search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை
    X

    தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை

    தலைமுடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை வெகுவாக உதவுகிறது. ஆரோக்கியமான, பிரகாசமான கேசத்தைப் பெறுவதற்கு கறிவேப்பிலை கைகொடுக்கிறது.
    தலைமுடியின் ஆரோக்கியம் குறித்து ஆண்களும் பெண்களும் அதிகம் கவலைகொள்கின்றனர். அவர்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது, கறிவேப்பிலை.

    பொதுவாக உணவுகளில் வாசனைக்கும், சுவைக்கும் கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம், அதில் பலவிதமான உடல்நல பயன்களும் அடங்கியிருக்கின்றன.

    முக்கியமாக, தலைமுடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை வெகுவாக உதவுகிறது. ஆரோக்கியமான, பிரகாசமான கேசத்தைப் பெறுவதற்கு கறிவேப்பிலை கைகொடுக்கிறது.

    பாதிப்படைந்துள்ள முடி வேர்களைச் சீர் செய்யும் ரசாயன சிகிச்சைகள், வெப்பமாக்கும் கருவிகள், மாசு போன்ற பல காரணங்களால் முடியின் வேர்கள் பாதிப்படையலாம். இதனால் முடியின் வளர்ச்சி நின்றுகூடப் போகலாம். அப்படி பாதிக்கப்பட்ட தலைமுடி வேர்களைச் சீர்செய்யும் திறனைக் கொண்டுள்ளது கறிவேப்பிலை. அதற்குக் காரணம், இதில் உள்ள ஊட்டச்சத்துகள். இவை முடிக்குத் தேவையான ஊட்டத்தை அளிக்கின்றன.



    கறிவேப்பிலை விழுதை நேரடியாக தலைச்சருமத்தில் தடவிக் கொண்டால், வேர்களை அது சீர்செய்யும். மேலும் முடித்தண்டுகளின் வலுவை மீண்டும் பெறச் செய்யும். முடிந்தால் கறிவேப்பிலை விழுதை அப்படியே உண்ணலாம். கேசத்தின் வேர்களை கறிவேப்பிலை வலுவடையச் செய்வதால், முடியின் வளர்ச்சியும் வேகம் பிடிக்கும்.

    கறிவேப்பிலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முடி கொட்டுதல் குறையும். இதில் புரதமும் பீட்டாகரோட்டினும் வளமையாக உள்ளன. இது முடி உதிர்வைக் குறைத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். புரதச்சத்துக் குறைபாட்டினால்கூட முடி உதிர்வு ஏற்படலாம். அதனால், கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால், முடி வளர்ச்சி அதிகமாகும்.

    கறிவேப்பிலையில் ஆன்டிஆக்சிடென்டுகளும் நிறைந்திருக்கின்றன. அதனால் அது தலைச்சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிக்கும். இறந்து போன தலைச்சரும முடித்தண்டை நீக்கவும், பொடுகைத் தடுக்கவும் இது உதவும்.

    இவையெல்லாம் தவிர, கறிவேப்பிலை வயிற்றுப்போக்கைத் தடுக்கும், செரிமான அமைப்புக்கு நல்லது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் கறிவேப்பிலை உதவுகிறது. இப்படி இதன் பயன்களை கூறிக்கொண்டே போகலாம்.

    இனிமேலாவது கறிவேப்பிலையை உணவில் இருந்து எடுத்தெறிந்து விடாமல் உட்கொண்டு பயன்பெறுவோம்.
    Next Story
    ×