search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோடை வெயிலில் இருந்து தப்பிக்க...
    X

    கோடை வெயிலில் இருந்து தப்பிக்க...

    வெயில் காலத்தில் அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும். இதுபோன்ற உணவுகள் அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும்.
    தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இயற்கையை வெல்ல எவராலும் முடியாது. எனவே அதனோடு இசைந்து வாழ கற்றுக்கொள்வது சாலச்சிறந்தது. கொடூரமாக கொளுத்தும் வெயில் காரணமாக வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சிலர் சுருண்டு விழுந்து மரணம் அடைகிறார்கள்.

    தமிழ்நாட்டில் வெயில் கொடுமையால் பகல் வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலும் வீட்டிற்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கம் மக்களை வாட்டுகிறது. குழந்தைகள், முதியவர்கள் என பாகுபாடு இன்றி அனைவரும் வெயிலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நகர்ப்புற பகுதிகளில் வெயில் மண்டைய பிளக்கிறதே என நினைத்தால், கிராமப்புறங்களில் அதைவிட மோசம். பெரும்பாலானோர் கோடை வெயிலுக்கு பயந்து கொண்டு உச்சி நேரங்களில் வெளியில் வருவதே இல்லை.

    நமது உடலின் தட்பவெப்பநிலை சீராக இல்லாமல், திடீர் என மாறிக்கொண்டே இருப்பது, உடலை வெகுவாக பாதிக்க செய்கிறது. வெயிலின் கொடுமையினால் நம் உடல் மட்டுமல்ல... நமது தலைமுடி, கண்கள், சருமம் என அனைத்தையும் உஷ்ணம் ஒரு கை பார்த்துவிட்டுத்தான் செல்லும்.

    அதிக நேரம் வெயிலில் அலைந்துவிட்டு குளிர்சாதன அறைக்குள் சென்றால் மோசமான பின்விளைவுகளை உண்டாக்கும். வெயிலின்போது தேவைக்கு அதிகமாக காபி, டீ, உடலுக்கு வேண்டாத குளிர்பானங்கள் போன்றவை மென்மேலும் தாகத்தை தூண்டும். உணவுப் பழக்கங்களும் வெயில் காலத்தில் கவனிக்க வேண்டியது. அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும். வெயில் நேரங்களில் இதுபோன்ற உணவுகள் அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும்.

    எனவே இயற்கையான பானங்களை அதிகம் பருக வேண்டும். பழச்சாறுகள், இளநீர், கூழ், மோர் போன்றவை அதிகம்குடிக்கலாம். வெள்ளரி, தர்ப்பூசணி சூப், தக்காளி சூப் வகைகளை சாப்பிடலாம். திராட்சை, சாத்துக்குடி ஆரஞ்சு, எலுமிச்சை,மாதுளை, முலாம் பழம், ஆப்பிள் போன்றவற்றின் பழச்சாறுகளையும் பருகலாம். நுங்கு, கொய்யா போன்றவையும் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும்.

    வெயிலில் வெளியே செல்வதாக இருந்தாலும் சரி, வெளியே சென்று வந்தாலும் சரி ஒரு முறை குளியலை போட வேண்டும். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 2 முறை குளிக்கலாம். இரவு உறங்கும் முன் குளித்துவிட்டு உறங்கினால் உடல் குளிர்ச்சி அடையும். வெயில் நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது குடை எடுத்துச்செல்லலாம். அல்லது தலைக்கு தொப்பி அணிந்துகொள்ளலாம். கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணிந்துகொள்ளலாம். பெரும்பாலும் வெயில் நேரங்களில் வெளியில் செல்வதையே தவிர்க்கலாம்.

    உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர் என இணைந்து, நமது உடலின் உஷ்ண நிலையை சீராக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது. அந்த வகையில் வெயிலுக்கு உகந்த உடைகள் என்றால் அது பருத்தி உடைகள்தான். பொதுவாக கருப்பு ஆடைகள் வெயிலை உள் இழுக்கும் என்பது அனைவரும் அறிந்த அறிவியல். எனவே ஆடைகளையும் இந்த காலகட்டத்தில் நாம் தேர்ந்தெடுத்து அணியலாம்.

    பருத்தி ஆடைகளுக்கு இயல்பாகவே வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளதால், மதிய நேரத்தின் போது வெளியே சென்றால் பருத்திஆடைகளை உடுத்துங்கள்.

    வீடுகளில், மொட்டை மாடியில் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றுங்கள். இது ஓரளவு வெப்பத்தை குறைக்கும்.

    வெயில் காலம் முடியும் வரை அனைவருமே ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் பிரியாணி, சாம்பார் சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பதில் நீர் வகையிலான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள்.

    மண் பானையில் நீர் ஊற்றி வைத்து மண்பானையில் இருந்து கிடைக்கும் குளிர்ந்த நீரை குடிக்கலாம். 
    Next Story
    ×