search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஒற்றைக்கண் பார்வை ஏற்பட காரணங்கள்
    X

    ஒற்றைக்கண் பார்வை ஏற்பட காரணங்கள்

    ஒரு கண் பார்வையை மருத்துவ மொழியில் ‘மோனோகுலர் வி‌‌ஷன்’ என்கிறார்கள். ஒற்றைக் கண் பார்வை இழப்பு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்படலாம்.
    ஒரு கண் பார்வையை மருத்துவ மொழியில் ‘மோனோகுலர் வி‌‌ஷன்’ என்கிறார்கள். சிலருக்கு சில மணி நேரம் மட்டும் பார்வை இழப்பு ஏற்படும். சிலருக்கு சில நாள்களுக்கு மட்டும் பார்வை இழப்பு ஏற்படலாம். சிலருக்குப் பார்வைக் குறைபாடு சில ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டுக்கொண்டே வந்திருக்கலாம். ஒற்றைக் கண் பார்வை இழப்பு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்படலாம். ஒரு கண் பார்வை இழப்பை, சிகிச்சையளிக்கக்கூடிய பாதிப்பு, சிகிச்சையளிக்க முடியாத பாதிப்பு என இரண்டாகப் பிரிக்கலாம்.

    ஒரு கண் பார்வை நேராகவும், அடுத்த கண்ணின் பார்வை விலகிய நிலையிலும் காணப்படுவதை மாறுகண் என்கிறோம். மாறுகண் இருப்பவர் அதிர்‌‌ஷ்டசாலி என்ற தவறான கண்ணோட்டம் இருக்கிறது. மருத்துவ ரீதியாக, மாறுகண்ணை குணப்படுத்தவில்லை என்றால், பார்வையை இழக்க நேரிடும். எந்தக் கண்ணின் பார்வை விலகிய நிலையில் இருக்கிறதோ, அந்தக் கண்ணின் நரம்பு வழியாகச் செல்லும் தகவல்கள் மூளையில் சரியாகப் பதிவாகாது.

    மற்றொரு கண்ணிலிருந்து செல்லும் தகவல்கள் தெளிவாகப் பதிவாகும். இந்த நிலை தொடரும்போது, ஒரு கட்டத்தில் எந்தக் கண்ணிலிருந்து தெளிவான தகவல் கிடைக்கவில்லையோ, அந்தத் தகவல்களை மூளை புறக்கணிக்கத் தொடங்கும். அப்போது மூளை புறக்கணித்த கண்ணின் செயல்பாடு குறையத் தொடங்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் எந்தச் சிகிச்சையளித்தாலும் பயனளிக்காது. அழகியல் சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டு, விலகியிருக்கும் கண்ணை நேராக்க முடியும். ஆனால், பார்வையைத் திரும்பப் பெற முடியாது.

    கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்சினைகள் இரு கண்களிலும் ஏற்பட வேண்டும் என்பது இல்லை. ஒரு கண்ணில் மட்டும் சிலருக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். அப்போது, நன்றாகத் தெரியும் கண்ணை வைத்து சமாளித்துக்கொண்டே இருப்பார்கள். நன்றாக இருக்கும் கண்ணில் அதிக அழுத்தம் கொடுக்கும் போது தலைவலி ஏற்படும். அதன் பிறகுதான் மருத்துவரை நாடுவார்கள். சிலர், ஒரு கண்ணில் பிரச்சினை இருக்கிறது என்பதை உணராமலேயே இருப்பார்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்து இதற்குத் தீர்வு காணாவிட்டால், குறைபாடுள்ள கண்ணில் பார்வையை இழக்க நேரிடும். உலக அளவில் கிட்டப் பார்வை, தூரப் பார்வையால் பார்வை இழப்பது அதிகரித்து வருகிறது. கிட்டப் பார்வை, தூரப் பார்வையால் மாறு கண் பிரச்சினையும் ஏற்படலாம்.

    குழந்தைகளைப் பொறுத்தவரை ஒரு கண் பார்வை இழப்புக்குப் பிரதான காரணம், பள்ளியில் சக வயதினரோடு பழகும்போது பென்சில், பேனாக்களால் கண்ணில் ஏற்படும் விபத்துகள். இவை தவிர, பட்டாசு விபத்துகள், கழிவறையில் பயன்படுத்தும் ஆசிட் போன்ற ரசாயனங்கள், சுண்ணாம்பு போன்றவை கண்ணில்படுதல் காரணமாகவும் ஒரு கண்ணில் பார்வையை இழப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அரிதாக, ரத்தச்சோகை, கண்களில் புற்றுநோய், தலசீமியா போன்ற ரத்தம் சார்ந்த குறைபாடுகள், சாலை விபத்துகள் ஆகியவையும் குழந்தைகளின் ஒரு கண் இழப்புக்குக் காரணமாக அமைகின்றன.

    அதேபோல தாயின் கர்ப்பப்பையிலிருந்து குழந்தை வெளியே வரும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுக்க முயல்வார்கள். அப்போது அந்த உபகரணங்களைச் சரியாகக் கையாளவில்லை என்றால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, ஒரு கண்ணில் பார்வையை இழக்க நேரிடும். அதனால் தான் ஐந்து வயதுக்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயம் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

    Next Story
    ×