search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கம்ப்யூட்டர் கீபோர்டும்.... கிருமிகளும்...
    X

    கம்ப்யூட்டர் கீபோர்டும்.... கிருமிகளும்...

    சில சமயம் கம்ப்யூட்டரில் தானே வேலை பார்க்கிறோம் என்று அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.
    நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்...?

    சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையை பயன்படுத்திய பிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்த பிறகு எனத் தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படி செய்கிறோம். அதே நேரம் கம்ப்யூட்டரையோ, செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளை கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று நினைக்கலாம்.

    ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரி பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கம்ப்யூட்டர் கீ போர்டில் பாக்டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசுவோம். கண்ணை கசக்குவோம். சில சமயம் கம்ப்யூட்டரில் தானே வேலை பார்க்கிறோம் என்று அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.

    லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதில் ஒரு கம்ப்யூட்டரில் அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன. தனிநபர் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறுத்தே, கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதும் அமைகிறது.



    பலர் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்தம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்துகொண்டு கைக்குட்டையால் முகத்தை மூடாமல் இருமுவதும், தும்முவதும் சகஜம். இதுபோன்ற பழக்கங்களாலும் கீ போர்டில் கிருமிகள் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளியோ, இரைப்பை குடல் அழற்சியோ இருந்தால், அவர் பயன்படுத்திய கீ போர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போதும். அவருடைய நோய்கள் நமக்கும் எளிதாக தொற்ற வாய்ப்பாகிவிடும்.

    நம்மில் எத்தனை பேர் கம்ப்யூட்டரையும், மவுசையும் அடிக்கடி சுத்தம் செய்கிறோம்? கீ போர்டில் தூசுப்படலம் பரவினாலும் சுத்தம் செய்யாமல், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருக்கிறது. அப்படி இல்லையென்றால் இது அலுவலக கம்ப்யூட்டர்தானே, அவர்கள் சுத்தம் செய்துகொள்வார்கள் என்ற நினைப்புடன் வேலை செய்பவர்களும் உள்ளனர்.

    குறிப்பிட்ட கால இடைவெளியில் கீ போர்டு, மவுஸ், செல்போன் ஆகியவற்றை சுத்தப்படுத்த வேண்டும். கீ போர்டைத் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூலம் அதனுள்ளே சிக்கியிருக்கும் உணவுத் துணுக்கு களையோ, சிறிய குப்பையையோ அகற்றலாம். மெல்லிய துணியின் மூலம் இவற்றை துடைத்தெடுக்கலாம்.
    Next Story
    ×