search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இதயத்தை காப்போம்
    X

    இதயத்தை காப்போம்

    மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையைச் சேர்ந்த ஒரு நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும்.
    நம் நாட்டில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 4 பேர் மாரடைப்பால் உயிரிழக்கிறார்கள். 25 சதவீத மாரடைப்பு மரணங்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படுகின்றன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 900 பேர் இதய நோயால் உயிரிழக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

    உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. ஆண்டு தோறும் சுமார் 1 கோடியே 73 லட்சம் பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இதய குறைபாட்டுடன் பிறக்கின்றன.

    உலக அளவில் நிலைமை இப்படி என்றால், இந்தியாவில் மாரடைப்பின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையைச் சேர்ந்த ஒரு நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம். என்ஜினைச் சீராக பராமரிப்பது போல இதயத்தைப் பாதுகாக்கவும் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

    இன்றைய நெருக்கடி மிகுந்த உலகில் மன அழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. எந்தச் செயலையும் பதற்றமின்றி, மன அழுத்தமின்றி செய்யப் பழகிக்கொண்டாலே இதயத்துக்கு நல்லது. மன அழுத்தத்தின் விளைவாக உயரும் ரத்த அழுத்தம் மாரடைப்புக்கு கம்பளம் விரிப்பது போலத்தான். மவுனத்தை கடைபிடித்து, நிதானமாக செயல்பட்டால் மனஅழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    மூலைக்கு மூலை துரித உணவு கடைகள் அணிவகுத்து நிற்கும் இந்தக் காலத்தில், சமச்சீரான உணவுப் பழக்கத்தை நம்மில் பலரும் முற்றிலும் மறந்து விட்டோம். குறிப்பாக இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் 'நவநாகரிக உணவு' என்ற பெயரில் பீட்சாக்களையும், பர்கர்களையும், நூடுல்சையும் சாப்பிடவே அதிகம் விரும்புகிறார்கள்.

    'உணவே மருந்து' என்ற அடிப்படை தத்துவத்தை கற்றுக்கொடுக்கவும் பெற்றோர் மறந்து விட்டார்கள். விளைவு? உடல் பருமன். இதனால் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். துரித உணவு பழக்கத்தை கைவிட்டு, சத்தான, சமச்சீரான உணவை உட்கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

    இதயத்தின் முக்கிய எதிரி புகை என்பதில் சந்தேகம் தேவை இல்லை. குறிப்பாக, இந்தக் காலத்தில் கல்லூரி இளைஞர்கள் மட்டுமில்லை, பள்ளி சிறுவர்கள்கூட புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி வருவதை பார்க்க முடிகிறது. எவ்வளவு காலத்துக்கு புகை பிடிக்கிறோமோ, இதயத்துக்கு அவ்வளவு ஆபத்து அதிகரிக்கும். எனவே, புகையை விட்டொழிக்க வேண்டும். புகையிலை சார்ந்த எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது.
    Next Story
    ×