search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா?
    X

    கோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா?

    அசைவமும் நல்ல உணவுதான். என்றாலும், `கோடைகாலத்தில் அசைவம் சாப்பிடலாமா?’ என்று கேட்டால், `வேண்டாம்’ என்பதுதான் நல்ல பதிலாக இருக்கும்.
    பருவநிலைக்கு ஏற்ற உணவுகளைச் சாப்பிட்டுவந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. ஆனால் நம்மில் யாருமே அதைப் பின்பற்றுவதில்லை. குறிப்பாக அசைவ உணவுகளை கோடைகாலத்தில் தவிர்ப்பதே நல்லது.

    பருவநிலைக்குத் தகுந்த உணவுகளை உண்ண வேண்டும். எந்தெந்தக் காலச்சூழலில் என்னென்ன உணவைச் சாப்பிடலாம் என்று வகைப்படுத்தியிருந்தார்கள் நம் முன்னோர். ஆனால், இன்றைக்கு நாம் நம் பாரம்பர்யத்தை மறந்துவிட்டோம்; புதிது புதிதாக ஏதேதோ உணவுகளைச் சமைத்து, உண்டு மகிழ்கிறோம். அதன் விளைவாகத்தான் புதுப் புது நோய்களும் வரிசைகட்டி நிற்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, மரபார்ந்த பழக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு ஞாயிற்றுக்கிழமை என்றால் அசைவம் என்பதை மட்டும் கட்டாயமாக்கிவிட்டோம். அசைவமும் நல்ல உணவுதான். என்றாலும், `கோடைகாலத்தில் அசைவம் சாப்பிடலாமா?’ என்று கேட்டால், `வேண்டாம்’ என்பதுதான் நல்ல பதிலாக இருக்கும்.

    அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் டிரைகிளைசரைடுகளும் (Triglycerides) `எல்.டி.எல்’ எனப்படும் கெட்டக் கொழுப்பின் அளவும் அதிகரித்து இதயநோய் வருவதற்கான சூழலை ஏற்படுத்தும். கொழுப்பு நிறைந்த உணவுகள், குடல் இயக்கத்தை மந்தப்படுத்தும் வாய்ப்பும் உண்டு.

    அசைவம் என்றாலே நம்மில் பலரும் முன்னிறுத்துவது பிராய்லர் கோழிகளைத்தான். ஹார்மோன் ஊசி மற்றும் தீவனங்களைப்போட்டு குறுகியகாலத்தில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை கோடைகாலத்தில் மட்டுமல்ல...  எந்தக் காலத்திலும் சாப்பிடக் கூடாது. நாட்டுக்கோழி சாப்பிடலாம். ஆனால், அதையும் கோடையில் தவிர்ப்பதே சிறந்தது. கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும்; வெப்பத்தில் நம் உடல் தகித்துக்கொண்டிருக்க, அந்த நேரத்தில் சூடு நிறைந்த கோழிக்கறியைச் சாப்பிட்டால் செரிமானமாவதில் சிக்கல் ஏற்படும். வயிற்றுவலி, கழிச்சல், மூலம், வேறு சில வயிற்று உபாதைகளும் ஏற்படும்.



    பொதுவாகவே, `கோழிக்கறி (சிக்கன்) சாப்பிடுவதால் வாத, பித்த, கப நாடி வகைகளில் பித்த நாடி மேலோங்கும்’ என்று சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நாடி விஞ்ஞானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. `கோழிக்கறி உடலில் சூட்டை உண்டாக்கும் குணமுடையது. அதற்கு பதிலாக குளிர்ச்சித் தன்மையுள்ள ஆட்டுக்கறியைச் சாப்பிடலாம்’ என்று சொன்னால் அதுவும் தவறானதே. ஏனென்றால் வெயில் காலத்தில் ஏற்படும் செரிமானக் கோளாறால் மலச்சிக்கலும் வயிற்று உபாதைகளும் ஏற்படும். அசைவம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று விரும்புபவர்கள் மீன் குழம்புவைத்து, குறைந்த அளவில் சாப்பிடலாம்.

    அதற்காக மீன் மசாலா, பொரித்த மீனெல்லாம் சாப்பிடக் கூடாது. கோடை காலத்தில் மறந்தும்கூட சேர்க்கக் கூடாதது நண்டு. அது உடலில் எரிச்சலை ஏற்படுத்தும்; அலர்ஜி உண்டாகவும் அதிக வாய்ப்புண்டு. ஃபாஸ்ட்ஃபுட், பீட்சா, பர்கர், சிப்ஸ், சிக்கன் ஃப்ரை, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளையும் வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது.

    கோடை காலத்தில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். ஆகவே நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதுடன் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில்  மசாலா உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிகப் புரதம், கொழுப்புச் சத்து நிறைந்த மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, சிக்கன் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மட்டன், சிக்கன் போன்றவை செரிமானக்கோளாறை ஏற்படுத்தும்; சரும நோய்களை உண்டாக்கும். கை கால் மற்றும் முகத்தில் வியர்க்குரு, தேமல், கட்டிகள், அம்மை போன்ற நோய்கள் வரவும் அசைவ உணவுகள் காரணமாக வாய்ப்புண்டு.

    நண்டு, இறால் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவை வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, நீர்ச்சத்துக் குறைபாட்டை உண்டாக்கலாம். இதேபோல் தந்தூரி வகை உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகளும் வேண்டாம். அசைவ உணவுகள் சாப்பிட வேண்டும் என்றால், நெத்திலி போன்ற மீன்களைச் சாப்பிடலாம். முட்டை சாப்பிடலாம், அதையும் அளவாக சாப்பிட வேண்டும்.
    Next Story
    ×