search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கண் தானம் குறித்த விழிப்புணர்வு
    X

    கண் தானம் குறித்த விழிப்புணர்வு

    தமிழகத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றன.
    தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பேர் பார்வையின்றி தவித்து வருகின்றனர். மக்களிடம் இருக்கும் தவறான நம்பிக்கைகளின் காரணமாக பலரும் கண் தானம் செய்ய தயங்குவதால் ஆண்டுக்கு சராசரியாக 6 ஆயிரம் கண்கள் மட்டுமே தானமாக கிடைக்கின்றன. தமிழகத்தில் சாலை மற்றும் ரெயில் விபத்துகளில் சிக்கியும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டும், தற்கொலை செய்துகொண்டும், தினமும் பலர் இறக்கின்றனர். இவ்வாறு ஆண்டுக்கு 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இறக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேரும் இறக்கின்றனர். இவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களின் கண்களே தானமாக கிடைக்கின்றன.

    தமிழகத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றன. இருந்தாலும் இறந்தவர்களின் கண்களை தானம் செய்ய பொதுமக்கள் பலர் முன்வருவது இல்லை.

    தமிழகத்தில் தானமாக கிடைக்கும் அத்தனை கண்களையும் பயன்படுத்த முடிவது இல்லை. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 4 ஆயிரம் கண்களை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. ஒருவர் இறந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்களை அகற்றினால்தான் அவற்றை பயன்படுத்த முடியும்.

    இறந்தவர்கள் பற்றிய தகவல் தாமதமாக கிடைத்தால், அவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்கள் பயன்படாது. அதேபோல, முதியவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்களில், ஒரு சிலரது கண்களில் செல்கள் குறைவாக இருக்கும் என்கிறார்கள். அந்த கண்களையும் பயன்படுத்த முடிவது இல்லை. இதுபோன்ற காரணங்களால், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2 ஆயிரம் கண்களை பயன்படுத்த முடிவதில்லை.

    ஒருவர் உயிரிழந்தவுடன் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில், ‘இறந்தவரின் கண்களை உடனடியாக தானம் செய்ய வேண்டும்‘ என்ற எண்ணம் தோன்றுவது இல்லை. ஒருசிலர்தான் அதுபற்றி யோசிக்கிறார்கள்.

    இறந்தவரை ஊனத்தோடு புதைத்தால் அடுத்த பிறவியில் அவர் ஊனத்தோடு பிறப்பார் என்ற மூடநம்பிக்கை மக்களிடையே பரவலாக உள்ளது.

    உலக அளவில் இலங்கையில் கண் தானம் அதிகம் உள்ளது. இந்தியாவில் கண் தானம் செய்வதில் குஜராத் மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு ஆண்டுக்கு சுமார் 1,000 கண்கள் தானமாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×