search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளின் கண்களில் ஏற்படும் பாதிப்புகள்
    X

    சர்க்கரை நோயாளிகளின் கண்களில் ஏற்படும் பாதிப்புகள்

    சர்க்கரை நோயாளிகளுக்கு கண்கள் எப்படி எல்லாம் பாதிக்கும்? அதற்கு என்ன தீர்வு? என்பவைகளை பற்றி விரிவாக காண்போம்!
    கண் அழுத்த நோய் (glaucoma) சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்கிறது. இது எந்தவிதமான அறி குறிகளையும் வெளிப்படுத்தாமல் தாக்கும் என்பதால் இதனை ‘சைலண்ட் கில்லர்’ என்று சொல்வார்கள். நமது கண் பந்து போன்றது. அதில் விழித்திரவம் சுரக்கிறது. அது சீராக சுரந்து, உடலுக்குள் கலக்கவேண்டும். அதிகமாக சுரந்தாலோ, சுரக்கும் திரவம் உடலுக்குள் செல்வது தடைபட்டு தேங்கினாலோ கண் அழுத்தம் ஏற்படும்.

    உடலில் சர்க்கரை நோய் உருவாகி, அது கட்டுக்குள் இல்லாதபோது, விழித்திரவம் வெளியேறும் இடத்தில் ஒருவித புரோட்டீன் படிந்து, வெளியேற விடாமல் தடுத்துவிடுகிறது. இது ‘டைப் -2’ சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்கும். இரு கண்களும் பாதிக்கப்படலாம். பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளை 40 வயதுக்கு மேல் இந்த நோய் தாக்கக்கூடும். முதலில் ஓரப்பார்வை குறையும். பின்பு படிப்படியாக பார்வைத்திறன் இழப்பு தோன்றும்.

    கண் அழுத்த நோய் அதிகரித்தால், கண்களை மூளையோடு தொடர்புபடுத்தும் பார்வை நரம்பும் பாதிக்கும். கண்வலியும் தோன்றும். கண் அழுத்தத்தை நவீன பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, அழுத்தத்தை குறைத்து சீராக்கி, வலியையும் குறைக்கவேண்டும். பார்வை பறிபோகும் அளவுக்கு விட்டுவிட்டால், சிகிச்சையால் பலன் ஏற்படாது.

    சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிப்பது, ‘டயாபெட்டிக் ரெட்டினோபதி’ எனப்படும் விழித்திரை நோய். இதனை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று: புதிய ரத்தக் குழாய்கள் உருவாகும் பாதிப்பு. இரண்டு: கண்ணின் மேக்குலா பகுதியில் தண்ணீர் சேருவதால் உருவாகும் ‘மேக்குலர் இடீமா’ என்ற பாதிப்பு. இவை இரண்டுமே கவனத்துடன் கையாளவேண்டிய நோய்களாகும்.

    புதிய ரத்தக் குழாய்கள் உருவாகும் நோய்க்கு ‘ப்ரோலிபோரட்டிவ் டயாபெட்டிக் ரெட்டினோபதி’ (proliferative diabetic retinopathy) என்று பெயர். சர்க்கரை நோயால் இது உருவாகும். உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது ரத்தக் குழாய்களின் தன்மை மாறி ரத்த ஓட்டத்தில் இடைஞ்சல் ஏற்படும். அப்போது கண் நரம்பு களுக்கு ரத்தத்தின் வழியாக ஆக்சிஜன் கிடைப்பது தடைபடும். இந்த சிக்கலை சரிசெய்ய உடலே புதிய ரத்தக் குழாய்களை உருவாக்கும். திடீரென்று உருவாகும் இந்த அவசர ரத்தக் குழாய் களின் சுவர் பலமின்றி இருக்கும். அதன் வழியாக கண்களை நோக்கி ரத்தம் செல்லும்போது, குழாய் வெடித்து ரத்தம் கண் களுக்குள் பரவிவிடும்.



    நோயாளிக்கு இந்த பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கண்டறிய கண்ணுக்குள் ஆஞ்சியோ செய்து பார்க்கவேண்டும். அதன் மூலம் புதிய ரத்தக்குழாய்கள் உருவாகியிருப்பதை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளலாம். இந்த சிகிச்சையில் விழித்திரை ஒல்லியாக்கப்படும். அதன் மூலம் கண்களுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு குறையும். புதிய ரத்தக்குழாய் களுக்கு அதனால் வேலை குறைந்து அவை செயலிழந்துவிடும். அதன் மூலம் கண் பார்வைத்திறனை பாதுகாத்திடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் பசைத் தன்மை அதிகரிக்கும். அந்த பசைத் தன்மை விழித்திரையை இழுப்பதாலும் கண்களில் பாதிப்பு ஏற்படும். இதனை சரிசெய்ய ‘விட்ரெக்டமி’ (vitrectomy) என்ற அறுவை சிகிச்சையை செய்யவேண்டியதிருக்கும்.

    சர்க்கரை நோய் அதிக காலம் இருந்தால், அது அவ்வப்போது கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருந்தால், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, அதிக கொழுப்பு, கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் காணப்படுதல், உடல் பருமன், ரத்த சோகை, மதுப்பழக்கம் போன்றவை இருந்தால் விழித்திரை பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால் இத்தகைய பாதிப்புகள் உடலில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏன்என்றால் 40 முதல் 55 வயதானவர் களுக்கு கண்பார்வைக் குறைவு ஏற்பட டயாபெட்டிக் ரெட்டினோபதி காரணமாக இருக்கிறது.

    மேக்குலர் இடீமா எனப்படும் நீர் சேரும் நோய் பற்றி இனி பார்ப்போம். நமது ரத்தக்குழாய் சுவர்களில் நிறைய ‘செல்’கள் இருக்கின்றன. அவை ஒன்றோடு ஒன்றாக ஒருங்கிணைந்து பலமாக இருக்கும். அதனால் ரத்தக்குழாய்களில் ரத்தத்தோடு செல்லும் தண்ணீர் செல்களை தாண்டி வெளியே வராது. சர்க்கரை நோய் ஒருவரை தாக்கும்போது செல்களை இணைக்கும் சந்திப்புகள் பலவீனமாகி, தண்ணீர் வெளியே வந்து செல்களில் படியத் தொடங்கும். கண்களுக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் இப்படி தண்ணீர் வெளியேறினால் கண்பார்வை பாதிப்பு ஏற்படும். இதுதான், மேக்குலர் இடீமா! இப்போது கண்சிகிச்சை துறையில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கண்களை தொடாமலே பரிசோதனைகளை செய்யலாம். முதலிலே கண்டறிந்தால், பார்வைத்திறனை மேம்படுத்திடவும் செய்திடலாம்.

    சர்க்கரை நோய் இந்தியர்களை தாக்குவது பெருமளவு அதிகரித்துக்கொண்டிருப்பதால் பெண்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும். வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடற் பயிற்சி போன்றவைகளில் அதிக அக்கறை கொள்ளவேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை மூலம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம்!

    கட்டுரை: டாக்டர் வசுமதி வேதாந்தம், MS, DNB, FRCS, FIAMS

    (விழித்திரை அறுவைசிகிச்சை நிபுணர்) சென்னை.
    Next Story
    ×