search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மூக்கில் ரத்தக்கசிவு - காரணமும், தீர்வும்
    X

    மூக்கில் ரத்தக்கசிவு - காரணமும், தீர்வும்

    மூக்கில் ரத்த ஒழுக்கு பொதுவாக பலருக்கும் ஏற்படுகிறது. இது ஏன் ஏற்படுகிறது, எப்படி நிறுத்துவது? என்பதில் பிரச்சினையும் மருத்துவமும் இணைந்தே காணப்படுகிறது.
    மூக்கில் ரத்த ஒழுக்கு பொதுவாக பலருக்கும் ஏற்படுகிறது. இது அதிகம் தொல்லை கொடுக்கக் கூடியதெனினும் இது மிகப்பெரிய மருத்துவப் பிரச்சினை அல்ல. ஆனால், இது ஏன் ஏற்படுகிறது, எப்படி நிறுத்துவது? என்பதில் பிரச்சினையும் மருத்துவமும் இணைந்தே காணப்படுகிறது.

    குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் மூக்கினுள் உள்ள நடுச்சுவரில் ரத்தக்கசிவு ஆரம்பமாகிறது. இந்த நடுச்சுவரே உங்கள் மூக்குக் குழியினை இரண்டாகப் பிரிக்கிறது. நடு வயதினருக்கும் வயதானவர்களுக்கும் நடுச்சுவரில் ரத்தக்கசிவு ஏற்படுவதுடன், உள் மூக்கிலும் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஆனால், இவ்வகை ரத்தக்கசிவுகள் அரிதானவையே. இவை தடித்த ரத்த நாளங்களாலும் ரத்த மிகை அழுத்தத்தாலும் ஏற்படலாம்.

    சில சமயம் மூக்கில் ரத்த ஒழுக்கு தானாக ஏற்படுகிறது. இதனை நிறுத்துவது மிகவும் சிரமமான காரியமாகும். இதற்கு மருத்துவரின் உதவி தேவைப்படும். மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்பட்டவுடன் உட்கார்ந்து விடுங்கள். இது மூக்கு உறுப்புகளில் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன் ரத்தம் வெளியேறுவதையும் குறைக்கும். மூக்கைப் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் அமுக்கிப் பிடித்துக் கொண்டு, வாயால் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். இது நடுச்சுவரில் அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த வெளியேற்றத்தை நிறுத்தும்.

    சுவாசிக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ளவாறு பார்த்துக் கொள்வது, மூக்கின் சளிச்சவ்வுப் படலத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள பயன்படும். ஒருமுறை மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்பட்டு நின்ற பிறகு, மூக்கைக் குடைவது, சீந்துவது போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது. சில மணி நேரங்களுக்கு குனியக்கூடாது. இதயத்தைவிட தலையை உயரமாக வைத்துக் கொள்ளவும். மீண்டும் ரத்த ஒழுக்கு ஏற்பட்டால், அழுத்தமாக மூக்கை உள்புறமாக உறிஞ்சுவதால் உள்ளே ரத்த உறைவு கட்டிகள் நீங்கிவிடும்.



    மீண்டும் ரத்தப்போக்கு இருப்பின் மேலே கூறியபடி மீண்டும் மூக்கை அழுத்திப் பிடித்து வாயால் சுவாசிப்பதுடன் மருத்துவ உதவியை நாடவும். 15 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் ரத்தக்கசிவு நீடித்தாலோ, பாதிப்புக்குள்ளானவர் தளர்வாகவோ மயக்கம் வருவதுபோல உணர்ந்தாலோ மருத்துவ உதவி அவசியம். அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி என்ன காரணம் எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    ஒருவருக்கு அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் கொட்டினால் நாசித் துவாரங்களினுள் தினமும் உப்பு நீரை முகரவும். ஆரஞ்சு, தக்காளி போன்ற (வைட்டமின் சி அடங்கிய) பழங்களைச் சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு ஏற்படுவது ஆபத்தில்லா கட்டிகளின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

    இது பெண்களைக் காட்டிலும் பருவ வயது ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. பருவ வயதை தாண்டியதும் இது தானாக சரியாகிவிடும். ஆனால், சிலருக்குக் கட்டிகள் வளர்ந்து மூக்குத் துவாரத்தையும், சுவாசப் பாதையையும் அடைத்து வேறு அறிகுறிகளையும், ரத்த ஒழுக்கையும் ஏற்படுத்தலாம். மூக்கில் ஏற்படும் கட்டிகள் தானாக சுருங்காதபோது மருத்துவரை அணுகவும். அவர் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்.

    Next Story
    ×