search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முத்துப் பற்களும், பவளப் பற்களும்
    X

    முத்துப் பற்களும், பவளப் பற்களும்

    பளிச்சிடும் பற்கள் நமக்கு அழகு சேர்ப்பவையாகும். ஆரோக்கியமான பற்கள் முத்துகள்போல பளிச்சிடும். பற்களைப் பற்றிய சுவையான செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
    பளிச்சிடும் பற்கள் நமக்கு அழகு சேர்ப்பவையாகும். ஆரோக்கியமான பற்கள் முத்துகள்போல பளிச்சிடும். பற்களில் மஞ்சள் நிறம் படிவது ஏன் என்பது தெரியுமா? பற்பசையை கண்டுபிடித்தவர்கள் யார், டூத் பிரஷை உருவாக்கியவர்கள் யார்? பற்களில் பவள கற்களைப் பதித்து அலங்காரம் செய்துகொள்ளும் பழக்கம் கொண்டமக்கள் பற்றி அறிவீர்களா? பற்களுக்கான பிரத்தியேக வங்கி எங்கு செயல்படுகிறது? இதுபோன்ற பற்களைப் பற்றிய சுவையான செய்திகளை தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்...

    * மனிதர்களுக்கு வாழ்நாளில் 2 முறை மட்டுமே பற்கள் வளர்கிறது. முதலில் வளரும் பற்கள் விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை. இவை பால் பற்கள் அல்லது பாலர் பற்கள் எனப்படுகின்றன. அப்போது 20 பற்கள் மட்டுமே காணப்படும். அவை விழுந்த பின்பு இரண்டாம் முறை பற்கள் முளைக்கின்றன. அப்போது 32 பற்கள் வரை வளரும்.

    * பற்களின் வளர்ச்சி கருவிலேயே ஆரம்பமாகிவிடுகிறது. ஆனால் குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குப் பிறகுதான் பற்களின் வளர்ச்சி நிறைவடைகிறது. அரிதாக சில குழந்தைகள் பற்களுடன் பிறப்பது உண்டு.

    * பற்களின் எனாமல்தான் உடலின் கடினமான பொருளாகும்.

    * பற்களில் 300 வகையான பாக்டீரியா இனங்கள் வளர்ச்சி அடைகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பற்களை சேதப்படுத்தும் திறன் கொண்டவை.

    * ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சுமார் 40 நாட்களை பல் துலக்குவதற்காக பயன்படுத்துகிறான் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

    * வெளியே தெரிவது பற்களின் மூன்றில் ஒரு பகுதிதான். தாடையில், ஈறுகளினுள் 2 பங்கு பற்கள் மறைந்த நிலையில் உள்ளன.

    * மாயன் இன மக்கள் பழங்காலத்திலேயே பற்களில் துளையிட்டு அதில் செயற்கை வண்ணக் கற்களை பதித்து அலங்காரம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

    * நீரிழிவு, இதய பாதிப்புகள், எலும்புருக்கி போன்றவை பற்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

    * கைரேகைகளைப் போலவே பற்களும் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மையுடன் இருக்கும்.

    * வெட்டும் பற்கள், கோரைப் பற்கள், முன் கடைவாய்ப்பல், கடைவாய்ப்பல் என பற்கள் 4 வகைப்படும். வெட்டும் பற்கள் 8, கோரைப்பற்கள் 4, முன் கடைவாய் பற்கள் 8, கடைவாய்ப்பற்கள் 12 என்ற எண்ணிக்கையில் இருக்கும். சிலருக்கு கடைவாய் பற்களின் எண்ணிக்கை வேறுபடும்.

    * பல் துலக்குவது 40 சதவீத சுத்தத்தையே தருகிறது. பற்களை பஞ்சு கொண்டு துடைப்பது, கொப்பளிப்பது 60 சதவீத சுத்தத்திற்கு துணை செய்யும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    * சீனர்கள்தான் நவீன டூத்பிரஷை உருவாக்கியவர்கள் என்று கருதப்படுகிறது. அவர்கள் மூங்கில் கைப்பிடியும், முடிகள், நார்கள் கொண்ட பிரஷ்களை பயன்படுத்தி பல்துலக்கி உள்ளனர்.

    * இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் ஆலமரம் மற்றும் வேப்பமர குச்சிகளை பல்துலக்க பயன்படுத்துகிறார்கள். அதில் கிருமி எதிர்பொருட்கள் இருப்பதால் அவை டூத்பிரஸ் களைப்போல சிறந்தவை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    * கழிவறையில் இருந்து 6 அடி தூரத்திற்கு அப்பால் “டூத்பிரஷ்”களை வைத்திருப்பதே அவற்றில் கிருமிகள் தொற்றாமல் பாதுகாக்கும். பிரஷில் ஈரம் இல்லாமல் இருப்பதும் கிருமித் தொற்றை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும். பிரஷிற்கு மூடி பயன்படுத்தினால் கிருமித் தொற்றை பெருமளவு தடுக்கலாம்.

    * பழமை எகிப்தியர்கள் 5 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே பற்பசை களை பயன்படுத்தியுள் ளனர். அவர்கள், ஒருவகை கற் தூளையும், பழரசத்தையும் கலந்து பற்பசைபோல பயன்படுத்தி உள்ளனர்.

    * சீன ஆராய்ச்சியாளர்கள், எலியின் சிறுநீர் ஸ்டெம்செல்களைக் கொண்டு செயற்கை பல் எனாமலை உருவாக்கி சாதனை செய்துள்ளனர்.

    * நெதர்லாந்தில் குழந்தைகளுக்கான பால்பற்களை பராமரிக்கும் பல் வங்கி உள்ளது. இங்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பற்கள் சேமிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை பரிசோதித்தபின்பு அவர்களுக்கு பொருத்தமான பற்களை பொருத்த அனுமதிக்கிறார்கள்.



    * பல் விழுந்து முளைக்காதவர்கள், செயற்கையாக பற்கள் பொருத்தி அழகுபடுத்திக் கொள்வது வழக்கமாக உள்ளது. மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த வழக்கம் அதிகமாக இருக்கிறது. வயதானவர்கள் செயற்கை பல்கள் அணிவதும் உலகம் முழுவதும் பரவலாக உள்ளது.

    * இந்தியாவைச் சேர்ந்த ஆசிக் கவாய் என்ற 17 வயது இளைஞருக்கு தாடையில் கட்டி வளர்ந்து கொண்டே இருந்தது. அவர் ஆபரேஷன் செய்து கொண்டபோது அந்த கட்டிக்குள், 232 பற்கள் வளர்ந்தது கண்டுபிடித்து நீக்கப்பட்டது.

    * வாயில் உள்ள உமிழ்நீர் பற்களை பாக்டீரியா கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.

    * உலகில் அதிகமானவர்களை பாதிக்கும் வியாதி பல்வலி என்று அறியப்பட்டுள்ளது.

    * லுசி பீமான் ஹோப்ஸ் உலகின் முதல் பெண் பல் மருத்துவர் ஆவார். இவர் 1866-ல் பல் மருத்துவ சான்றிதழ் பெற்றார்.

    * 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல் மருத்துவர்கள் எகிப்தில் இருந்துள்ளனர். ஹெசி ரே என்பது வரலாற்றில் அறியப்பட்ட பழமையான எகிப்திய பல்மருத்துவரின் பெயராகும்.

    * பல்வலியை குறிக்கும் அறிவியல் சொல் ஒடான்டால்ஜியா.

    * வலது கை பழக்கம் கொண்டவர்கள் தங்கள் உணவை வலது பக்கம் வைத்து மெல்லுவதும், இடது கை பழக்கம் உள்ளவர்கள், உணவை இடதுபக்கமாக வைத்து மெல்லுவதும் வழக்கமாகும். நீங்கள் அதிகமாக எப்படி மெல்லுகிறீர்கள் என்பதை ஒரு நிமிடம் கவனித்துப் பாருங்களேன்.

    * உலகில் அதிகமானவர்களால் நீல நிற பிரஷ் பயன்படுத்தப் படுகிறது.

    * காபி, டீ, பழரசங்கள், குளிர் பானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் பற்களில் கறை படிய முக்கிய காரணமாகும். பானங்களைப் பருக, உறிஞ்சுகுழாய் (ஸ்டிரா) பயன்படுத்துவதும், புகையிலைப் பொருட்களை தவிர்ப்பதும் பற்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    * இனிப்பு பொருட்கள், மற்றும் உணவுத் துணுக்குகள் பற்களில் தங்கும்போது கிருமிகள் பெருகி பற்களுக்கு பாதிப்பை உருவாக்கும். காலையும், இரவும் பல் துலக்கி கொப்பளிப்பது பற்களை பாதுகாக்கும் சிறந்த வழி யாகும். முத்துப்போல் பற்களை பராமரிப்போம், பளிச் புன்னகையால் பார்ப்பவர்களை கவர்வோம்! 
    Next Story
    ×