search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள்
    X

    இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள்

    உணவுமுறைகளில் வசதிகளுக்குப் பழகிவிட்டதன் விளைவுகளில் ஒன்றுதான் சீட்லெஸ் பழங்கள். விதையில்லா பழங்களின் விபரீதங்களைப் பற்றி யோசிக்காமல் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
    எந்திரத்தனமாகிவிட்ட மனித வாழ்க்கையில் இன்று ஆற அமரச் சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எல்லாவற்றிலும் சொகுசை எதிர்பார்க்கப் பழகிவிட்டார்கள். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பதெல்லாம் இந்த தலைமுறையினருக்குத் தெரியாது, புரியாது. உணவுமுறைகளில்கூட வசதிகளுக்குப் பழகிவிட்டதன் விளைவுகளில் ஒன்றுதான் சீட்லெஸ் பழங்கள்.

    காய்கறிகளையும், பழங்களையும் தோலுடனும், விதைகளுடனும் சாப்பிட்ட காலம் மாறி, இன்று தோல், விதை நீக்கி, வெட்டப்பட்டு அப்படியே சாப்பிட ஏதுவாக விற்பனைக்கு வருவதை அறிந்திருப்போம். வாழைப்பழ சோம்பேறிகளாக மாறிப்போன மக்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டவை தான் விதையில்லாத பழங்கள். திராட்சை முதல் தர்பூசணி வரை பெரும்பாலான பழங்கள் விதைகளின்றி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றின் விலை சற்று அதிகம் என்றாலும் விதைகளைக் கடித்துத் துப்பவேண்டிய அவசியம் இல்லை என்பதால் விபரீதங்களைப் பற்றி யோசிக்காமல் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.

    அடிப்படையிலேயே சீட்லெஸ் பழங்கள், அவற்றிலுள்ள இனிப்புச் சுவைக்காக வணிக நோக்கில் கொண்டு வரப்பட்ட வீரிய ஒட்டு ரகங்கள் ஆகும். தற்போது திராட்சை, பப்பாளி போன்றவை விதையில்லாமல் ஒட்டு ரக விதைகளால் விளைவிக்கப்படுகின்றன. சீட்லெஸ் பழங்களைக் கொண்டு வந்ததற்கான காரணம், அதிக லாபம் ஈட்டவும், அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யவும்தான். ஆனால் இந்த விதை இழப்பு என்கிற சீட்லெஸ் தொழில்நுட்பம் இயற்கையின் சமச்சீர் நிலையைக் குறைக்கிறது. ஒரு கனி எப்படி அமைய வேண்டும் என்பதை இயற்கைதான் தீர்மானிக்கும்.

    இயற்கை தீர்மானிக்கும் ஒரு விஷயத்தை மனிதன் தன்னுடைய தேவைக்காக மாற்றியமைக்கக் கூடாது. இதனால் சமச்சீரற்ற நிலை உருவாகி, நோய்த்தாக்குதல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். காலச்சூழ்நிலையில் மரபணுக்கள் மாற்றம் அடைந்துதான் வந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வாழைப்பழத்தில் பெரிய அளவிலான விதைகள் இருந்தன. இன்றும், கடைகளில் விற்பனை செய்யப்படும் நாட்டு வாழைப்பழங்களில் கடுகு வடிவிலான தோற்றம் கொண்ட விதைகள் காணப்படும். காலத்திற்கு ஏற்ப அந்தத் தாவரம் இயல்பாகவே தனது தன்மையை மாற்றிக்கொண்டு வருகிறது. ஆனால், மனிதன் தனது அவசரத் தேவைகளுக்காக விதையை நீக்கம் செய்வது இயற்கைக்குப் புறம்பானது.
    Next Story
    ×