search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பச்சை ஆப்பிள் - வெங்காயம் சூப்
    X

    பச்சை ஆப்பிள் - வெங்காயம் சூப்

    தினமும் ஏதாவது ஒரு சூப் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று ஆப்பிளை வைத்து சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சை ஆப்பிள்  -  4
    பெரிய வெங்காயம் - 1/2 கிலோ  
    உப்பில்லாத வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
    சமையல் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
    பூண்டு - 2 பல்
    முந்திரி - 10
    உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
    காய்கறி சத்து நீர் - 3 கப்

    காய்கறி சத்து நீர் தயாரிக்கும் முறை

    இதனைத் தயாரிக்க பூண்டு வெங்காயம், கேரட், பிரிஞ்சி இலை, உங்கள் வீட்டில் இருக்கும் காய்கறிகளில் ஏதேனும் 4 - 5 சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் பூசணி, பட்டாணி, பீன்ஸ் என பல வகைகளை சேர்த்து கொள்ளலாம். காய்கறிகளை நன்கு கழுவ வேண்டும்.

    தோல் நீக்காமல் காய்களை வெட்டிக் கொள்ளலாம். பூண்டு தவிர மற்ற காய்கறிகளை சம அளவு எடுத்துக் கொள்ளலாம். பூண்டு 4 - 5 பல் போதும். மொத்த காய்கறிகள் எந்த அளவு இருக்கின்றதோ அந்த அளவு நீர் சேர்த்து 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை மிக மிக மெல்லிய தீயில் வேக விடுங்கள். பின்னர் 1 மணி நேரம் அதனை மூடி வைத்து காய்கறி சத்து நீரினை நன்கு வடித்து எடுத்து விடுங்கள்.)

    சிலர் காய்கறிகளை 2 விசில் வரும் வரை வேகவிட்டு அப்படியே மிக்சியில் கூழாய் அரைத்து விடுவர். இது அவரவர் விருப்பத்தினைப் பொறுத்தது. இந்த சத்து நீரில் உருளை, சேனை, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளி போன்றவற்றினை சேர்ப்பதில்லை. இப்பொழுது காய்கறி சத்து நீர் ரெடியாகி விட்டது. இது அதிகமாக இருப்பின் பிரிட்ஜில் வைத்து மறு நாளும் பயன்படுத்தலாம்.



    செய்முறை

    ஆப்பிள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை நசுக்கி கொள்ளவும்.

    முந்திரியை ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.

    கனமான பாத்திரத்தில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்து மிதமாக சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் நசுக்கிய பூண்டு, காய்கறி சத்து நீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    பின்னர் முந்திரி விழுது சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

    ஆறிய பின் மிக்சியில் ஒரு நிமிடம் நன்கு சுற்றி பின்னர் மிதமாய் சுட வைத்து மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×