search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உணவு பழக்கமும்... மனநலமும்...
    X

    உணவு பழக்கமும்... மனநலமும்...

    என்னதான் உடல்நலம் நன்றாக இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும், மனநலம் நன்றாக இருந்தால்தான் மகிழ்வுடன் செயல்படமுடியும்.
    உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் நாம் மனநலத்துடன் இருக்க முடியும். நாம் இயல்பான மனநிலையை பெற சமச்சீரான உணவுமுறையும், சரியான நேரத்தில் உணவை உட்கொள்வதும் அவசியம். என்னதான் உடல்நலம் நன்றாக இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும், மனநலம் நன்றாக இருந்தால்தான் மகிழ்வுடன் செயல்படமுடியும். உணவு வகைகளில் மனஅழுத்தத்தை போக்கும் உணவுகளும் உள்ளன.

    சிவப்பு அரிசியில் உள்ள ரைபோப்பிளேவின் என்ற விட்டமின் ‘பி’, மூளை செல்களின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இது நம் மனம் அமைதியடையவும், கற்கும் திறன், ஞாபக சக்தி மேம்படவும் உதவுகிறது. வாழைப்பழம் மனஅழுத்தத்திற்கு நல்லது. கருப்பட்டியில் விட்டமின் ‘பி 6’ மற்றும் ‘பி 12’ இருக்கிறது. எனவே இதை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிப்பதால் மனச்சோர்வு நீங்கி உற்சாகத்துடன் இருக்க முடியும்.

    இதே போல மனப்பதற்றத்தை கட்டுப்படுத்தும் குணம் தயிருக்கு உண்டு. இதை சாப்பிட்டால் நினைவு திறனும் மேம்படும். ஆவியில் வேகவைத்த உணவுகளே மனதின் இயல்புத் தன்மைக்கு சிறந்தது. கவலையுடன் விருந்து உண்பதை விட, ஒரு கவள உணவானாலும் மனமகிழ்வுடன் உண்பதே சிறந்தது.

    உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் குழந்தைகளுக்கு கவனச்சிதைவு நோயை ஏற்படுத்தக்கூடியவை. ஆகையால் அவற்றை தவிர்க்கவும். அளவாக இனிப்பு சாப்பிடுவது மனதுக்கு இதம் தரும். நம் தாத்தா, பாட்டியின் தெம்பும், மனவலிமையும் நம் பெற்றோருக்கு இல்லை. நம் பெற்றோர்களிடம் இருப்பது நமக்கு இல்லை. நம்மிடம் இருக்கும் மனநலமும், தெம்பும் நம் குழந்தைகளுக்கு இல்லை. இதற்கு காரணம் மாறிவரும் உணவு முறைகளே.

    மனதை நலமுடன் வைத்துக்கொள்ளவும், உடலைப் பக்குவப்படுத்தவும்தான் எல்லா மதங்களும் உண்ணாவிரதத்தைப் பரிந்துரைக்கின்றன. எப்படிப்பட்ட முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். மற்றபடி அனைத்து மதங்களும் பகிர்ந்து உண்ணும் முறையை வலியுறுத்துகின்றன.

    ஆக, உணவுக்கும் மனநலத்துக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உணவால் ஒருவனை ஞானியாக்கவும் முடியும். முரடன் ஆக்கவும் முடியும். எனவே, உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

    வந்தனா, மனநல ஆலோசகர்
    Next Story
    ×