search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இதயம் காக்க உறுதி ஏற்போம்
    X

    இதயம் காக்க உறுதி ஏற்போம்

    இன்றைய காலகட்டத்தில் இதய நோய் குறித்து இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நாளை (செப்டம்பர் 29-ந்தேதி) உலக இதய தினம்.

    மனிதனின் உயிர்நாடி இதயம். நம் உடலில் அனைத்து உறுப்புகளை விடவும் இது அதி முக்கியத்துவம் வாய்ந்தது; அற்புதமானது.

    இதயம் விரிந்து சுருங்கி எப்போதும் இடைவிடாது, தொடர்ந்து இயங்கி வருகிறது. ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 80 தடவை சுருங்கி விரியும் பணி நடைபெறுகிறது. நாள்தோறும் சராசரியாக ஒரு லட்சம் முறை இதயம் துடிக்கிறது. மரபுப் பண்புகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடற்பயிற்சி இன்மை, உடல் பருமன், புகைப்பிடித்தல், புகையிலைப் பழக்கம், மதுப்பழக்கம், மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கங்கள், ரத்த மிகை கொழுப்பு போன்றவை இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகும்.

    மாரடைப்பு வராமல் தடுக்க மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்றவற்றை முற்றிலும் கைவிட வேண்டும்.

    உலக இதய நாளையொட்டி இந்த ஆண்டும் வழக்கம் போல் ‘லட்சியக்கருவை’ உலக இதய கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும், புகையிலைப் பழக்கத்தை அறவே விட வேண்டும், சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் ஆகிய உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள உரக்க வலியுறுத்துகிறது.

    உலகில் உள்ள எல்லா மனிதர்களும் வாரத்தில் 150 நிமிடங்கள் நடுநிலையான நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு சிபாரிசு செய்துள்ளது. உலகில் உள்ள 25 சதவீத மக்கள் இந்த இலக்கை எட்டவில்லை.

    இந்திய மனிதர்களில் 34 சதவீதமும் குறிப்பாக இந்தியப் பெண்களில் 40 சதவீதமும் அடிப்படை உடற்பயிற்சி கூட செய்வதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

    இந்திய மக்கள் உடற்பயிற்சி செய்வதை ஊக்கப்படுத்தாதவரை இதய நோய்கள் அதிகமாகும் போக்கை தடுத்து நிறுத்த முடியாது. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய பெண்கள் இளம் வயதிலேயே நோய்க்கு ஆளாகிறார்கள். குறிப்பாக இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

    அதிக உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்து பணிபுரியும் நிலை அதிகமாகிவிட்டது. தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் மட்டுமல்ல, அலுவலகங்களில் கம்ப் யூட்டர்களில் பணிபுரியும் அலுவலர்கள் கார், பஸ், லாரி ஓட்டுநர்கள், வியாபாரிகள் அமர்ந்த நிலையில் நீண்ட நேரம் பணிபுரிகிறார்கள்.

    எனவே இவர்கள் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு மாரடைப்பு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக மருத்துவ உலகம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. இதனால் தொடர்ந்து உட்காருவதை தவிர்த்து 60, 90 நிமிடங்களுக்கு ஒரு முறை 5 அல்லது 10 நிமிடங்கள் நடப்பது நலம்.

    உணவுப் பழக்கத்திற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை 2015-20-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் சுகாதார இலாகா வகுத்துள்ளது. முன்பு ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் வரை கொலஸ்ட்ரால் பொருட்களை உண்ணலாம் என்று வரையறை வைத்திருந்தனர்.

    கொலஸ்ட்ரால் உணவைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் மாவுச்சத்து (கார்போ ஹைடிரேட்) பொருட்களை அதிகம் சாப்பிட்டு அது தொடர்பான பிரச்சினை அதிகரித்து வருவது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது. இதனால் அந்த வரையறை நீக்கப்பட்டது. இதனால் மாவுச்சத்து என்பது ஒரு புதிய கொழுப்பு என்ற நிலைப்பாடு நிலவுகிறது. இதனால் சரிவிகித உணவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    இதன்படி காய்கறி, பழங்கள், நார்ச்சத்து, புரதச்சத்து, மீன் வகைகள் போன்றவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். கொலஸ்ட்ராலுக்கு அளிக்கப்பட்ட வரையறை நீக்கப்பட்டது, இதய நோய் வராதவர்களுக்கான சிபாரிசு. ஆனால் ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள் கொலஸ்ட்ராலை நன்றாகக் குறைக்க வேண்டும் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் இதய நோய் குறித்து இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த இதய தினத்தை முன்னிட்டு மேற்கூறப்பட்ட மூன்று உறுதிமொழிகளை மேற்கொண்டு அதன்படி செயல்பட்டால் வரும் ஆண்டுகளில் இதய நோய் வராமல் தடுக்க முடியும். உறுதிமொழி ஏற்போம்! இதயம் காப்போம்!

    டாக்டர் ரிபாய் சவுக்கத் அலி,

    இதய நோய் சிகிச்சை நிபுணர்

    Next Story
    ×