search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மிளகாயை ஒதுக்காதீர்கள்...
    X

    மிளகாயை ஒதுக்காதீர்கள்...

    நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயில் ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் போட்டிருக்கிறது.
    நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயில் ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் போட்டிருக்கிறது. அதனால் உணவில் காரத்திற்காக மசாலா பொடிகளை சேர்ப்பதற்குப் பதிலாக பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம்.

    பச்சை மிளகாய் காய்ந்து சிவந்து வத்தலாக மாறிவிட்டால், அதில் மருத்துவக் குணங்கள் காணாமல் போய்விடுகிறதாம். அதனால் பச்சை மிளகாயே உணவுக்கும் உடலுக்கும் நல்லது.

    பச்சை மிளகாயில் ‘ஆன்டி ஆக்சிடன்ட்’கள் என்ற சத்துப்பொருள் மிக அதிக அளவில் உள்ளது. நமது உடலுக்கு பாதுகாவலனாக இது உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோயில் இருந்து காப்பாற்றுகிறது. இளமையை நீட்டிக்க வைக்கும் வல்லமையும் இந்த பச்சை மிளகாய்க்கு உண்டு.

    இதில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. மிளகாயை பயன்படுத்தும் போது மூக்கடைப்பு சரியாவதை நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்போம். இதில் வைட்டமின் ‘ஈ’ சத்தும் அதிக அளவில் இருக்கிறது. இது சருமத்தை பாதுகாக்கவும், எண்ணெய் சுரப்புக்கும் உதவுகிறது. இப்படி பச்சை மிளகாயால் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் எந்தவித கலோரிகளும் இல்லாமல் கிடைக்கிறது. அதனால் உடல் எடையை குறைப்பதற்காக உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் இதனை தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் பச்சை மிளகாய் பயன்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் உணவு செரிமானம் வேகமாக நடைபெறுகிறது.

    நல்ல காரசாரமான உணவு சாப்பிட்டப்பின் நீங்கள் உற்சாகமாக இருந்தால் அது தற்செயலாக நடந்ததல்ல. அதற்குப்பின் இந்தப் பச்சை மிளகாய் இருக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் பச்சை மிளகாய் மிக நல்லது. இப்படி ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறது. அதே நேரத்தில் பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

    நாம் சாப்பிடும்போது நம் கையில் சிக்கும் பச்சை மிளகாய்த் துண்டுகளை கறிவேப்பிலை போல் ஒதுக்கி விடாமல் அதை சாப்பிட்டாலே போதும். கறிவேப்பிலையும் அப்படித்தான், அதிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. அதையும் ஒதுக்காமல் உணவோடு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
    Next Story
    ×