search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வியர்வை : வியக்க வைக்கும் உண்மைகள்
    X

    வியர்வை : வியக்க வைக்கும் உண்மைகள்

    வியர்வை ஏன் வருகிறது? வெயில் அடித்ததும் அதிகமாக வியர்ப்பது ஏன்? வியர்வைக்கு நிறம் உண்டா? இன்னும் நாம் வியர்வைப் பற்றி அறிய வேண்டிய சங்கதிகள் என்னென்ன? கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
    வெயில் அதிகரித்ததும் உடலில் அதிகமாக வியர்க்கிறதா? வியர்வை ஏன் வருகிறது? வெயில் அடித்ததும் அதிகமாக வியர்ப்பது ஏன்? வியர்வைக்கு நிறம் உண்டா? இன்னும் நாம் வியர்வைப் பற்றி அறிய வேண்டிய சங்கதிகள் என்னென்ன? கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா...

    வியர்வை ஏன்?

    நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் விதமாகவும், உடலின் வெப்பநிலையை சீர்படுத்தும் ஒரு அமைப்பாகவும் வியர்த்தல் நிகழ்வு உடலில் நடக்கிறது. உடல் தோலின் அடிப்பகுதியில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை உருவாக்கி வெளியேற்றுகின்றன. சில சத்துக்கள் மிகுந்தால் கழிவுடன் கலந்து வெளியேற்றப்படுவது உண்டு.

    வாசனை கிடையாது

    வியர்வைக்கு உண்மையில் வாசனை கிடையாது. ஆனால் சருமத்தில் வாழும் பாக்டீரியாக்கள் அதனுடன் கலந்து நாற்றத்தை உருவாக்குகிறது. இதுவே சிலருடைய வியர்வை கெட்ட நாற்றம் அடிக்க காரணமாகும்.சைவ உணவு சாப்பிடுபவர்களின் வியர்வை அதிகமாக நாற்றம் அடிப்பதில்லை என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

    வியர்வையும், வெப்பமும்

    வெளியில் வெப்பம் அதிகமாக இருந்தால், அந்த வெப்பம் உடலைத் தாக்காதவாறு தற்காத்துக் கொள்வதற்காக அதிகமாக வியர்வை வெளியேற்றப்படும். அதனால்தான் இந்த வெயில்காலத்தில் நம்மை வியர்வை பாடாய்ப்படுத்துகிறது. வியர்வையால் உடலின் நீர்ச்சத்து வெகுவாக குறைந்துவிடுவதால் தாகம் எடுக்கும். தண்ணீர் குடித்தாலும் தாகம் தீர்ந்ததுபோல உணர முடியாது. அதனால் தாதுக்கள் நிறைந்த ஜூஸ் மற்றும் பானங்களை பருகினால் உடலின் தாதுத் தேவை ஈடுகட்டப்படும். பழரசங்கள் மற்றும் இயற்கை குளிர் பானங்களை பருகி கோடையை சமாளிக்கலாம்.

    வியர்வை எவ்வளவு?

    வியர்வையின் அளவு ஒவ்வொருவரின் உடல் வெப்பம் மற்றும் சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும். 85 டிகிரி வெப்பநிலையிலும், 40 சதவீத ஈரப்பதத்திலும் ஒரு மனிதர் சராசரியாக 1.8 லிட்டர் வியர்வையை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றுவார் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வியர்வை வியாதி

    சிலருக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டும். இப்படி அதீத வியர்வை வெளியேற்றப் பாதிப்பு ‘கைபர்விட்ராசிஸ்’ எனப்படுகிறது. உலகில் 3 சதவீதம் பேருக்கு இப்படி அதீத வியர்வைப் போக்கு பாதிப்பு இருக்கிறதாம்.

    அதேபோல சில மனிதர்களுக்கு, நீர்யானைபோல ரத்தச் சிவப்பில் வியர்ப்பது உண்டு. இது ஹீமடோஹைட்ராசிஸ் எனப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களின் வியர்வைச் சுரப்பியானது, ரத்த செல்களை சேதப்படுத்துவதால் வியர்வையுடன் கலந்து ரத்தமும் வெளியேறுகிறது. அதிக மன அழுத்தத்தால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

    ராணுவ வீரர்கள் போரை எதிர்கொள்ளும் முன்பு அவர்களுக்கு வியர்வை சிவப்பாக வெளியேறும் என்று லியானார்டோ டாவின்சி தெரிவித்து உள்ளார். அதேபோல மாலுமிகள் புயல்சின்னம், கடும் அலைகளை எதிர்கொள்ள நேரிட்டால் இது போன்ற பாதிப்புக்கு உள்ளாவதாகவும் கருத்து உள்ளது. ஆனால் இவை ஆதாரப்பூர்வமாக மெய்ப்பிக்கப்படவில்லை.



    லட்சக்கணக்கில் வியர்வை சுரப்பிகள்

    மனித உடலில் கண், வாய், வாய், மூக்கு உள்ளிட்ட நவ துவாரங்கள் இருப்பதாக கூறப்படுவது உண்டு. வியர்வை வெளியேறும் வழிகளும் உடலின் துவாரங்களே. ஆனால் அவை சாதாரணமாக கண்களுக்குத் தெரிவதில்லை. வியர்வையை வெளியேற்றுவதற்காக உடலில் பல லட்சம் நுண்துளைகள் உள்ளன. 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான வியர்வை சுரப்பிகள் இவற்றின் அடியில் இருந்துசெயல்பட்டு வியர்வையை வெளியேற்றுகின்றன.

    மஞ்சள் வியர்வை

    கை உடலுடன் இணையும் பகுதியின் அடிப்புறம் அக்குள் எனப்படுகிறது. அதிகமாக வியர்க்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த பகுதியில் வழியும் வியர்வையால் உடையில் மஞ்சள் கறை தோன்றினால் உடலில் புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மிகுந்துவிட்டதாக அர்த்தம்.

    சிவப்பு வியர்வை

    நமது வியர்வைக்கு நிறம் கிடையாது. ஆனால் சில பொருட்களின் சேர்க்கையால் வியர்வை நிறம் மாறுவது உண்டு. உதாரணமாக நீர் யானைகளின் வியர்வை சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அதை வியர்வை என்று அறியாமல் பலவித கதைகள் புனையப்பட்டன. நவீன அறிவியல் அவற்றின் சிவப்பு வியர்வைக்கு காரணத்தை கண்டறிந்து கூறி உள்ளது. வியர்வையுடன் சிவப்பு நிறமிப் பொருளும் கலந்து வெளியேறுவதே அதன் வியர்வை சிவப்பாக இருக்கக் காரணமாகும். மேலும் அவற்றின் சிவப்பு வியர்வை, சூரிய வெப்ப தாக்குதலை மிகுதியாக கட்டுப்படுத்துவதும், தீமை செய்யும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    உணவும், வியர்வையும்...

    சாப்பிடுவது வியர்வையை தூண்டும். சாப்பிடும்போது வளர்ச்சிதை மாற்றங்கள் அதிகமாகிறது. அப்போது உடல் வெப்பம் அதிகரிக்கிறது. எனவே உடலை குளிர்விக்கும் விதமாக வியர்வை அதிகமாக சுரக்கத் தொடங்குகிறது.

    வியர்வையில் உப்பு

    ஆண்களுக்கு பெண்களைவிட அதிகமாக வியர்க்கும். ஆண்களுக்கு சுமார் 40 சதவீதம் அதிகமாக வியர்க்கிறதாம். மேலும் ஆண்களின் வியர்வையில் உப்புத்தன்மையும் சற்று அதிகமாக இருக்கும்.
    Next Story
    ×