search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாலித்தீன் பைகளுக்கு விடை கொடுப்போம்
    X

    பாலித்தீன் பைகளுக்கு விடை கொடுப்போம்

    பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும் போது வெளியாகும் ‘டையாக்சின்’ வாயுவை சுவாசிப்பதன் மூலம் தோல் நோய், பாலின குறைபாடு, புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
    பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளின் பயன்பாடு ஒரு சில மணித்துளிகள் என்றாலும், அவை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாத அளவுக்கு சாகாவரம் பெற்றவை. கனமான தன்மை உடைய இரும்பை கூட ஜீரணித்துக் கொள்ளும் தன்மை கொண்ட மண்ணுக்கு, மெல்லிய பாலித்தீன் பைகளை செரித்துக் கொள்ளும் தன்மை இல்லை. இதனால் நீர் வளமும், நில வளமும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. ‘பிளாஸ்டிக் கழிவுகள் அணுகுண்டை விட ஆபத்தானது’, ‘பிளாஸ்டிக் டம்ளரில் சூடாக பருகும் தேநீர் 12 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம்’ என்று பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகள் குறித்து எச்சரிக்கை வாசகங்கள் ஒலிக்கின்றன.

    பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும் போது வெளியாகும் ‘டையாக்சின்’ வாயுவை சுவாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு தோல் நோய், பாலின குறைபாடு, புற்றுநோய் போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. விளைநிலங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால், மண் மலட்டு தன்மை அடைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகள் செரிமான கோளாறால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன.



    இந்தியாவில் தனி மனிதன் ஆண்டுக்கு சராசரியாக 50 முதல் 70 கிலோ வரை பாலித்தீன் பைகளை உபயோகப்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஆண்டுக்கு எத்தனை கிலோ பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை சமுதாய பொறுப்புடன், மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக போராடி வந்தாலும், தனக்கு அழிவு இல்லை என்பது போல ‘பிளாஸ்டிக்’ வீறுநடை போடுகிறது.

    நம்முடைய தந்தை துணி பையிலும், தாயார் வயர் கூடைகளிலும் பொருட்கள் வாங்கியது போன்று நாமும் அதனை பயன்படுத்த தொடங்க வேண்டும். திருமணம் உள்பட விசேஷ நிகழ்ச்சிகளில் உணவு பரிமாற்றத்தின் போது பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு விடை கொடுத்து, பழைய முறைப்படி சில்வர் டம்ளர்களை பயன்படுத்த வேண்டும். படிப்படியாக பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளின் பயன்பாட்டை குறைப்போம்.

    -ஈ.ஆர்.பெருமாள்
    Next Story
    ×