search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இடுப்பு, தோள்கள், கழுத்துக்கு வலிமை தரும் உஷ்ட்ராசனம்
    X

    இடுப்பு, தோள்கள், கழுத்துக்கு வலிமை தரும் உஷ்ட்ராசனம்

    இந்த ஆசனம் செய்து வந்தால் கழுத்து, தோள்கள், முதுகெலும்பு, நுரையீரல், சுவாசக்குழாய், தொடைகள், இடுப்பு கைகள் வலுப்பெறும். இடுப்பு வலி, கழுத்து வலி, தொடைகள், மார்பு அழகான வடிவம் பெறும்.
    பெயர் விளக்கம்: உஷ்டிர என்றால் ஒட்டகம் என்று பொருள். இந்த ஆசனம் ஒட்டகம் போன்ற வடிவில் இருப்பதால் உஷ்டிராசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: வஜ்ராசனத்தில் உட்காரவும், பிருஷ்டத்தை தூக்கி முழங்கால்களில் நிற்கவும். கால்கள் இரண்டையும் சிறிதளவு அகற்றி வைக்கவும், முழங்காலிலிருந்து கால்களின் விரல்கள் வரைக்கும் உள்ள உடல் பகுதி தரைவிரிப்பில் நன்றாக படிந்திருக்கட்டும். முழங்காலுக்கு மேலிருந்து தலைவரைக்கும் உள்ள உடல் பகுதி நேராக இருக்கட்டும். இந்த நிலையில் மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.

    மூச்சை வெளியேவிட்டு உடலை பின்னோக்கி வளைத்து வலது உள்ளங்கையை வலது கால் பாதத்தின் மீதும், இடது உள்ளங்கையை இடது கால் பாதத்தின் மீதும் ஊன்றி வைத்து தலையையும் கழுத்தையும் முடிந்த அளவு பின்புறமாக வளைக்கவும். இடுப்பை முன்னோக்கி சிறிது தள்ளவும். தொடைகள் இரண்டும் நேராக இருக்கட்டும். இந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 1 முதல் 2 நிமிடம் நிலைத்திருக்கவும்.

    பிறகு மூச்சை வெளியே விட்டு கைகளை ஒவ்வொன்றாக உள்ளங்காலில் இருந்து எடுத்து அதிலிருந்து வஜ்ராசனத்திற்கு வரவும். கடைசியில் கால்கள் இரண்டையும் நீட்டி வைத்து ஓய்வு பெறவும். இந்த ஆசனத்தை 23 முறை மேற்கண்ட முறைப்படி பயிற்சி செய்யலாம்.



    கவனம் செலுத்த வேண்டிய இடம்: வயிறு, தொண்டை, கழுத்து, முதுகு அல்லது மூச்சின் மீதும் சுவாதிஷ்டானம் அல்லது விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு: இந்த ஆசனப் பயிற்சியில் உள்ளங்கைகளை, உள்ளங்கால்களின் மேல் வைக்க முடியவில்லை என்றால் கைவிரல்களினால் கணுக்கால் பகுதியை பிடித்துக் கொண்டு செய்யலாம். சிலருக்கு இந்த ஆசனத்தை செய்யும்போது முழங்கால் முட்டியில் வலி ஏற்படுவதுண்டு. அத்தகையவர்கள் முழங்காலின் கீழ் ஒரு துண்டை நன்றாக மடித்து வைத்துக் கொண்டு செய்யலாம்.

    தடைக்குறிப்பு: தைராய்டு, வீக்கம், இடுப்பு வலி, அதிக முதுகு வலி உள்ளவர்கள் யோக நிபுணரின் அறிவுரைப்படி இந்த ஆசனத்தை செய்வது நல்லது.

    பயன்கள்: கழுத்து, தோள்கள், முதுகெலும்பு, நுரையீரல், சுவாசக்குழாய், தொடைகள், இடுப்பு கைகள் வலுப்பெறும். இளமை மேலிடும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, இடுப்பு வலி, கழுத்து வலி, மலச்சிக்கல் நீங்கும், முக அழகு அதிகரிக்கும், கழுத்து, இடுப்பு, தொடைகள், மார்பு அழகான வடிவம் பெறும். தைராய்டு மற்றும் தைமல் சுரப்பிகள் நன்கு செயல்படும். தொண்டை சதை வளர்ச்சிக்கும், நுரையீரல் கோளாறுகளுக்கும் பயனுள்ளதாகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    Next Story
    ×