search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புறஊதா கதிர்களால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு
    X

    புறஊதா கதிர்களால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு

    நீண்டநேரமாக டிவி பார்ப்பது, கம்ப்யூட்டர் அல்லது செல்போன்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது போன்றவையும் கண் பிரச்சினை ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
    சூரியன் மட்டுமல்ல, மெர்க்குரி ஆவி விளக்குகள், ஹாலோஜன் விளக்குகள், உயர்தீவிர வெளியீடு விளக்குகள், ப்ளோரசன்ட் விளக்குகள், திரையரங்கில் புரொஜக்டர்கள், தேடல் விளக்குகள் மற்றும் குறிப்பிட்ட வகைகளிலான லேசர்கள் ஆகியவையும் புறஊதா கதிர்களை வெளியிடுகின்றன. இதுபோன்ற விளக்கு வெளிச்சத்தில் நீண்ட நேரம் இருப்பது கண்பாதிப்பை உண்டாக்கும்.

    விளக்குகளால் மட்டுமல்ல இன்னும் பிற ஒளியினாலும் மனிதனின் கண்கள் பாதிக்கப்படுகின்றன. இதில் முக்கிய பங்கு புறஊதா கதிர்களுக்கு உண்டு. நமது உடலை பாதிக்கிற புறஊதா கதிர்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால் அவை கண்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

    தற்போது, கோடை காலம் தொடங்கியிருக்கின்ற நிலையில், புறஊதா கதிர்வீச்சின் அளவு குறியீடு தொடர்ந்து நிலையாக அதிகரித்து வருகிறது. இது ஆபத்தை விளைவிக்க கூடும். குறிப்பாக, பகல் வேளையில் அளவுக்கு அதிகமாக புறஊதா கதிர்கள் உடலில் படும்படி வெளியே சுற்றித்திரிந்தால், கடுமையான கண் பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

    இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையின்படி, கடந்த 2 வாரங்களில் கதிர்வீச்சு அளவானது, புறஊதா கதிர் குறியீட்டு எண்ணில் 11 என்ற உயர் ஆபத்து வகையினத்தின் கீழ் இருந்திருப்பது தெரிய வருகிறது. பொதுவாக, புற ஊதாக்கதிர்கள் நமது உடலில் படுவது குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கும்வரை, நலம் பயப்பதாக இருக்கிறது. அளவுக்கு அதிகமான புறஊதா கதிர்வீச்சுக்கு ஆட்படுவது, கண் பிரச்சினையை விளைவிக்கக்கூடும்.

    குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 3 மணியிலிருந்து 4 மணி வரையும் புறஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அது ஏற்படுத்தும் பாதிப்பானது மிக மிகத் தீவிரமாக இருக்கும். உலக சுகாதார நிறுவன தகவல்படி கண்புரை நோயுள்ள 12 முதல் 15 மில்லியன் நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண்பார்வையை இழக்கின்றனர். இதில் 20 சதவீதம் பேர் வரை சூரிய ஒளியால் ஏற்படும் புறஊதா கதிர்வீச்சுக்கு ஆட்படுவதால் இறக்கிறார்கள்.

    இந்த புறஊதா கதிர்களால் கண்புரை நோய், இமை முனைத்திசு வளர்ச்சி, விழிப்புள்ளி சிதைவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து புறஊதா கதிர்வீச்சுக்கு ஆளானால், ஒரு அல்லது இரு கண்களிலும் பார்வைத்திறன் இழப்புக்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். குறைந்த நேரத்தில் அதிக தீவிரமான புறஊதா கதிர்கள் கண்களை தாக்கினால் போட்டோகேரடிடிஸ் எனப்படும் விழிப்பார்வை அழற்சிக்கு வழிவகுக்கலாம்.

    எனவே, புறஊதா கதிர்வீச்சில் இருந்து கண்களை பாதுகாப்பது அவசியமாகும். புறஊதா கதிரிலிருந்து பாதுகாக்கும் திறனற்ற கருப்பு கண்ணாடிகள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. அதிகளவில் புறஊதா கதிர்கள் கண்களுக்குள் நுழையவும் அதிக சேதத்தை ஏற்படுத்தவும் இந்த வகை கண்ணாடிகள் அனுமதிக்கும். எனவே, 99 சதவீதத்துக்கும் அதிகமான அளவு புறஊதா கதிர்வீச்சை தடுக்கிற சன்கிளாஸ்களை தேர்வு செய்து அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

    அதைப்போல சூரியனை நேரடியாக உற்றுப்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மேகமூட்டம் இருக்கும் பகல் நேரத்தில்கூட சூரிய கதிர்களால் கண்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். எனவே, வெளியே செல்லும்போது பாதுகாப்பான கண்ணாடிகளை அணிவது நல்லது. குறிப்பாக, இந்தியா போன்ற வெயில் அதிகமுள்ள நாடுகளில் இது மிகவும் அத்தியாவசியமாகும்.



    நீண்டநேரமாக டிவி பார்ப்பது, கம்ப்யூட்டர் அல்லது செல்போன்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது போன்றவையும் கண் பிரச்சினை ஏற்படுவதற்கு வழிவகுக்கும். ஸ்மார்ட்போன்களிலில் இருந்து வெளிப்படுகிற நீலநிற கதிர்கள், கண்களில் நீண்டகால பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். அதே போல, தொடர்ந்து நீண்ட நேரம் இடைவெளியின்றி கணினித்திரைகளில் வேலை செய்வது, ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்றழைக்கப்படும் பாதிப்பை உண்டாக்கும்.

    கண்களை பாதுகாக்க மிக அதிக பிரகாசமான வெளிச்சத்தில் அல்லது மிக மங்கலான வெளிச்சத்தில் கம்ப்யூட்டர்களில் பணியாற்றுவது, செல்போன்கள் பயன்படுத்துவது மற்றும் டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இவை கண்கள் மீது அளவுக்கதிகமான அழுத்தத்தை தூண்டுகின்றன. பயன்பாட்டுக்கு உகந்த வெளிச்சமுள்ள நிலையில் மட்டுமே இச்சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.

    விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு செல்போன்களை குழந்தைகளும், இளவயதினரும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். ஏனெனில் இது அவர்களது பார்வைத்திறனை பாதிக்கக்கூடும். தங்களது செல்போன்களில் அதிக நேரம் செலவிடுகிற குழந்தைகள் மற்றும் இளவயதினர், உலர்ந்த கண்கள் பிரச்சினையின் அதிக அறிகுறிகளை கொண்டிருப்பதை ஒரு புதிய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. எனவே, கம்ப்யூட்டர், செல்போன், டி.வி.யில் நீண்ட நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.

    கணினித்திரையின் மீது ஆன்டிகிளேர் ஸ்கிரீன் பொருத்தப்பட வேண்டும். கணினியில் பணியாற்றும்போது பிரதிபலிப்புக்கு எதிரான பூச்சு கொண்ட கண்ணாடிகளை அணிவது நல்லது. இருட்டான அறையில் அளவுக்கதிகமான வெளிச்சமுள்ள டிஸ்பிளே கண் அழுத்தத்தை ஏற்படுத்தும். இட சூழலுக்கேற்ப கணினி மற்றும் செல்போன் டிஸ்பிளேயின் ஒளி அளவானது, சரியாக அமைக்கப்பட வேண்டும்.

    அடிக்கடி கண்களை சிமிட்டுவது, கண்களில் திரவப்பசை இருக்குமாறு செய்யும் மற்றும் கண் உலர்வை தடுக்கும். மேலும் கண் பயிற்சிக்கான 20-20-20 என்ற விதியை பின்பற்றுவது பலனளிக்கும். இது மிகவும் எளிதானது. 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளை 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 நொடிகள் என்ற காலஅளவுக்கு பார்க்க வேண்டும். இது, கண் தசைகளை தளர்வாக்கி அவற்றுக்கு ஓய்வளிக்கும்.

    மொத்தத்தில், தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்களிலிருந்து முடிந்தவரை நமது கண்களை பாதுகாப்பது பார்வைத்திறன் பிரச்சினைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள உதவும்.

    டாக்டர் திரிவேணி, கண்புரை நோய் அறுவை சிகிச்சை நிபுணர்
    Next Story
    ×