் என்றில்லாமல் இம்மாதிரி கைத்தறியில் உள்ள மனித உழைப்பையும், ரசனையையும், தொழில்நுட்ப அறிவையும் உணர்ந்து கொள்ளும்போது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிறது. 
    Next Story
    ×